Friday, May 3

மங்களம்மாள், மாசிலாமணிப்பிள்ளை

0

1884.03.10 ஆம் நாள் யாழ்ப்பாணம்- வண்ணார்பண்ணையில் பிறந்தவர், இலங்கையிலும், இந்தியாவிலும் பல்வேறு சமூக, அரசியல் பணிகளில் ஈடுபட்டுள்ளார். மங்களம்மாளின் தாய்வழிப் பாட்டனார் வண்ணார்பண்ணையைச் சேர்ந்த கதிரவேலுப்பிள்ளை என்பார். 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவர் ஒரு வழக்கறிஞர். அக்காலத்தில் பி. ஏ. பட்டம் பெறுவது யாழ்ப்பாணத்தில் மிக அரிதாக இருந்ததால், பி. ஏ. பட்டதாரியான இவரை மக்கள் பி. ஏ. தம்பி என்றே அழைத்து வந்தனர். இன்றும் யாழ்ப்பாணத்தில் அவர் வாழ்ந்த வீட்டுக்கு அருகில் உள்ள ஒழுங்கை பி. ஏ. தம்பி ஒழுங்கை என அழைக்கப்படுகிறது. மங்களம்மாள் பள்ளிக்குச் சென்று கல்வி கற்றது குறித்துத் தகவல் இல்லை. இவரின் கணவரான மாசிலாமணிப்பிள்ளை தமிழ்நாட்டில் வாழ்ந்தவர். கணருடன் தமிழ்நாடு சென்ற மங்களம்மாள் கணவரின் தூண்டுதலினால் காங்கிரஸில் இணைந்து தீவிரமாக உழைத்தார். 1924 இல் கோயில் பட்டியில் இடம்பெற்ற காங்கிரஸ் மாநாட்டில் பெண்கள் அரங்குக்கு இவரே தலைமை தாங்கினார். 1927 இல் மகாத்மாகாந்தியின் முன்னிலையில் சென்னையில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டிற்கான வரவேற்புக் குழுவில் இவரும் இருந்ததுடன், பெண்கள் அரங்கத்தில் வரவேற்புரையையும் நிகழ்த்தினார். இந்தியாவில், 1926க்கு முன்னர் பெண்கள் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கக்கூடாது என்ற தடை இருந்தது. இது நீக்கப்பட்ட பின்னர் சென்னை மாநகரசபைக்கு இடம்பெற்ற தேர்தலில் நீதிக் கட்சித் தலைவரான நாயுடுவை எதிர்த்து, எழும்பூரில் மங்களம்மாளைக் காங்கிரஸ்க்கட்சி நிறுத்தியது. அத்தேர்தலில் மங்களம்மாள் வெற்றி பெறாவிட்டாலும், யாழ்ப்பாணத்துப் பெண்ணொருவர் தமிழ்நாட்டு அரசியலில் இந்த நிலையை அடைந்தது முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். மங்களம்மாள் இந்தியாவில் இருந்த காலத்தில் 1923 இல் பெண்களுக்கான “தமிழ் மகள்” என்னும் மாத இதழ் ஒன்றைத் தொடங்கி நடத்திவந்த இவர் 1971ஆம் ஆண்டு வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!