1884-07-04 ஆம் நாள் யாழ்ப்பாணம் கோப்பாய் என்ற இடத்தில் பிறந்து நல்லூர் வைமன் வீதியில் வாழ்ந்தவர். சாதிப்பாகுபாடுகள் நிறைந்த காலகட்டத்தில் வலுக்குறைந்த சமூகச் சிறார்களை உயர்நிலைக்கு ஆக்கிவைத்த பெருமையுடைய இவர் தான் கற்ற சட்டத்தொழிலைக் கைவிட்டு ஏழை எளிய மக்களுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்தவர். சைவத்திருமுறைகள் பேணப்பட வேண்டும். அவற்றினைப் பண்ணோடு பாடவேண்டும் என்ற நிலைப்பாட்டில் தமிழகத்திலிருந்து தேவாரப் பண் ஓதுவார்களை வரவழைத்து திருமுறைகளை நல்லமுறையில் ஓதுவதற்குரிய வழிமுறையைத் தோற்றுவித்தவர். சைவமும் தமிழும் வாழ வேண்டுமென்பதற்காக தனது அயராத உழைப்பினால் சைவ வித்தியாவிருத்திச் சங்கத்தினை நிறுவி அதன்மூலம் நெடுந்தீவில்-10, புங்குடுதீவில்-06, வேலணையில்-08, நயினாதீவில்-02, எழுவைதீவில்-01, காரைநகரில்-06, வலிகாமம்
மேற்குப்பகுதியில்-21, வலிகாமம் வடக்கு, தெற்குப் பகுதிகளில்-14, வலிகாமம் கிழக்கில்-06, யாழ்ப்பாண நகரப்பகுதிகளில்-12, தென்மராட்சி பிரதேசங்களில்-29, வடமராட்சி பிரதேசங்களில்- 17,பளையில்-03,பூநகரியில்-04, வவுனியாவில்-05, முல்லைத்தீவில்-07, மன்னாரில்-01, பதுளையில்-01, நாவலப்பிட்டியில்-03, கண்டியில்-02, கிளிநொச்சியில்-03, புத்தளத்தில்-02 என எல்லா இடங்களிலும் 163 தமிழ் வித்தியாசாலைகளையும், 07 ஆங்கிலப் பாடசாலைகளையும், 07 ஆதரவற்ற பிள்ளைகள் பாடசாலைகளையும், 15 நெசவுநிலைப்பாடசாலைகளையும், 15 வகையான பனையோலை மூலம் வாழ்வளிக்கும் குடிசைக்கைத்தொழில் நிறுவனங்களையும் எமது மண்ணில் உருவாக்கி பலருக்கு கல்வியறிவையும், தொழில்வளத்தினையும் கொடுத்து வாழவைத்த பெருந்தகையாளன். 1970-03-12ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்