1903-03-03 ஆம் நாள் யாழ்ப்பாணம் – கொக்குவில் என்னும் ஊரில் பிறந்த இவர். காலக் கணிப்பினை திரியாங்கம் என்னும் பெயரில் கணித்து வழங்கினார். காலப்போக்கிலேயே வாக்கிய பஞ்சாங்கம் என்னும் பெயரில் கணிக்கப்பெறுவதற்கான முயற்சிகள் இவரால் மேற்கொள்ளப் பட்டு கணிக்கப்பட்டதாகும். இன்று இவரது பெயரைத் தாங்கியதாக வெளிவருகின்ற இரகுநாதையர் பஞ்சாங்கம் உலகம் பூராவுமுள்ள தமிழ் மக்களது வாழ்வில் ஆலய உற்சவங்கள், திருமணங்கள், நல்ல நாட்காரியங்கள் என்பவற்றினை தீர்மானிக்கும் மாபெரும் சக்தியாக விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணம் நாவலர் வித்தியா சாலையில் ஆரம்பக் கல்வியினையும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இடைநிலைக் கல்வியினையும் கற்று ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடங்களில் சிறப்புத்தேர்ச்சி பெற்றவர்.1924 ஆம் ஆண்டு தந்தையாரின் சோதிட பரிபாலன மடத்தினை செவ்வனே நடத்தும் பொறுப்பினை ஏற்று தனது பட்டப்படிப்பினை நிறுத்தினார். சோதிட பரிபாலினி என்ற வார சஞ்சிகையினை வெளியிட்டதோடு சரசோதி மாலை என்ற நூலினை முழுவதுமாக அச்சிட்டு வெளியிட்டார். பரகிதம் என்ற நூலிற்கு விளக்கவுரையினையும் எழுதி வெளியிட்டுள் ளார். வருஷப் பெயர் விளக்கம், ஆசௌச தீபிகை, அமாவாசைத் தருப்பண விதி, நித்திய கரும விதி, சிவாலய தரிசன விதி, பிள்ளையார் கதை, நவக்கிரக மகா மந்திரம் போன்ற நூல்களையும் வெளியிட்ட இப் பெரியார் 1969.07.30 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.