Wednesday, May 21

சிவநாயகம். எஸ்

0

1930-07-09 ஆம் நாள் யாழ்ப்பாணம்- கொக்குவிலில் பிறந்தவர். கொக்குவில் இந்துக் கல்லூரியிலும், வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியிலும் கல்வி கற்றார். கல்வியை முடித்ததும் தனது சட்டக்கல்லூரிப் படிப்பிற்காக கொழும்பு சென்ற இவர்,இரண்டாம் ஆண்டு சட்டப்படிப்பின் போது பத்திரிகைத்துறை ஆர்வம் காரணமாக 1953 முதல் 1955 வரை கொழும்பில் இருந்து வெளியாகும் டெய்லி நியூஸ் ஆங்கில நாளிதழில் நாடாளுமன்ற நிகழ்வின் செய்தி ஆசிரியராகப் பணியாற்றினார். அதன்பின்னர் டெய்லி மிரர் பத்திரிகையில் 1961 முதல் 1969 வரை பணியாற்றினார். டெய்லி மிரர் பத்திரிகையில் போரம் (Forum) என்றபெயரில் எழுதிய பத்தி எழுத்துக்கள் பிரபலமானவை. 1970 களில் இலங்கைச் சுற்றுலாச் சபையின் பிரசுரங்களின் ஆசிரியராக இருந்தார். “Leisure” என்ற பெயரில் ஒரு ஆங்கில இதழையும் நடத்தி வந்தார். வால்ட்டர் தொம்சன் என்ற அமெரிக்க நிறுவனத்திலும் பணியாற்றினார். சன்சோனி ஆணைக்குழுவின் விசாரணைப் பதிவுகளை வெளிக் கொணரும் “Sansoni Commission Evidence” என்ற ஆங்கில இதழிலும் பணியாற்றியுள்ளார். 1980களின் பின்னர் யாழ்ப்பாணம் வருகைதந்து ‘சற்றர்டே ரிவ்யூ” (Saturday Review) என்றபெயரில் ஆங்கில வார இதழை ஆரம்பித்தார். இவரது பத்திரிகை நிலையம் இராணுவத்தினால் எரியூட்டப்பட்டு, அரசால் தடை செய்யப்பட்டது. இதனை அடுத்து இவர் கடல் மார்க்கமாக தமிழ்நாடு சென்று அங்கு தமிழ் தகவல் மையத்தில் பணியாற்றினார். தமிழ்நேசன் என்ற பத்திரிகையை தமிழகத்தில் வெளியிட்டார். இதில் அவர் ஈழத்தமிழர்களின் போராட்டங்களை விரிவாக எழுதினார். இதனால் இந்திய அரசு இவரை தடாச் சட்டத்தில் சிறையில் அடைத்தது. சிறையில் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் நிபந்தனையின் பேரில் 1993 ஆம் ஆண்டில் இவருக்கு சிறையில் இருந்து விடுதலை கிடைத்து பிரான்சு நாட்டில் அடைக்கலம் பெற்றார். பிரான்சில் இருந்து அவர் லண்டன் சென்று புலம்பெயர்ந்த நிலையில், ‘Hot Spring’ ’ என்ற ஆங்கில மாத இதழை அங்கு ஆரம்பித்து நடத்தினார். Sri Lanka: Witness To History (2005), The Pen and The Gun: Selected Writings, 1977-2001, Tamil Information Centre, London, 2001 ஆகிய இரு நூல்களையும் வெளிக்கொணர்ந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இலங்கை திரும்பிய இவர்,தனது 80 ஆவது அகவையில் 2010-11-29 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!