1897 ஆம் ஆண்டு கோண்டாவில் குமரகோட்டத்தில் பிறந்தவர். சுருட்டுத்தொழிலில் ஈடுபட்டிருந்த காலத்தில் கோண்டாவில் அம்பலவாணர் சுவாமிகளின் வழிகாட்டுதலில் கைவல்ய நவநீதம், ஞானவாசிட்டம், திருவாசகம் போன்ற நூல்களின் அறிவைப்பெற்றார். கந்தர்மடத்திலுள்ள வேதாந்த மடத்தில் குருமுதல்வரான மகாதேவ சுவாமிகளினை நாடி அவரின் உத்தமசீடர்களில் ஒருவராக வாழ்ந்தார். முக்காலத்தையும் உணர்ந்த குடைச்சுவாமிகள் இரவு பகல் பாராது ஓய்வுறக்கமின்றி தமது திருவடிகளைப் பதித்தவண்ணம் பல ஊர்களுக்கும் சென்று சித்தின் அருளால் மண்ணைப் புனிதமாக்குவார். அகப்புற பற்றற்றவராய் பாலிலுள்ள நெய்போல, விறகினுள் இருக்கும் தீ போல, கண்ணாடியின் உள்ளிருக்கும் ஒளி போல, அடுத்தவரின் கண்ணுக்கு பித்தர்போல, குடுகுடுவென நடந்து காட்சிதரும் நடமாடும் தெய்வமாக உடலெல்லாம் தெய்வீக ஒளியின் அலைவீச, முகத்தில் தவஒளி பிரகாசிக்க தன்போக்கில் திரிவார். விவசாயி ஒருவருக்கு நல்லகாலம் வருவதை உணர்ந்து அவரிடம் சென்று தின்னப் புகையிலை தா என்று கேட்பார். அவர்கள் தரமான ஒரு புகையிலையை அன்போடு கொடுப்பர். அருள் கிடைக்கும் என்று கூறிவிட்டுச் செல்வார். பின்னர் கூடிய விலைக்கு புகையிலை விற்பனை செய்வதனைக் காணக்கூடியதாக இருக்கும். சுவாமிகள் தம்மை உள்ளன்போடு அனுசரிக்கும் அன்பர்களின் வீடுகளுக்குச் சென்று தேநீர் வாங்கிக் குடிப்பார். பருகியதும் அருள் கிடைக்கும் ஒரு பத்து ரூபா வைத்துக்கொள்ளுங்கோ என்று கூறிச்சென்று விடுவார். அகத்தூய்மையற்றவர்கள் தேநீர் தருமிடத்து அதைப் பருகாது தூர வீசி விடுவார். சமயப் பிரசாரமோ, விளம்பரங்களோ, ஆரவாரமோ இல்லாத பரதேசியாக தமது நுண்ணறிவும் குரல் வளமும் உதவியதால் இனிய திருவாசகங்களைப் பாடியும் மக்களுக்கு காலத்துக்கிசைவான திருவாக்கினைச் சொல்லியும் அன்பர்களை சிவநெறியைப்பேண வைத்தார். சுவாமிகள் தமது சொல்லிலும் செயலிலும் சைகையிலும் நடைபாவனையிலும் தம்மையுணர்ந்தவர்க்கு அறநெறியாம் சிவநெறியைப் பேணவைத்து உய்வித்தார். தூய பக்தியை நாடும் யாவரையும் தமது மௌன உபதேசத்தாலும் அருட்பார்வையாலும் இறைவனைக்காண உதவினார். சிவநெறியை இலகுவில் யாவரும்பேண தமது ஆயுட்காலத்தை அர்ப்பணித்து அருஞ்சேவையாற்றிய சாந்த சொரூபியான நடமாடும் தெய்வமான குடைச்சுவாமிகள் 1978.02.16 ஆம் நாள் சமாதி நிலையடைந்தார். சுவாமிகளின் சமாதியானது பலாலி வீதி, கோண்டாவில் சந்தியிலுள்ள அற்புத நர்த்தன விநாயகர் ஆலயத்தில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.