பலாலி வீதிச் சந்தியிலிருந்து இருபாலை வீதியில் ஒரு கிலோமீற்றர் தூரத்தில் இவ்வாலயம் அமைந்திருக்கின்றது. ஏறக்குறைய தொண்ணூறு வருடங்களுக்கு முன்னர் இவ்வீதியானது இருபுறமும் பற்றைகளும் மரங்களும் நிறைந்து புதர்கள் மண்டிக்கிடந்த பிரதேசமாகும். இடையிடையே தோட்டங்களும் மக்கள் நடமாட்டங்கள் மிகவும் குறைந்தளவான பிரதேசமாகவும் காணப்பட்டது. வீடுகளே இல்லாத இப்பகுதியானது மாலை நான்கு மணிக்குப் பின்னர் அமைதியாகிவிடும். தற்போது கோயில் அமைந்திருக்கும் காணியில் வேலப்பர் என்னும் ஓர் அன்பர் சிறுகுடில் அமைத்துக் குடியிருந்து தோட்ட நிலங்களைப் பராமரித்து வந்தார். இவர் இடையிடையே இந்திய யாத்திரை செய்வது வழக்கம். ஒரு முறை இந்திய யாத்திரைக்குச் சென்றிருந்த இவர் பழனி முருகனை வழிபட்டுத் திரும்புகையில் நான் இங்கிருந்து ஒரு கல்லை எடுத்துச் சென்று வழிபட்டால் என்ன? என்ற சிந்தனை மேலீட்டால் ஒரு கல்லை எடுத்து வந்து தான் குடியிருந்த காணியில் சூலத்துடன்வைத்து கற்பூரம் கொழுத்தி வழிபட்டு வந்தார். காலப்போக்கில் ஓரிரு வீடுகள் கட்டி குடியேற்றம் நடந்தது. இவர்களுடன் தோட்டக்காரர்களும் இணைந்து 1952 இன் ஆரம்பத்தில் ஆடிமாத முதலாவது வெள்ளிக்கிழமையில் பொங்கலும் அடுத்தநாளாகிய சனியன்று வேள்வியும் நடத்தப்பட்டது. மக்களின் பெருக்கம் அதிகரிக்க அனைவரும் ஒன்றுகூடி வேள்வியினை நிறுத்தி பூசை வழிபாடு மட்டும் நிகழ்த்தப்பட்டது. காணி உரிமையாளர்கள் கோயிலிருந்த கொட்டிலைப் பிடிங்கியெறிந்தனர். மக்கள் பாதையோரத்திலிருந்த விழாத்தி மரத்தடியில் பொங்கலிட்டு வழிபட்டனர். காணி உரிமையாளரிடம் மூன்று பரப்புக்காணி வாங்கப்பட்டு சிறு கொட்டிலில் மீண்டும் பழனியாண்டவரை நிலைநிறுத்தினர். 1989 ஆம் ஆண்டளவில் அத்திபாரம் வெட்டப்பட்டு 1992 ஆவணித் திருவோணத்தில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. மீண்டும் ஆலயம் புனரமைக்கப்பட்டு 2011 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. வைகாசி விசாகத்தை இறுதிநாளாகக் கொண்டு ஆடிமாதப் பொங்கலுடன் அலங்காரத்திருவிழா பத்து நாட்கள் நடைபெற்றது. பின்னர் 1993 இலிருந்து வைகாசி விசாகப் பூரணை நாளில் தீர்த்தோற்சவம் நடைபெறும் வகையில் பத்து நாட்கள் மகோற்சவம் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
