1924.02.03 ஆம் நாள் வடமராட்சி – பருத்தித்துறை, வியாபாரிமூலை என்னும் இடத்தில் பிறந்தவர். இலங்கையின் மூத்த பழம்பொருள் சேகரிப்பாளர். பல்லவர்கால மற்றும் வரலாற்று அம்சங்களைக் காட்டும் பல பொக்கிஷங்களைச் சேகரித்தவர். பல நூற்றாண்டு கால வரலாற்றினை எடுத்தியம்பும் நாணயங்கள், தொல்லியற் சான்றுகள், வாழ்வாதாரப் பொருள்கள், ஏட்டுச்சுவடிகள், கலைப்பொருள்கள், கையெழுத்துப்படிகள் இன்னும் எத்தனையோ விடயங்களை தனது ஆற்றலுக்கும் அப்பால் பேணிப்பாதுகாத்து வந்த பெருமைக்குரியவர். காலச்சூழ்;நிலைகளால் அவையாவும் அழிவடைந்தமை மனவேதனைக் குரிய விடயமாகும். இவரால் பேணப்பட்டு வந்த பொருள்களடங்கிய கண்காட்சி ஒன்று 1987 ஆம் ஆண்டு வடக்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் திருகோணமலையில் நடத்தப்பட்டு அப்பொருள்கள் யாவற்றையும் பத்திரமாக பாரஊர்தியில் ஏற்றி யாழ்ப்பாணம் கொண்டு வந்து காட்டுக்கந்தோர் வளவில் நிறுத்தி வைத்திருந்தவேளை யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டிருந்த இந்திய இராணுவத்தினருடன் ஏற்பட்ட யுத்தத்தினால் அப்பொருள்கள் யாவும் பாரவூர்தியுடன் தீயில் முற்றாக எரிந்து சாம்பராகிய நிலை மிகவும் துரதிஷ;டவசமானதாகும். இதனால் பாதிப்படைந்த சொக்கநாதபிள்ளையவர்கள் 1989.07.01 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.