ஊர்காவற்றுறை கரம்பொன் கிராமத்தில் இராமநாதன் அன்னபூரணி தம்பதியினருக்கு 1874.09.08 ஆம் நாள் பிறந்தவர். வைத்திலிங்கம் என்ற இயற்பெரைக் கொண்ட இவரை தம்பையா எனவும் அன்பாக அழைத்தனர். முத்துக்குமாரு சட்டம்பியாரின் திண்ணைப்பள்ளியில் படித்த இவர் குடும்ப பொருளாதாரக் குறைவின் காரணமாக விவசாயத்தையும் கீரிமலையில் அமைந்திருந்த யாத்திரிகர் விடுதியில் கணக்காளராகவும் பணியாற்றினார். இங்கு பணியாற்றிய காலத்தில் கனகரத்தினம் சுவாமிகளுடைய அருளாசியினைப் பெற்றார்.கனகரத்தினம் சுவாமிகள் தனது உத்தம சீடரான தம்பையா சுவாமிகளுடன் இந்திய யாத்திரை சென்றார். திருப்பெருந்துறையில் மாணிக்கசுவாமிகள் குருவுபதேசமும் வழங்கப்பட்டு மகாதேவ சுவாமிகள் என்னும் ஞானப்பெயரும் சூட்டப்பட்டது. கரம்பொன் கிராமத்தில் பிடியரிசித் திட்டத்தின் கீழ் சண்முக வித்தியாலயம் என்ற பாடசாலையை நிறுவினார்.தமது குருவிற்காக சிவகுருநாதபீடம் என்னும் ஆச்சிரம மொன்றினை நிறுவி பீடத்தின் முதலாவது பரமாச்சாரிய குருவாக கனகரத்தினம் சுவாமிகளை அமரச்செய்து மகிழ்ந்தார். மகாதேவ சுவாமிகள் வடிவேல் சுவாமிகள், கைதடி சச்சிதானந்த சுவாமிகள், கோண்டாவில் கந்தையா சுவாமிகள் போன்றோருடைய ஞானகுருவுமாவார். இவரது பெயரில் கிளிநொச்சியில் மகாதேவ ஆச்சிரமம் அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. செலவுகளை சிக்கனமாகச் செய்து தென்னந் தோட்ட மொன்றினை அமைத்து சிவகுருநாதபீடத்தின் தொடர்ச்சியான செயற்பாட்டிற்கு களம் அமைத்து 68 வருடங்கள் வாழ்ந்து பிரமச்சாரியம் பேணி இறைபணியாற்றியவர். வறிய குடும்பத்தில் பிறந்த சுவாமிகள் பள்ளிப்படிப்பிலும் கூடுதலான அறிவை கேள்வி ஞானத்தாலும் பெற்றவர். 1942.10.30 ஆம் நாள் சமாதி நிலையடைந்தார்.