அறிமுகம்
‘நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார் சொற் கேட்பதுவும் நன்றே நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே யலரோ
டினங்கி இருப்பதுவும் நன்று” ஒளவைப்பாட்டி (மூதுரை)
இலங்கையின் நூலகத் துறையை மேம்படுத்திய நூலகவியலாளர்களின் வரிசையிலே என்றும் நினைவில் வாழ்ந்து கொண்டிருக்கும் அறிஞர்கள் பலர். மூவின மக்களும் இணைந்து வாழும் இந்நாட்டின் நூலகவரலாறு தொன்மை மிகுந்தது. ஆன்மீக வழிபாட்டிடங்கள் தொட்டு அருங்கல்விச் சாலைகள் வரை அரும்பொக்கிசங்களாகச் சுவடிகள், நூல்கள் மற்றும் தகவற்சாதனங் களான பல்வகை ஊடகங்களைப் பேணிப் பாதுகாத்துச் சமூகத்துக்குக் காலங்காலமாக வழங்கிப் பணிசெய்தோர் தொகை வளர்ந்து கொண்டே வருகின்றது. எழுத்தறிவு வீதம், கல்வியறிவுவீதம் மிக உயர் நிலையில் பேணப்படும் எம்நாட்டில் இந்நிலையை ஏற்படுத்துவதில் பெரும்பங்கினைக் கல்வியலாளர்களும் நூலகவியலாளர்களும் வகிக்கின்றார்கள். நூலகவியல் என்னும் அறிவியற் துறை உலகளாவிய ரீதியில் பல்வேறுமட்டங்களில் மேம்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டு பல்கலைக்கழகங்களில் ஆய்வுத் துறையாகவும் வளர்ந்து வருகின்றது.
யாழ்ப்பாணத்தைப் பொறுத்த வரையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகம், நூலகவியல் துறைக்குப் பெரும்பங்களிப்பை வழங்கிவரும் நூலகமாகும். நூலகவியலில் தகைமைபெற்ற பல நூலகர்கள் இந்நூலகத்தை அதி உன்னத நிலைக்கு மேம்படுத்தி வந்துள்ளார்கள். இந்நூலகர் வரிசையிலே ஐந்தாவது நூலகராக விளங்கியவர் கடந்த 2019 ஆம் வருடம் நத்தார் திருநாளில் அமரத்துவம் அடைந்த திருமதி ஸ்ரீகாந்தலட்சுமி அருளானந்தம் சிவனேசன் அவர்களாவார். ஸ்ரீ அருளானந்தம், ஸ்ரீகாந்தலட்சுமி அருளானந்தம். ஸ்ரீமிஸ் என்பன இவரை அடையாளப்படுத்திய மறு பெயர்களாகும். சிலர் பதவிகளால் பெருமையடைகின்றார்கள். ஆனால் சிலரோ தாம் வகிக்கும் பதவிகளை பெருமைப்படுத்துகின்றார்கள்” எனக் கூறுவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்துடன் கடந்த 30ஆண்டுகளுக்கு மேலான நூலக அனுபவமுடையவரான ஸ்ரீகாந்தலட்சுமி இரண்டாம் வகையைச் சேர்ந்தவராவார்.
தோற்றம்
காலங்காலமாக ஆன்றவிந்தடங்கிய சான்றோர்களையும், நுண்மாண் நுழைபுலங் கொண்டோரையும் மேழிச்செல்வம் கோழைபடாது என உழுதுண்டு உலகைக்காக்கும் உழவர் பெருமக்களையும் கொண்ட இணுவில் மண்ணே இவரைப்பெற்றெடுத்த பெருமையுடையது. இவ்வூரிலே வட்டுவினிக் குறிச்சியிலே.
“இரவார் இரப்பார்க் கொன்றீவர் கரவாது
கைசெய் தூண்மாலை யவர்”
என்னும் குறளுக்கு உதாரணமாக வாழ்ந்த அருளானந்தம் என்னும் பெயர் பெற்ற விவசாயின் சிரேஷ்ட புதல்வியாக 08.04.1961 இல் ஸ்ரீகாந்தலட்சுமி பிறந்தார். தாயார் ஜெயலட்சுமியின் பாசமிகு பெண்ணாக, சுட்டும் விழிச்சுடர் மின்ன அயலாரின் அன்புக்கினியாளாக வளர்ந்தார். இவரின் உடன்பிறந்தோராக குபேரானந்தஉதயன், ஸ்ரீகாந்தரூபி, ஆனந்தலட்சுமி, ஆனந்தவதனி, குகதாஸ், முகுந்தன் ஆகியோர் இல்லத்தில் தோன்றி ஆனந்தமளித்தார்கள். அன்புச் சகோதரர்களின் மீது பாசமும் நேசமும் கொண்டவராக அன்னைக்கு நிகராகப் பாராட்டிச் சீராட்டி வளர்த்தவராக இருந்ததுடன் கண்ணை இமை காப்பது போல் கவனித்துப் பேணி வந்தார்.
கல்வி
இவர்களின் இல்லத்துக்கு அருகாமையில் இன்று இணுவில் மத்திய கல்லூரி என்று இனிய நாமத்தைச் சூடிநிற்கும் அன்றைய இணுவில் சைவமகாஜனா வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியைப் பெற்றக் கொண்டார். தானும் கற்றுத் தன் சகோதரர்களும் கல்விபெறத் துணையாயிருந்தார். இடைநிலைக் கல்வியையடுத்து உயர்கல்வியைப் பெறவிழைந்த போது “ஆளுமைமிக்க பெண்களை உருவாக்க வேண்டும்” என்னும் கல்விச் சிந்தனையை நோக்காகக் கொண்டு வள்ளல் இராமநாததுரையால் ஆரம்பிக்கப்பெற்ற மருதனார்மடம் இராமநாதன் மகளிர் கல்லூரியை நாடினார். கல்லூரிக் காலத்தில் விருப்புடன் பாடங்களை கற்றதோடமையாது, இலக்கியங்களை தேடிக் கற்பதிலும் ஆர்வங்கொண்டிருந்தார். தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நல்ல தேர்ச்சியை கற்கும் காலத்திலேயே கொண்டிருந்தாரென அவரது ஆசிரியர்கள் கூறுகின்றார்கள். நாட்டின் சூழ்நிலைகள் குழப்பகரமாக அமைந்த 1977 ஃ 84 காலப்பகுதி ஸ்ரீகாந்தலட்சுமியின் உயர் கல்வி, பல்கலைக்கழகக் கல்விக் காலமாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது. ஆயினும் கல்வியின் பால் கொண்ட விருப்பம் ஒரு விவசாயியின் பிள்ளையான தான் கல்வியில் உயர்நிலை பெறவேண்டும் என்ற தாகம் அவரை உந்தித்தள்ள, தந்தையாரின் சொற்படி, அவரின் விருப்பப்படி தன்படிப்பை தளரா நிலையில் வைத்துக்கொள்ள முயன்றார். 1979ஃ80 ஆம் ஆண்டில் இராமநாதன் கல்லூரி அதிபர் திருமதி இ. அருணாசலம் வழிகாட்டலில் புவியியல் மன்றத்தின் தலைவராக இருந்து சிறப்பாகப் பணியாற்றியுள்ளார். இவருடைய பல்துறைசார்ந்த அறிவுக்கும் இயல்பான பேச்சாற்றலுக்குமான களத்தினை இராமநாதன் கல்லூரிக்காலம் வழங்கியது. அழியாத அறிவுச் சுரங்கமான நூல்களுடனான பரீட்சையத்தை இங்கே நன்கு பெற்றுக் கொண்டார். இக்கல்லூரி நூலகம் மிகச் சிறந்த நூலகமாக விளங்கியதென்பதை யாவரும் அறிவர். இராமநாதன் வள்ளலின் சொந்தச்சேகரிப்புகள், மருகர் நடேசப்பிள்ளை அவர்களின் சேகரிப்புகள் எனப் பலவும்கொண்டு விளங்கிய இந்நூலகத்தை நன்கு பயன்படுத்தித் தன்னை வளர்த்துக்கொண்ட ஸ்ரீகாந்தலட்சுமி பிற்காலத்தில் மாணவர் உலகுக்கு இதையே சுட்டிக்காட்டி வந்தார்.
“மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்
யாஉள முன்நிற் பவை”. (குறள் 636)
1980 இல் உயர்தரப் பரீட்சையில் பெற்ற பெறுபேறுகளையடுத்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பொருளியல்துறையில் மேற்படிப்பை பெறும்வாய்ப்பு கிடைக்கப்பெற்றது. வெறும் விரிவுரைகளில் மட்டும் நம்பிக்கை கொள்ளாது நூலகமே கதியென்று கல்வித் தேடலை மேற்கொண்டார். இக்காலமும் சுமுகமான காலமாக இருக்கவில்லை. பல்வேறு நெருக்கடிகள், நெருக்கு வாரங்கள், அமைதியின்மை, கெடுபிடி என பலபடக் கூறக்கூடிய இக்காலத்தில் கல்வியே கருந்தனம் என்ற கருத்தை இறுக்கமாகப் பற்றிப் படித்தார். இதன் மூலம் 1984 இல்பொருளியல் சிறப்பு இளமாணிப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டார். தந்தையின் ஆசையைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற ஓர்மம் பட்டதாரியாகி உயர்ந்த நிலையை அடைந்ததன் மூலம் பூர்த்தியாகியது.
நூல்களின் மீதான ஈர்ப்பு வாசிப்பப் பழக்கத்தல் மேலும் மேலும் ஒங்க பரந்துபட்ட நூல்களையும் தேடி வாசிப்பவராக உருவாகியிருந்த ஸ்ரீகாந்தலட்சுமி இத்துறையில் நாட்டங் கொண்டார். பட்டதாரியாகியவுடன் இத்துறைசார்ந்த கற்கையை நாடி 1985இல் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இணைந்து நூலகதகவல் விஞ்ஞானத் துறையில் டீடுஐளு என்னும் இளமாணிப்பட்டத்தினை 1986ஆம்ஆண்டு பெற்றுக் கொண்டார். இப் பட்டப்பின் படிப்பு முடிந்தவுடன் தனது கவனத்தை ஆவணமாக்கல் மற்றும் தகவல் அறிவியல் துறைகளில் சிறப்புக் கவனம் செலுத்தினார். இதன் பொருட்டு பெங்களுரிலுள்ள ஆவணமாக்கல், ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையத்தில் இணைந்து கற்றார். இந்நிலையமானது இந்திய நூலகவியலின் தந்தை எனப் போற்றப்படும் நூலக அறிஞர் திரு. ளு.சு. இரங்கநாதன் அவர்களால் நிறுவப்பட்ட நூலகவியல் ஆய்வு நிறுவனமாகும். இங்கு ஆய்வுக்குரிய முதுமாணிப் பட்டத்தை 1989 இல் பெற்றுக் கொண்டார். இந்திய நூலகத்துறையிலுள்ள பல்வேறு அறிஞர்களின் வழிகாட்டுதல்களுடன் நூலகவியலில் புலமைமிக்கவராகத் தன்னை வளர்த்துக் கொண்டார். பேராசிரியர் கலாநிதி போல் மோகன்ராய், கீழைத்தேய நூலகவியலின் தந்தையாகிய கலாநிதி ளு.சு.இரங்கநாதன் அவர்களின் மாணவரான பேராசிரியர் எம்.ஏ. கோபிநாத் போன்றோர் நூலகர் ஸ்ரீகாந்தலட்சுமியை உருவாக்கிய சிற்பிகள் எனலாம்.
நூலகப் பணி ஆராய்ச்சிகள் நூலகவியல் துறையில் முதுமாணிப்பட்டத்தைப் பெற்றுக் கொண்டு நாடு திரும்பிய ஸ்ரீகாந்தலட்சுமி அவர்கள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உதவி நூலகர் பதவியில் 1989 இல் இணைந்து கொண்டார். பல்கலைக்கழக மாணவர்களுக்காகவும் கற்பிக்கும் ஆசிரியர்களுக்காகவும் ஆய்வுகளை மேற்கொள்ளபவர்களுக்காகவும் பயன்படும் பல்கலைக்கழக நூலகம் நவீன சிந்தனைகளுக்கு அமைவாக தன்னை வளர்த்துக் கொள்ளும் தாபனமாகும். நூலகம் வளர வளர அங்கு கற்போரும் கற்பிப்போரும் வளம் பெற்று தேசத்திற்குரிய வளர்ச்சிக்கு உரமூட்டுவார்கள் என்னும் சிந்தனை உரப்புப்பெற்று இலங்கை நூலகத்துறை வளர்ச்சி பெற்றுக் கொண்டிருந்த காலமாக இதைக் குறிப்பிடலாம்.
யாழ் பல்கலைகழகத்தின் முதல் நிரந்தர நூலகர் என்னும் சிறப்பினைப்பெற்றுக் கொண்டவரான திரு. சி. முருகவேள் காலத்தில் உதவி நூலகராக நூலகப் பணியாற்றத் தொடங்கிய ஸ்ரீகாந்தலட்சுமி அவர்களுக்கு நூலகர் முருகவேள் பல்வேறு தொழில் நுணுக்கங்களையும் நேர்க்கணிய நிர்வாக நுட்பங்களையும் கற்றுத்தந்தவராவார். 1994ஆம் வருடத்தின் சிரேஷ்ட உதவிநூலகர் தரம் ஐஐ என்னும் பதவிநிலைக்கு பதவி உயர்த்தப்பட்டார். இக்காலப் பகுதியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகர்களாக விளங்கிய திருமதி ரோ. பரராஜசிங்கம், திருமதி இ.கருணாணந்தராஜா ஆகியோருடன் இணைந்து தமக்கென வழங்கப்பட்ட பணிகளைச் சிறப்புற ஆற்றிவந்தார். நூல்கள், சிறுபிரசுரங்கள், பத்திரிகைகள், சஞ்சிகைகள் பகுதிகளில் பல்வேறு விருத்தி அம்சங்களை நடைமுறைப்படுத்தினார் 2008ஆம் ஆண்டில் தற்காலிக பிரதம நூலகராக கடமையாற்றினார். நீண்டகாலமாகத் தொடரும் நாட்டுப் பிரச்சினைகளால் சேவைகளை வழங்குவதற்கு பலவிதசிரம நிலைகள், நெருக்கடிகள் இருந்தபோதிலும் அவற்றை உரியவர்களுடன் உரையாடிச் சீர்படுத்தி நடைமுறைப்படுத்துபவராக இருந்தார். சுயாதீனமாகப் பல்கலைக்கழகங்கள் இயங்கினாலும் பீடங்கள், நூலகம் போன்ற கல்விசார் உட்கட்டமைப்புகள் தாய் நிறுவனத்தின் விருப்பு, வெறுப்பு, நிதி ஒதுக்கீடு, கொள்கைகள் போன்றவற்றின் அடிப்படையில் இயங்க வேண்டியன. நூலகச்செயற்பாடுகளில் தாக்கத்தை நெருக்கீடுகளை இந்நிலை ஏற்படுத்துவதுண்டு. ஆயினும் பல்வேறு கஷ்டங்கள் நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அவற்றுக்கு முகங்கொடுத்து நிறைந்த மனோதிடத்துடன் அணுகி அவற்றை நிறைவேற்றும் வரைகருத்தைச் செலுத்தும் பண்பு இவரிடம் இருந்தது. அவரது பேச்சாற்றல், தமிழ் ஆங்கில மொழியறிவு பரந்துபட்ட துறைகள் சார்ந்த அறிவு சமூக சிந்தனைகள், தலைமைத்துவப் பண்பு போன்ற குணாம்சங்கள் சிறந்த ஒரு நூலகராக இவரை உருவாக்க துணை நின்றன.
நூலகத்துறைக்கெனத் தன்னை அர்ப்பணித்து வாழ்நாள் முழுமையும் இயங்கிய ஸ்ரீகாந்தலட்சுமி நூலகவியல் சார்ந்தும், ஏனைய துறைகள் சார்ந்தும் விரிவுரையாளராகவும் காலத்துக்கு காலம் கடமையாற்றி வந்துள்ளார்.
- இலங்கை நூலகச் சங்கத்தின் டிப்ளோமா பாடநெறி விரிவுரைகள்.
- யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உயர்பட்டப்படிப்பு பீடத்தினால் நடத்தப்பட்ட நூலகவியல் பட்டப்பின் தகைமைக் கற்கைநெறி விரிவுரைகள்
- களனிப் பல்கலைக்கழகத்தில் நூலகவியல் பட்டப்படிப்பு கற்கைநெறி விரிவுரைகள் போன்றவற்றில் அனுபவம் மூலம் காத்திரமான பணிகளை மேற்கொண்டார். அத்தோடு
- யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நூலகவியல் பட்டப்பின் தகைமைக் கல்விநெறிக்கான ஒருங்கிணைப்பாளராக 2005 ஃ06 காலப் பகுதியில் செயற்பட்டுள்ளார்.
- யாழ். பல்கலைக்கழகத்தின் உயர் பட்டப்படிப்புகள் பீடத்தால் நடத்தப்பட்ட அபிவிருத்திக் கல்வி, குடித்தொகைக் கல்வி போன்ற முதுமாணிக் கற்கை நெறிக்கான வருகைதரு விரிவுரையாளராக 2007 ஃ08 காலப்பகுதியில் இருந்துள்ளார்.
- யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி நூலகவியல் கற்கைநெறி விரிவுரையாளராகப் பணிபுரிந்துள்ளார்.
ஆய்வு மற்றும் அறிவுப் பரவலாக்கம்
நூலக அறிவியல் சார்ந்து இவரால் பல நூல்களும் கட்டுரைகளும் ஆய்வுக்
கட்டுரைகளும் எழுதப்பட்டுள்ளன.
இவரால் எழுதப்பட்ட நூல்கள்.
- Library Classification: a Librarian’s manual (2005)
- Thesaurus: Construction, Maintenance and Use (2005)
- Alphabetico-classed glossary of technical terms in Library and Information Science: English – Tamil (2006)
- Dewey decimal classification: abridged form of 22nd edition Handbook for PGD students of Library and Information Science (2007)
- Papers on library science (2008)
- Information Resources Management (2009)
- Thesaurus in Library and Information Science : Tamil-English (2010)
- Encyclopaedic Dictionary of Library & information science. (2010)
- Information Resources and Services (2010)
- Library Development: a practical approach (2010)
- Information Resources Management 2nd ed. (2011)
- Alphabetico-classed glossary of technical terms in Library and Information Science 2nd ed. (2011)
- Path to knowledge working model for user education programme (2012)
- Three Dimensional Library: an Emerging medium for lifelong learning (2013)14
- Foundation for Library Awareness: a journey through a decade (2013)
- தூயி தசமப் பகுப்புத் திட்டம் 23ஆம் பதிப்புக்கான கைந்நூல் (2017)
இவை தவிர பல்வேறு ஆய்வுக்கட்டுரைகள், மாநாட்டுக் கட்டுரைகள், பத்திரிகைகள், சிறப்பு மலர்களுக்கான கட்டுரைகள் போன்றவற்றை அனேகமாக நூலகவியல் சார்ந்து எழுதியுள்ளார். யாழ்ப்பாணத்தில் வெளிவந்த மகளிர் சஞ்சிகையான “நங்கை” யின் ஆசிரியர் பீடத்துடன் தொடர்புபட்டவரான ஸ்ரீ பல்வேறு ஆக்கங்களை புனைபெயர்களில் படைத்தவராவார். கவிதை நூல்களுக்கான விமர்சனக் குறிப்புகள், உரைகள் பல நிகழ்த்தியவரான இவர் சிறுவர் உளவியற் கட்டுரைகள் பலவும் வரைந்துள்ளார். இணையத்தளத்தில் வாழ்வியல், கருத்தூண் என்னும் தலைப்புகளில் ஆவணமாக்கற் பதிவுகளை இட்டுவந்துள்ளதுடன் நூலக விழிப்புணர்வு நிறுவனத்துக் கான இணையத்தளத்தையும் ஒழுங்குபடுத்தியிருந்தார்.
நூலகவியற்துறையின் கல்விசார் ஆய்வுப் பணிகளில் முதன்மையானதாகக் கருதப்படும் ஆய்வடங்கல் உருவாக்கப் பணிகளை தொடங்கி முதலாவது முயற்சியாக நல்லூர் பிரதேசம் பற்றிய ஆக்கங்கள் அனைத்தையும் உள்ளடக்கி யாழ்ப்பாணத் தமிழியல் ஆய்வடங்கல் – 1 என்ற தலைப்பில் நூல் விபரப்பட்டியலாக வெளியிட்டுள்ளார். இப்பணியைத் தொடர இக்கட்டுரையாளர் வழிகாட்டல்கள் வழங்கியதன் பேரில் வலிகாமம் பிரதேசத்தை மையப்படுத்தி எழுந்த படைப்புகளின் விபரங்களைக் கொண்ட தேர்ந்த நூல் விபரப்பட்டியலாக யாழ்ப்பாணத் தமிழியல் ஆய்வடங்கல் – 2 உருவாக்கம் பெற்றிருக்கின்றது. தொடர்ந்து தீவகம் மற்றும் பிரதேசங்கள் சார்ந்த நூல்விபரப்பட்டியல் பணிகளைத் தொடக்கி வைத்துள்ளார்.
முப்பரிமாண நூலகம் எண்ணக்கருவின் உருவாக்குநர்
சான்றாதாரக் கல்வியின் முக்கியத்துவத்தையும் பயனையும் அடிப்படையாக மேம்படுத்தும் புதிய உத்தியாகப் முப்பரிமாணக் கண்காட்சி பிரபலப்படுத்தப்பட்டுவரும் நிலையில் இக்கண்காட்சியை கொண்டு முப்பரிமாண நூலகம் என்ற புதிய கருத்து நிலையினூடாக வாசிப்பை பல்வேறு மட்டங்களிலும் ஒழுங்குபடுத்துவதில் சிரத்தை எடுத்துக் கொண்டவர் நூலகர் ஸ்ரீகாந்தலட்சுமி.
யாழ் பல்கலைக்கழக நூலகம், யாழ்ப்பாணப் பொது நூலகம், சுன்னாகம பொதுநூலகம், உடுவில் மகளிர் கல்லூரி, மன்னார் அல் அஸ்ஹர் தேசியபாடசாலை, காரைநகர் கலாநிதி ஆ. தியாகராசா மத்திய மகா வித்தியாலயம், மட்டுவில் சந்திர மௌலீசர் மகாவித்தியாலயம், அளவெட்டி மகாஜன சபை, ஊர்காவற்றுறை பொது நூலகம், தெல்லிப்பளை யூனியன் கல்லூரி என பரந்துபட்ட இடங்களில் முப்பரிமாணக் கண்காட்சியை நடத்தி வாசிப்பு ஊக்குவிப்பு மேற்கொண்டார்.
தேசிய சமூகப் பங்களிப்புகள்.
வாழ்நாள் பேராசிரியர் திரு. கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் இவரது பணிகளை வரவேற்று, தமிழ்கூறும் நல்லுலகம் இவருக்கு கடமைப்பட்டுள்ளது எனச் சிலாகித்துள்ளார். பல்கலைக்கழக நூலகத்துக்குள்ளே இவர் ஆற்றிய பணிகளுக்குச். சமதையாக சமூகஞ் சார்ந்த அமைப்பு களினூடாகவும் பல பணிகளை முன்னெடுத்துள்ளார்.
நூலக விழிப்புணர்வு நிறுவகம்.
அறிவின் எல்லையைத் தாண்டிய சுயசிந்தனைக்கும் தேடலுக்கும் ஆதார சுருதியாக அமையக்கூடிய வாசிப்புப் பழக்கத்தை உருவாக்குவதற்கும் விருத்தி செய்வதற்கும் தேவையான அனைத்து வளங்களையும் ஒன்றிணைப்பதனூடாக உயிர்ப்புடைய மனித சமூகத்தைத் தோற்றுவிக்க ஒன்றிணைதல் என்னும் தொலை நோக்கைக் கொண்டுள்ள ஒர் இலாப நோக்கமற்ற சமூக சேவைக்கட்டமைப்பொன்றை 2005 மே மாதத்தில் உருவாக்கினார். இவ்வமைப்பு நூலக விழிப்புணர்வு நிறுவகம் என்ற பெயருடன் வளமான வாசிப்பு மானுடத்தின் மேம்பாடு என்னும் மகுடவாசகத்துடன் தோற்றம் பெற்றது. இந்நிறுவகத்தின் பத்தாண்டு நிறைவில் 2015 இல் வெளியிடப் பெற்ற கருத்தூண் சிறப்பு மலரில் நிறுவகப் பணிகள் அதில் நிறுவக ஸ்தாபகர் ஸ்ரீகாந்தலட்சுமியின் வகிபாகம் என்பன விபரமாக இடம்பெற்றுள்ளன. 2020மே மாதத்தில் கருத்தூண் இரண்டாவது சிறப்புமலர் நிறுவகத்தின் 15ஆவது ஆண்டுச் சிறப்பு மலராக வெளிப்படுத்த ஸ்தாபகர் சிந்தித்திருந்த போதிலும் அவ் எண்ணம் ஈடேற வாய்ப்பில்லாமல் போயிற்று.
Pயவா வழ மழெறடநனபந கண்காட்சி
2009இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பதில் நூலகராகக் கடமையாற்றிய சமயத்தில் மாணவர்களின் தகவல் அறிதிறன் மேம்பாட்டுக்காக இக்கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்தார். இது தொடர்பான கைந்நூல் ஒன்று வெளியிடப்பட்டது.
கருத்தூண் மாதிரி நூலகத்தையும் அறிதூண்டல் மையத்தையும் தனது வசிப்பிடத்தில் ஆரம்பித்து மாணவர்களுக்கான சான்றாதாரக் கல்விக்கு உறுதுணை செய்துள்ளார்.
யாழ்ப்பாணப் பொது நூலகம், இணுவில் அறிவாலயம், கொழும்பு தமிழ்ச்சங்க நூலகம், “நூலகம்” நிறுவனம் ஆகியவற்றின் ஆலோசகராக செயற்பட்டு ஆக்கபூர்வமான பல பணிகளை மேற்கொள்ளத் துணை புரிந்தார்.
2015ஆம் ஆண்டின், இலங்கைப் பல்கலைக்கழக நூலகர் சங்கத்தின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். இவ்வமைப்பினால் ஒழுங்கு செய்யப்படும் சர்வதேச ஆய்வு மாநாட்டை 2016ஆம் ஆண்டில் யாழ்.பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் நடத்திப் பாராட்டுப்பெற்றார்.
இலங்கை நூலகச் சங்கத்தின் தலைவராக 2017ஃ2019 காலப்பகுதியில் தெரிவுசெய்யப்பட்டார். இச்சங்க வரலாற்றில் இச்சங்கத் தலைவராக தமிழர் ஒருவர் தெரிவாகியது இதுவே முதற்தடவையாகும். அத்துடன் தேசிய நூலகவியல் ஆய்வு மாநாட்டையும் 2019 இல் நடத்தியுள்ள சிறப்பிற்குரியவர். இவர் இறக்கும் வரை தலைமைப்பொறுப்பை மிகுந்த சிரமமிகு கொழும்புப் பிரயாணத்தை மேற்கொண்டு நிறைவேற்றினார்.
இலங்கை தேசிய நூலகம், கொழும்பு பல்கலைக்கழக நூலக விஞ்ஞானத்துக்கான தேசிய நிறுவனம் போன்றவற்றின் இயக்குனர் சபை உறுப்பினராகவும், கொழும்பு தேசிய விஞ்ஞான மன்றத்தின் நூலகவியலுக்கான குழுவின் அங்கத்தவராகவும் பங்களித்துள்ளார். இலங்கை நூலகச்சங்கத்தின் னுஐPடுஐளு கற்றைநெறியில் சிங்கள, தமிழ் மொழியில் முதலிடம் பெறும் மாணவர்களுக்கென 2018ஆம் ஆண்டு முதல் புலமைப்பரிசில் ஒன்றினை சொந்த நிதியில் வழங்கியுள்ளார்.
இவ்வாறு தேசிய மட்டத்திலும் தன்பணிச் சிறப்புகளால் மதிப்பும் கௌரவமும் பெற்றுள்ள நூலகர் ஸ்ரீகாந்தலட்சுமி யாழ் பல்கலைக்கழக நூலகத்துறைக்கு மதிப்பும் மரியாதையும் ஏற்படுத்தியவரா வார். இப்பணிகளுக்காக ஊரும் நாடும் போற்றி மதிப்பளிக்க வேண்டிய ஒரு நூலகராக விளங்கினார். பொதுவாக உள்ளுராட்சி மன்றங்களின் பொது நூலகத்தில் கடமையாற்றும் நூலகர்கள், பாடசாலைகளின் ஆசிரிய நூலகர்கள், சனசமூக நிலையங்கள் போன்ற சமூக மட்ட அமைப்பு நூலகர்கள் போன்றோருக்கு உரிய மதிப்பும் கவனமும் வழங்கப்பட வேண்டும் என்ற சிந்தனையை உரியவர்களுக்கு ஏற்படுத்துவதற்காகப் பாடுபட்டார். நூலகர்களின் அடையாளமாக இவரைக் குறிப்பிடலாம்.
தமிழிலும் ஆங்கிலத்திலும் நூலகவியல் துறையை நவீனப்படுத்தும் பல சிந்தனையை எழுதி வந்த நூலகர் இன்னும் ஆற்ற வேண்டிய பணிகள் பற்றி பட்டியலை இட்டுச்செயற்படுத்தி வந்தவர். நிரந்தர நூலகராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 01.03.2012 முதல் ஏழரை ஆண்டுகாலமே பணியாற்றிய போதிலும் இவரிட்ட தடத்தில் பயணிக்கும் வருங்கால நூலகர்களால் இவரது கனவுகள் நிறைவேற்றப்படும் என நம்பலாம். கல்வித்துறையிலும் பதிப்புத்துறையிலும், இலக்கியத்துறையிலும் கூட இவரது பங்கேற்பு தமிழ் உலகில் என்றென்றும் பேசப்படும்.
பணியிடச்சுமைகள், நெருக்கீடுகள் மட்டுமன்றி உடல்நலக்குறைவுச் சிக்கல்களும் அவரது சமநிலையை அடிக்கடி குழப்பின. இயற்கை வைத்தியத்தில் நம்பிக்கைகொண்டவர். தானே நோயையும் சிரமங்களையும் சுமக்கும் சகிப்புத்தன்மை வாய்ந்தவர். கோபம் என்பது அவரது இயல்பில்லை. ஏனைய சூழ்நிலைகள் காரணமாக ஏற்படும் நெருக்கீடு, பதற்றம் என்பன நிறையவே அவரில் பிரதிபலிக்கும். ஒருவரில் கோபப்படுவதும் சிறிது நேரத்தின் பின் அவர்களை அழைத்து ஆறுதல்படுத்துவதும் அனுபவித்தவர்களுக்கு நன்கு தெரியும். அவரது கோபத்தின் பின் இருந்த காரணங்களை இனங்கண்ட பின்னர் ஆத்மார்த்தமான நெருக்கத்தை, அன்பை, பாசத்தை உணரமுடியும்.
முதுகென்பு, முழங்கால் சிரட்டை பாதிக்கப்பட்ட நிலையில் நீண்ட நேரம் நிற்பது, இருப்பது, மாடிப்படி ஏறுவது என பல பல நாளாந்த தொல்லைகளையும் சகித்து ஒருசாதனையாளராக மேற்கிளம்பியது அவரது மனோதிடம், ஓர்மம் என்பவற்றால் என்பதை அடிக்கடி நினைவு படுத்துவார். எல்லா கஷ்;டங்களையும் விட, அவமானங்களையும் விட எட்டவேண்டிய இலக்குகளுக்காக எட்டியடிவைப்பவர்களிடம் காணப்படும் அறிவார்ந்த அமைதி. சாத்தியமே இல்லாத இடத்தில் சாத்தியப்படுத்துபவர்களிடம் காணப்படும் அழகுமிக்க ஆற்றல், புகழையோ பாராட்டுக்களையோ விருதுகளையோ எதிர்பார்த்துப் பணியாற்றும் உலகில் சக மனிதர்களின் வாழ்க்கைக்கு, உயிர்ப்புக்கு, நிலைபேற்றிக்குப் பணியாற்றிய கருணையுள்ளம் என இவரது பண்புகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
கற்பதற்கு வசதிகள் இல்லாதவர்களுக்கும், வாசிப்பு வளங்கள் இல்லாத கல்விச் சாலைகளுக்கும் தனது சொந்தப்பணத்தில் உதவிகள் புரிந்து வந்துள்ளார். போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில், சுனாமியால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் நூலக வளங்களை இலவசமாக வழங்கி வாசிப்பை நேசிக்கும் சமுதாயத்தைகண்டு மகிழ்ந்தார்.
நூலகம் சார்ந்த நிகழ்வுகளின் போது இவரை பிரதமவிருந்தினராக அழைத்து மதிப்பளித்த பொது நூலகங்கள், சனசமூக நிலையங்கள், பிரதேச சபைகள், கல்லூரிகள் பல. அவ்வேளைகளில் தனது வாழ்க்கை அனுபவங்களை உதாரணங்களாகக்காட்டி குதூகலமான மொழியில் வாசிப்பை நேசிக்கும் வகையில் உரைகளை ஆற்றியுள்ளார்.
இவரது இவ்வித வெற்றிகளுக்கு உறுதுணையாக துணைவர் திரு. நடராசா சிவநேசன் அவர்களும் விளங்குவது பெரும் சிறப்பு எனலாம். தேவைப்பட்ட இடங்களுக்கு தேவைப்பட்ட நேரத்தில் அவரை அழைத்துச் செல்வது மட்டுமன்றி விழாக்கள், வைபவங்கள், கண்காட்சிகள் போன்றவற்றை ஒழுங்குபடுத்துவதிலும் இணைந்துபாடுபடுவார். ஸ்ரீகாந்தலட்சுமியின் வேகமான செயற்பாடுகளுக்கு நிதானமான சிவநேசனின் பண்புகளும் பெரிதும் பங்களிப்பு செய்துள்ளன.
தமிழ்த் தாய் பெற்றெடுத்த தகமையாளர், தன்னிகரில்லா நூலக அறிவியலாளர், மட்டற்ற புலமையாளர், மானிடநேசர், உயர்ந்த பண்பாளர், என்றெல்லாம் பெருமைப்பட வாழ்ந்து மனுக்குல மீட்புக்காக மகிமை பொருந்திய தேவபாலன் அவதரித்த திருநாளிலே 2019 டிசெம்பர் 25ஆம் நாளிலே மதிய வேளையில் நாம் எல்லாம் திகைத்தேங்க கண்ணீரில் கரையவைத்து இறைபதம் ஏகினார்.
ஸ்ரீ காந்தலட்சுமி அவர்களால் எழுதப்பட்ட அய்வுக்கட்டுரைகள் வருமாறு.
ஈழத்து தமிழ்ச் சமூகமும் ஆவணவாக்கமும்
நூல்விபர ஆவணவாக்கத்தில் ஈழத்தமிழர் பங்களிப்ப சில சான்றுகள்
சமூக அறிவியலுக்கான இருமொழிச் சொற்பொருளாய்வுக் களஞ்சிய மொன்றின் வடிவமைப்பு – சமுகவியற்றுறையை சிறப்புநோக்காகக் கொண்ட ஆய்வு
போருக்குப் பின்னரான சமூக அபிவிருத்தியில் பொது நூலகங்களின் புதிய பரிமாணங்கள்
இலங்கையின் இடைநிலைக்கல்விப் பாடநூல்களில் தகவல் அறிதிறன் கூறுகள்: – விஞ்ஞான பாடநூல்களை மையப்படுத்திய ஆய்வு
தகவல் தொழில்நுட்ப யுகமொன்றில் பாடசாலை நூலகங்களும் தகவல் அறிதிறனும் வளமான வாசிப்பு மானுடத்தின் மேம்பாடு
முப்பரிமாண நூலகம் சான்றாதாரக் கல்வியின் முதன்மை மூலகம்
கல்வி ஏள அறிவு
இணையம் ஏள நூலகம்
வீட்டுக்கொரு நூலகம்
ஈழத்தமிழர் வாழ்வியல் தொடர்பாக இவரால் சேகரிக்கப்பட்ட அனேகமான அரும்பொருள்கள் அவரது உறவினர்களால் 2022-12-30 ஆம் திகதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் அவர்களிடம் கையளித்துள்ளமை இங்கு குறிப்பிடப்படவேண்டியதொன்றாகும். இப் பொருள்கள் யாவும் அவரது சொந்தப்பணத்தினைச் செலவு செய்து அவ்வப்போது சேகரிக்கப்பட்டவையாகும். நடமாடும் நூதனசாலையாக எங்குமே பார்க்கமுடியாத – காணமுடியாத தேடல்களை தன்னகத்தே கொண்டு யாரும் அறியா வகையில் பணிசெய்தவர்.
கட்டுரையாளர் க. சௌந்தரராஜசர்மா (இளைப்பாறிய நூலகர்) அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.