Wednesday, February 12

அமிர்தலிங்கம், அப்பாப்பிள்ளை

0

யாழ்ப்பாணம் சுழிபுரம் பண்ணாகத்தைச் சேர்ந்த சின்னட்டி அப்பாப்பிள்ளைக்கும் வள்ளியம்மைக்கும் 1927.08.27 ஆம் நாள் பிறந்தவர். பண்ணாகம் மெய்கண்டான் மகா வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியையும் (1931-1936), சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் (1936-1946) உயர்கல்வியையும் கற்றார். பின்னர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டக் கல்வியை முடித்த அமிர்தலிங்கம் கொழும்பு சட்டக் கல்லூரியில் சேர்ந்து 1951 இல் நியாயவாதியாக பட்டம் பெற்று வெளியேறினார். சட்டத்துறையைக் கைவிட்டு தந்தை செல்வாவின் இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இணைந்து கொண்டார். 1952 ஆம் ஆண்டின் பொதுத் தேர்தலின் போது வட்டுக்கோட்டைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 1956 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் மீண்டும் வட்டுக்கோட்டைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று இலங்கை பாராளுமன்றம் சென்றார். இலங்கையில் தமிழர் உரிமைகளுக்காகக் கட்சி நடத்திய போராட்டங்களில் முன்னணியில் நின்று கலந்து கொண்டதன் மூலம் மக்களிடையே புகழ்பெற்றார். தமிழில் சிறந்த பேச்சாளராகவும் காணப்பட்டார். 1972 ஆம் ஆண்டு இலங்கைத் தமிழ்க் கட்சிகள் இணைந்து உருவான தமிழர் கூட்டணி என்னும் அரசியல் அமைப்பிலும் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணி எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்ட அதே அமைப்பிலும் முன்னணியில் இருந்து உழைத்தார். தந்தை செல்வநாயகத்தின் மறைவுக்குப் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியை வழிநடத்தும் பொறுப்பை இவர் ஏற்றார். 1977 ஆண்டின் பொதுத்தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி நாடாளுமன்றத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக உருவானதைத் தொடர்ந்து, இலங்கையின் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவியேற்றார். 1989.07.13 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!