இந்தியாவின் கன்னட தேசத்தவரான சுவாமி முத்தியானந்தர் என்னும் தீட்சா நாமம் உடைய இவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வைரமுத்துச்செட்டியாருடன் ஏற்பட்ட தொடர்பினால் சுவாமிகள் யாழ்ப்பாணம் நோக்கி வரலாயினார். நாகபட்டணத்தில் இருந்து கப்பலேறி ஊர்காவற்றுறையில் வந்திறங்கி கால்நடையாக மண்டைதீவினை அடைந்தார். மண்டைதீவிலிருந்த சுவாமிகள் யாழ்ப்பாணம் சென்று பெரிய கடையினைத் தமது வசிப்பிடமாகக் கொண்டார். இதன் காரணமாக எல்லோரும் அவரை கடையிற் சுவாமிகள் என அழைக்கலாயினர். தமிழ், ஆங்கிலம், வடமொழி, கன்னடம் ஆகிய மொழிகளை நன்கறிந்திருந்த சுவாமிகள் கன்னட மாநிலத்தில் பெங்க;ரில் நீதிவானாகப் பணியாற்றியவர். கொலைக் குற்றவாளியொருவருக்கு தூக்குத்தண்டனை விதிக்க வேண்டியேற்பட்டது. இந்நிலையில் தனது மனச்சாட்சியின்படி கொலைகாரனை குற்றவாளியாக ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் தனது உத்தியோகத்திற்கு முழுக்குப்போட்டு துறவற நிலைக்கு மாறினார். யாழ்ப்பாணம் வருகை தந்திருந்த சுவாமிகள் ஈழத்தில் சித்தர் பரம்பரை ஒன்றினை உருவாக்கினார். ஈழத்தின் முதற் சித்தர் என்று கொள்ளப்படுகின்றார். கடையிற்சுவாமிகள் பல அற்புதங்களைச் செய்தார். ஈழத்திருநாட்டில் ஞானிகள் உருவாகுவதற்கு வித்திட்டதுமல்லாமல் அவர் அருளால் துன்பங்கள் நீங்கி அருள் பெற்றவர்களும் உண்டு. சுவாமிகள் அடியவர்களிடையே சாதி பேதம், உயர்வுதாழ்வு, செல்வர் வறியவர் என்ற வித்தியாசம் பாராது எல்லோருக்கும் ஒரே விதமாய்க் கருணை காட்டினார். அடியவர்களின் உடல் உளநோய்க்கும், வறுமைக்கும் பரிகாரம் செய்வதில் ஆர்வம் காட்டினார். சுவாமிகள் தமது கடைசிக் காலத்தில் யாழ்ப்பாணம் நீராவியடியில் நிலையாக வாழ்ந்தார்.முப்பது ஆண்டுகளாக யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த சுவாமிகள் பல அரியபெரிய அற்புதங்களைச் செய்து குருசீட பரம்பரையைத் தொடக்கி வைத்து 1882 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் பௌர்ணமி தினத்தன்று மகாசமாதியடைந்த சுவாமிகளுடைய சமாதி சுவாமி இறுதியாக வாழ்ந்த நீராவியடியிலுள்ள சிவன்கோயிலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.