நவாலியில் 1945 ஆம் ஆண்டு நவெம்பர் 14 ஆம் திகதி பிறந்தவர். நவாலி அமெரிக்கன் மின் தமிழ்ப் பாடசாலையில் ஆரம்பக் கல்விபெற்று மானிப்பாய் மெமோறியல் கல்லூரியிலும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியிலும் தமது உயர் கல்வியைப் பெற்றுக்கொண்டார். ஆரம்பத்தில் திருகோணமலை பட்டணசபையில் நூலக சேவையில் இணைந்துகொண்ட இவர் பின்பு நெல்லியடி நூலகம், சங்கானை பட்டணசபை, இவற்றில் பணியாற்றி பின் மட்டக்களப்பு மாநகரசபை நூலகத்துக்கு இடமாற்றம் பெற்றார். நவாலி YMCA இன் அங்கத்துவராகவும் பின்பு அதன் தலைவராகவும் சமூகப் பணிகளை ஆற்றியதுடன், நவாலி YMCA நாடகங்களிலும் பங்கேற்றுள்ளார். நூலகத்துறை வரலாற்றிலே மட்டக்களப்பு மாநகரப்பொதுநூலக நூலகராக விளங்கிய நவாலி எஸ். ஜோன் செல்வராஜாவின் சேவை பொன்னெழுத்துக்களாற் பொறிக்கப்படவேண்டிய தாகும். மும்மொழிகளிலும் வல்லவரான ஜோன் செல்வராஜா திருகோணமலை பொது நூலகம், சங்கானை பொதுநூலகம் என்பவற்றிலும் கடமையாற்றிய செயல்வீரராக இனங்காணப்பட்டார். இந் நூலகங்களின் வளர்ச்சிக் காலப்பருவத்தில் நூலகராகக் கடமையாற்றியபடியால் உள்ளுராட்சி மன்ற நிருவாகிகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்களுடன் சுமூகமான முறையிலே அணுகி நூலக வளர்ச்சிப் பணிகளை முன்னெடுத்தவராக இவர் விளங்கினார். நாட்டில் குழப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் மட்டக்களப்பு மாநகர நூலகத்தில் கடமையேற்றபோதும் கூட, ஒரு நூலகனாக ஆற்றவேண்டிய பணிகளில் தான் மதிக்கும் கல்வியாளர்கள், தமிழறிஞர்கள், மேலதிகாரி கள், சக நண்பர்களின் ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள், முன்மாதிரிகளை துணை கொண்டு செயற்பட்டார். மட்டக்களப்பு மாவட்டம் சார்ந்த நூல்கள், வெளியீடுகள், கட்டுரைகள், பத்திரிகை, சஞ்சிகைத் தகவல்கள் எனக் கிடைக்கக்கூடிய ஆக்கங்கள் சம்பந்தமான நூற்றொகை ஒன்றினைப் பலத்த சிரமங்களின் மத்தியிலும் திரட்டினர்.“ Batticaloa Bibliography” என்னும் ஒரு தேர்ந்த பட்டியல் ஒன்றினை 1988 ஆம் ஆண்டளவில் தயாரித்து இருந்தார். இதனை வெளியிடும் பொருட்டு அம் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளித்திருந்தார். அவரால் தொகுக்கப்பட்ட நூற்றொகைநூல் 1989 ஆம் ஆண்டு பிரசுரஞ் செய்யப்பட்டது. 1989-03.01 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.