Tuesday, May 21

அந்தோனிப்பிள்ளை சவரிமுத்து (சேவியர் நவநீதன்)

0

யாழ்ப்பாண மாவட்டத்தின் நெய்தல் நிலமாக விளங்கும் நாவாந்துறை என்னும் பிரதேசத்தில் அந்தோனிப்பிள்ளை லூசியாப்பிள்ளை தம்பதிகளின் புதல்வனாக கலைப்பாரம்பரியம் மிக்க கத்தோலிக்கக் குடும்பத்தில் பிறந்தார். இவருடைய பேரன் அண்ணாவியாரும் மிருதங்க வித்துவானுமாகிய ஜோன்பிள்ளை அவர்களிடம் மிருதங்கக் கலையினைப் பயின்றதோடு டொல்கி, தபேலா போன்ற வாத்தியங்களையும் இசைப்பதற்கு தன் முயற்சியால் கற்றுக்கொண்டார். சிறு வயதிலேயே இசைமீது ஆர்வம் கொண்டிருந்த இவர் சிறந்த குரல்வளமுடையவராக விளங்கினார். இதன் காரணமாக இசைப்பயிற்சி பெற்று பாடல்களைப்பாடுவதற்கு ஆரம்பித்தார்.

அல்பிரட்அம்மா என்னும் மங்கையை திருமணம் செய்து ஏழு பிள்ளைச் செல்வங்களைப் பெற்று அவர்களையும் கல்வியிலும் கலையுலகிலும் மிளிர வைத்து கூத்து,இசைக் கலைகளில் சிறந்து விளங்கும் இவரது பிள்ளைச் செல்வங்களுடாக தனது கலைத் தொடர்ச்சியை ஏற்படுத்தியிருப்பது கவனத்திற்கொள்ளப்படவேண்டியதாகும்.

1968 ஆம் ஆண்டு மண்டலேஸ்வரன் இசைக்குழுவில் சேவியர் நவனீதன் என்ற புனை பெயரில் தனது முதல் இசை அரங்கேற்றத்தினைச் செய்தார். இந்நிகழ்வில் இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினைப் பெற்றது மட்டுமல்லாது இசைவல்லமையுடைய கலைஞனாகவம் உலகிற்கு அறிமுகப்படுத்தப் பட்டார்.

யாழ்ப்பாணம் மாநகரசபையில் பணியாற்றிய இவர் மாநகர சபையினால் உருவாக்கப்பட்ட இசைக்குழுவில் முக்கிய அங்கத்தவராக இணைந்து பௌர்ணமி விழாக்களிலும் விசேட தினங்களிலும் மாநகர சபை இசைக்குழு நடத்திய இசை நிகழ்வுகளில் பாடகராக தனது பங்கினை வெளிப்படுத்தினார்.

1970 ஆம் ஆண்டிலிருந்து யாழ்ப்பாணம் திருமறைக் கலாமன்றத்தில் இணைந்து மன்றத்தின் இசைப்பிரிவில் அர்ப்பணிப்போடு பணியாற்றினார். மன்றத்தால் தயாரிக்கப்பட்ட திருப்பாடுகளின் நாடகங்களில் தன்குரல் வளத்தால் உணர்வு சேர்த்தார். 70களுக்குப் பின்னர் இவர்  பாடாத திருப்பாடுகளின் நாடகங்கள் இல்லையெனலாம். 1980ஆம் ஆண்டு மன்றத்தின் இசைக்குழுவானது இசைத்தென்றல் ஜேசுதாசன் அவர்கள் தலைமையில் உருவாகியபோது அதன் பிரதான பாடகர் களில் ஒருவராக இவர் மாறினார். இசைமாலை. ஈஸ்ரர் இசை நிகழ்ச்சி, பத்தே பத்து, இசைவிடு தூது மன்றத்தால் நிகழ்த்தப்பட்ட பல இசைநிகழ்வுகளில் பாடகராக தன்னை இணைத்து அபார திறமை மூலம் பெரும் இரசிகர் கூட்டத்தினை உருவாக்கினார். இலங்கை ரூபவாஹினி தொலைக் காட்சி சேவையிலும், இலங்கை வானொலி நிகழ்வுகளிலும் பங்கேற்றுள்ள இவர் திருமறைக் கலாமன்றத்தினால் வெளியிடப் பட்ட பலிக்களம், செம்மணல், கல்வாரி இராகங்கள் பாகம் – 1,2,3,4, இசைவிடுதூது, திருவுந்தியார் போன்ற ஒலிநாடாக்களில் தன்குரலைப் பதித்துள்ள சேவியர் நவனீதன் அடக்கமும், அர்ப்பணிப்பும், பற்றுறுதியும் கொண்ட கலைஞனாக இன்று வரை பயணித்து வருவது குறிப்பிடத்தக்கது.

1968ஆம் ஆண்டு மண்டலேஸ்வரன் இசைக்குழுவில் இணைந்ததன் மூலம் இசையுலகில் மாபெரும் கலைஞனாய் திகழும் இவர் ஈழத்தின் பிரபல்யம்மிக்க பல இசைக்குழுக்களில் ஆஸ்தான பாடகராய் திகழ்ந்து வருவது சிறப்பான ஒரு விடயமாகும். குறிப்பாக அருணா இசைக்குழு, ராஜன் இசைக்குழு, கவிதாலயா இசைக்குழ, சாரங்கா இசைக்குழு, வானவில் இசைக்குழு, சாந்தன் இசைக்குழு என யாழ்ப்பாணத்தின்ர பிபல்யமான இசைக்குழுக்களில் மெல்லிசை, பொப்பிசை, சினிமாப் பாடல்களின் பாடகராய் திகழ்ந்தார். திகழ்ந்து வருகின்றார். இக்குழக்களின் பயணத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மேடைகளைக் கண்ட அனுபவமுடைய கலைஞனாய் இசைக்கலையின் ஆளுமையாய் திகழ்வது குறிப்பிடத்தக்கது.

இவர் அங்கம் விகித்த இசைக்குழுக்கள்.

மண்டலேஸ்வரன் இசைக்குழு                   – 1968 – 1970.

அருணா இசைக்குழு                                      – 1970 – 1990.

சாந்தன் இசைக்குழு                                      – 1970 – 1990.

சாரங்கா இசைக்குழு                                   – 1990 – 2007.

கவிதாலயா இசைக்குழு                             – 1990 – 2007.

ராஜன்ஸ் இசைக்குழு                                   – 2007 – 2013.

வானவில் இசைக்குழு                                  – 2013 – இன்று வரை.

யாழ் மாநகர இசைக்குழு                           – 1970 – 2010.

திருமறைக்கலாமன்ற இசைக்குழு       – 1980 – இன்று வரை.

பாடல் பாடிய இசை நாடாக்கள் அல்லது இறுவட்டுக்கள்.

கல்வாரி இராகங்கள் பாகம் – 1,2,3.

செம்மணல்.

தாலேலோ.

குடிலின் கானங்கள்.

பத்தே பத்து.

இசைவிடு தூது.

திருவுந்தியார்.

கொடிக்கவி.

பின்னணிக்குரல் வழங்கிய திருமறைக் கலாமன்ற நாடகத் தயாரிப்புகள்

அன்பில் மலர்ந்த அமர காவியம்               – 1971.

பலிக்களம்                                                         – 1974.

களங்கம்                                                            – 1990.

சிலுவை உலா                                                  – 1991.

கல்வாரிப் பரணி                                           – 1992.

பலிக்களம்                                                       – 1993.

கல்வாரிக் கலம்பகம்                                   – 1994.

அன்பில் மலர்ந்த அமர காவியம்             – 1995

கல்வாரிச் சுவடுகள்                                     – 1996.

பலிக்களம்                                                        – 1997.

சிலுவைச் சுவடுகள்                                      – 1998.

குருதி கழுவிய குவலயம்                            – 1999.

பலிக்களம்                                                       – 2000.

காவிய நாகயகன்                                          – 2001.

கல்வாரி யாகம்                                          –    2002.

பலிக்களம்                                                       – 2003.

காவிய நாயகன்                                            – 2004.

வேள்வித்திருமகன்                                       – 2014.

கல்வாரி யாகம்                                              – 2015.

வெள்ளியில் ஞாயிறு                                    – 2016.

மலையில் விழுந்த துளிகள்                        – 2017.

கடவுள் வடித்த கண்ணீர்                            – 2018.

கல்வாரி யாகம்                                              – 2019.

களங்கம்                                                          – 2020.

வழங்கப்பட்ட விருதுகளும் கௌரவங்களும்.

‘நாவேந்தன்’ – மானிப்பாய் றெட்றேஞ்சர் விளையாட்டுக் கழகம்                         – 2003.

‘நாற்பது வருடக் கலைச்சேவைக் கௌரவம் – திருமறைக்கலாமன்றம்             – 2005.

‘யாழ்ரத்னா’ – யாழ்ப்பாணப் பிரதேச கலாசாரப் பேரவை                                       – 2011.

‘இசைஞானச் செல்வன்’ – திருமறைக்கலாமன்றம்                                                     – 2011.

‘கலைமாமணி’ – சர்வோதயம்                                                                                            – 2017.

மிருதங்கக் கலையில் கலைப்பணியை ஆரம்பித்த சேவியர் நவனீதன் அவர்கள் மெல்லிசைப் பாடகராக கலையுலகில் தன்னை அடையாளப்படுத்திய போதிலும் தனது பாட்டனாரின் கலைவடிவமான மிருதங்கம் வாசிப்பதை இன்னமும் கைவிடாது தொடர்ந்து வருவது பாராட்டப்பட வேண்டியதுடன் கூத்துக்கலையில் நாட்டமுடையவராகவும் வாழ்ந்து வரும் இவர் யாழ்ப்பாணத்தின் மெல்லிசைக் கலையின் ஆளுமைகளில் ஒருவராக திகழ்ந்து வருது போற்றப்படவேண்டியதாகும்..

இத்தொகுப்பிற்கான நேர்காணலிற்கு ஒத்துழைப்பு வழங்கிய சேவியர் நவனீதன் அவர்களுக்கும்  யாழ்ப்பாணப் பெட்டகத்தின் பொதுச் செயலாளர் திருமதி மேர்சி சுஜந்தினி  அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!