Sunday, January 5

செல்வரத்தினம். அ (கலைஞானி)

0

1933.07.28 ஆம் நாள் யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை குரும்பசிட்டி என்ற இடத்தில் பிறந்தவர். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மிகவும் தொன்மையான கலைப்பொக்கிஷங்களையும், அன்றாட வாழ்வில் பயன் படுத்திய வாழ்வியல் பொருள்களையும் சேகரித்து அதற்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்தவர். குரும்பசிட்டி தந்த மிகச்சிறந்த புகைப்படக் கலைஞன். இவர் தனது வாழ்க்கையில் 50 ஆண்டுகளுக்கு மேலாக காடுகரம்பையெல்லாம் அலைந்து திரிந்து இலங்கைத் திருநாட்டின் தொல்லியல்சார் பொருள்கள் மற்றும் அரும் பொருள்களையும் கண்டெடுத்துப் பாதுகாத்தவர். இப் பணிக்காக பிரமச்சாரிய வாழ்க் கையை மேற்கொண்டு தனது சொத்துக்களையெல்லாம் முழுமையாக இப்பணிக்காக அர்ப்பணித்தவர். வேறு எந்த நிறுவனமோ, தனிமனிதனோ செய்யாத – செய்யத் துணியாத வேலையை தனது முதுமையையும் பாராது தனியே நின்று செய்த பெருமைக்குரியவர். பல நூற்றாண்டு கால வரலாற்றினை எடுத்தியம்பும் நாணயங்கள், தொல்லியற்சான்றுகள், வாழ் வாதாரப் பொருள்கள், ஏட்டுச்சுவடிகள், கலைப்பொருள்கள், கையெழுத்துப்படிகள் இன்னும் எத்தனையோ விடயங்களை தனது ஆற்றலுக்கும் அப்பால் பேணிப்பாதுகாத்து வந்தவர். இலங்கையின் வேறு எந்த நூதனசாலைகளிலும் இல்லாத பொருள்கள் இவரால் பேணப்பட்டு வந்தமை உண்மையே. 1974 இல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின்போது சுண்டுக்குழி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற கண்காட்சியில் இவரது அரும் பொருள்க்கண்காட்சி அனைவரையும் வியக்க வைத்ததாக அறியமுடிகின்றது. 1975இல் குரும்பசிட்டி பொன்.பரமானந்தர் வித்தியால யத்திலும், 1991 இல் யாழ். பல்கலைக்கழகத்திலும், 1992இல் யாழ். நாவலர் கலாசார மண்டபத்திலும், 1993 இல் நல்லூர் மங்கயற்கரசி வித்தியாலயத்திலும் 1994இல் சாவகச்சேரி இந்துக் கல்லூரியிலும் இவருடைய கண்காட்சிகள் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அவருடைய தேடல்களுக்கும் முயற்சிகளுக்கும் எவரும் ஆதரவு வழங்குவதற்கு முன்வராமையினால் அவரால் சேகரிக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்ட பொருள்கள் அனைத்தும் அழிவடைந்தும், களவாடப்பட்ட நிலையிலும் முற்றாக இல்லாமல் போய்விட்டமை எமக்கு ஏற்பட்ட ஓர்துரதிஷ்டவசமான நிலையே எனலாம். இன்று இத்துறையில் எவரும் ஈடுபடமுன்வராமையினால் இத்தகைய செயற்பாடுகள் இன்றும் வெற்றிடமாக  காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இத்தகைய அர்ப்பணிப்புமிக்க பணி செய்த கலைஞானி அவர்கள் 2001-12-26 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!