Monday, December 30

முருகானந்தன், அ.செ

0

1921 ஆம் ஆண்டு மாவிட்டபுரத்தில் பிறந்து அளவெட்டியில் வாழ்ந்தவர். இவரது படைப்புகள் மனிதநேயப்பண்பு உடையனவாகும். கட்டுரை, சிறுகதை, நாவல், குறுநாவல் ஆகிய துறைகளில் தடம்பதித்தவர். அ.செ.மு என இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்ட எழுத்தாளர். அளவெட்டி செல்லக்கண்ணு முருகாநந்தம் அவர்கள் ஈழத்து நவீன தமிழ் சிறுகதை முன்னோடிகளில் ஒருவர். தெல்லிப்பளை மகாஜனக்கல்லூரியில் மாணவனாகத் திகழ்ந்த காலத்திலேயே சிறந்த எழுத்தாளராக விளங்கியவர். அப்பொழுதே ஈழகேசரி ஆசிரியர்குழுவில் சேர்ந்து தீவிரமாக எழுத்துத்துறையில் ஈடுபட்டவர். இதே காலத்தில் மறுமலர்ச்சிச் சங்கத்தில் முக்கிய உறுப்பினராக இருந்து செயற்பட்டவர். ஈழகேசரியின் பிரதம ஆசிரியராகவும் பணியாற்றியவர். அ.செ.மு. ஈழகேசரியில் பீஸ்மன் என்ற புனைபெயரில் ஆங்கில நாவல் ஒன்றை அலிபாவாவின் குகை என்ற பெயரில் தொடர்ந்து மொழிபெயர்த்து வெளியிட்டவர். ஈழகேசரியில் வண்டிச்சவாரி என்றபெயரில் தொடர்கதை எழுதியவர். ஜேர்மன் மொழியில் வில்கெம்ஸிமித் என்பவர் எழுதிய நாவலை போட்டி என்ற பெயரில் மொழிபெயர்த்தவர். திருகோணமலையில் வாழ்ந்த காலத்தில் 1950களில் எரிமலை என்ற பத்திரிகையை ஆரம்பித்து நடத்தியதுடன்,  புகையில் தெரிந்தமுகம் என்ற புனைகதையையும் எழுதியவர். யாத்திரை என்ற நவீனத்தை ஈழகேசரியில் 1957 களில் எழுதி வெளியிட்டவர். 1958இல் ஈழகேசரி வெளிவராமல் நின்று விட்டதனால் ஈழநாட்டுப் பத்திரிகையில் தொடர்ந்து வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது. இவர் சிறுகதை,நவீனம் ஆகிய புனைகதைத் துறைகளிலும் ஈடுபட்டிருந்த போதிலும் சிறுகதை எழுதுவதிலேயே சிறந்து விளங்கியவர்.இவரால் எழுதப்பெற்ற சிறுகதைகளில் சிலவற்றைத் தொகுத்து யாழ்ப்பாண மாவட்ட கலாசாரப் பேரவையால் “மனிதமாடு” என்ற பெயரில் 1980 களில் வெளியிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. 1989 யூலை 22 மல்லிகை இதழில் எழுத்தாளர் குகன் என்பவர் இவரது சிறப்பையும் பெருமையையும் விதந்து குறிப்பிடுகின்றார். காளிமுத்துவின் பிரஜாவுரிமை, மனிதமாடு போன்ற இவரது சிறுகதைகள் காலத்தால் அழியாதவை. அழகான தமிழ் நடை, உணர்வு வெளிப்பாடுகள், மண்வாசனை, சமூகப்பிரச்சினைகள் என்பன இவரது சிறுகதைகளினது சிறப்பம்சங்களாகும். தமிழ்ச் சிறுகதைகளை ஆராயும் எவரும் அ.செ. முருகானந்தனை மேற்கோள் காட்டத் தவறுவதில்லை. அண்மையில் பதினைந்து ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகள் மொழிபெயர்த்து சிங்களத்தில் வெளியிடப்பட்டன. அவற்றில் இவரது காளிமுத்துவின் பிரஜாவுரிமை என்ற சிறுகதையும் ஒன்றாகும். 1998.10.02 ஆம் நாள் இறைவனடி சேர்ந்தார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!