யாழ்ப்பாணம் – அரியாலையைச் சேர்ந்த விசுவநாதன் ஆறுமுகம் என்பவருக்கு 1873 ஆம் ஆண்டில் பிறந்தவர். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் கொழும்பு உவெஸ்லி கல்லூரி ஆகியவற்றில் கல்வி பயின்று கல்கத்தாவில் உயர்கல்வி பெற்றவர். இலங்கை அரசின் அமைச்சராக இருந்த கதிரவேலு சிற்றம்பலம் கனகரத்தினத்தின் மருமகன் ஆவார். உயர் கல்வியை முடித்துக்கொண்ட கனகரத்தினம் வழக்கறிஞராகப் பணியாற்றினார். 1920 களில் கிராமியக் கல்வி அபிவிருத்திவாரி யத்தின் தலைவராகப் பணியாற்றினார். அத்துடன் யாழ்ப்பாண மாநகரசபைத் தலைவராகவும் 1924 சட்டவாக்கப் பேரவைத் தேர்தலில் வடமாகாணத் தெற்குத் தொகுதியில் இருந்து போட்டியிட்டு வெற்றி பெற்று சட்ட மன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார். இலங்கைப் பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவுவதற்கு இவர் முன்னின்று உழைத்தார். த சிலோன் பேட்ரியட் என்ற ஆங்கிலத் தேசிய வாரப் பத்திரிகை ஒன்றை நடத்தினார். தனது சொந்தச் செலவில் யாழ்ப்பாணத் தில் ஸ்டான்லிக் கல்லூரி என்றபெயரில் உயர்தரப் பாடசாலை ஒன்றை நிறுவினார். இப்பாடசாலைக்கு அதன் நிறுவுநரின் நினைவாக கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம் எனப் பின்னர் பெயரிடப் பட்டது. இவரது நினைவாக யாழ்ப்பாணத்தின் சாலை ஒன்று கனகரத்தினம் வீதி என்ற பெயருடன் விளங்குகிறது.