பேராயர் டேவிற் ஜெயரட்ணம் அம்பலவாணர் அவர்கள் தென்னிந்திய திருச்சபையினுடைய யாழ்ப் பாணப் பேராயத்தின் இரண்டாவது பேராயராக 22 வருடங்கள் பணியாற்றியவர். 1928.02.28 ஆம் நாள் புங்குடுதீவைச் சேர்ந்த ஜே.பி.அம்பலவாணர் அவர்கட்கும் திருமதி அனா அன்னம்மா அம்பலவாணர் அவர்கட்கும் மகனாக இந்தியாவின் எல்லூர் (Ellore) என்னுமிடத்தில் பிறந்தவர். 1932 ஆம் ஆண்டு இவருடைய பெற்றோர் புங்குடுதீவிற்குத் திரும்பியபோது பேராயர் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியிலே தனது கல்வியை ஆரம்பித்தார். 1942 இல் இவருடைய தந்தையார் பேராயர் சபாபதி குலேந்திரனுக்கு உதவிக்குருவாக நியமிக்கப்பட்டதால் இவர்கள் குடும்பமாக வட்டுக்கோட்டைக்குச் சென்று அங்கு வாழத் தொடங்கினார்கள். தனது பதினைந்தாவது வயதிலே அதாவது 1943 இல் தனது தந்தையாரை இழந்தார்.1942 ஆம் ஆண்டிலிருந்து யாழ்ப்பாணக் கல்லூரியில் கல்வியைத் தொடர்ந்த இவர் இறைபணிக்கென்று தன்னை ஒப்புக்கொடுத்து 1951 ஆம் ஆண்டு இந்தியாவின் செரம்பூர் இறையியல் கல்லூரியிலே தனது இறையியல் படிப்பை ஆரம்பித்தார்.4 வருட கல்வியை நிறைவுசெய்து இலங்கை திரும்பிய இவர் 1955 ஆம் ஆண்டு அராலித் திருச்சபையின் குருவாக நியமிக்கப்பட்டார். 1957 ஆகஸ்ட் 17 இல் வைத்திய கலாநிதி சந்திராணி கணபதிப்பிள்ளை அவர்களை வாழ்க்கைத் துணைவியாக்கிக் கொண்டார். 1957 இல் உதவிக்குருவாகவும் 1960 இல் குருவாகவும் பேராயர் சபாபதி குலேந்திரன் அவர்களால் அபிஷேகம் பண்ணப்பட்டார். இவருடைய இரண்டு ஆண்பிள்ளைகளில் மூத்த மகன் வைத்திய கலாநிதி தயாளன் அம்பலவாணர் மருத்துவராகப் பணியாற்றுகின்றார். மற்றவர் கலாநிதி தர்சன் அம்பலவாணர் அல்லல்படும் மக்களின் துயர்துடைப்புப் பணிகளுக்குப் பொறுப்பாக இலங்கை அமெரிக்கன் மிஷன் திருச்சபையில் சேவை செய்கின்றார். பேராயரவர்கள் தன்னுடைய மேற்படிப்பை லண்டனில் உள்ள Kings College இல் பெற்று எம்.ஏ.பட்டதாரியானார். பின்னர் மானிப்பாய், வட்டுக்கோட்டை, உடுப்பிட்டி ஆகிய இடங்களில் இறைபணியையும் சமூகநலப் பணிகளையும் சிறப்பாகச் செய்தார். இவர் உடுப்பிட்டியில் பணிசெய்து வருகையிலே யாழ். பேராயத்தின் இரண்டாவது பேராயராக 1971 ஆம் ஆண்டு அபிN~கம் பண்ணப்பட்டார். மிகுந்த பக்தியும், தீர்க்கதரிசனப் பார்வையும், கடின உழைப்பும் கொண்ட பேராயருடைய தரிசனப் பார்வையால் யாழ்ப்பாணக் குடாநாட்டிற்குள் நடைபெற்று வந்த யாழ். பேராயத்தின் பணிகள் வன்னிப் பெருநிலப்பரப்பிலும், கிழக்கு மாகாணத்திலும் ஊன்றக் கட்டப்பட்டன. வடக்கு கிழக்கு மாகாணங்கள் மிக அதிகளவு துன்பங்களை அனுபவித்த வேளையில் மக்களோடு மக்களாக வாழ்ந்து மக்களின் துயர்துடைப்புப் பணியிலே பெருமளவு தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். மிகத் துன்பமான காலத்தில் திருச்சபையினதும் மக்களினதும் தலைமைப்பதவியைத் தாங்கிய இவருக்கு செரம்பூர் பல்கலைக்கழகம் கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கிக் கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது. இத்துணை சிறப்புடைய இப்பெரியார் 1997-10-10 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.