அறிமுகம்
ஆசிரியராய், அதிபராய், கல்விப்பணிப்பாளராய் பணியமர்ந்த இவர் ஈழத்து எழுத்தாளர். கலைத் திறானாய்வாளர், சமூக சிந்தனையாளர், உளவள ஆலோசகர். சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், கவிதைகள், விமர்சனம், நாடகம் என பன்முகப் பரிணாமம் கொண்டவர். கோகிலா மகேந்திரன் என்று தன்னை கலையுலகில் அடையாளப்படுத்தி பல விடயங்களை எழுதியுள்ள பன்முகக் கலைஞர். இவரின் எழுத்துக்கள் இலங்கையின் பத்திரிகைகள் பலவற்றில் இடம் பிடித்துள்ளதுடன் பல்வேறு தளமுனை களை கொண்டமைந்த நூல்கள் பலவற்றை வெளியிட்ட யாழ்ப்பாணத்து ஆளுமைகளில் முன்னிற்கும் ஒருவர்.
பிறப்பும் கல்வியும்
தெல்லிப்பளை விழிசிட்டி சைவப்பிரகாசவித்தியாசாலை அதிப ராகப் பணிபுரிந்த சைவ சமய எழுத்துக்களுக்காக சாகித்திய விருது பெற்ற செல்லையா சிவசுப்பிரமணியம் செல்லமுத்து தம்பதியரின் புத்தரியாக 1950-11-17ஆம் நாள் பிறந்தவர்.
தனது ஆரம்பக்கல்வியை பன்னாலை சேர் கனகசபை வித்தியா சாலையில் (அப்போதைய விழிசிட்டி சிவஞான வித்தியாசாலை) ஆரம்பித்தார். உயர்கல்விக்காக தெல்லிப்பளை மகாஜனக் கல்லூ ரியில் இணைந்து உயிரியல் துறையில் உயர் கல்வியைக் கற்று பேராதனைப் பல்கலைக்கழக மருத்துவபீடத்திற்கு மகாஜனக் கல்லூரி மாணவியாக தெரிவு செய்யப்பட்டார். சமூகத்தின் தேவை நோக்கிய நகர்வுகளில் கோகிலா மகேந்திரன் அவர்களை கடவுளும் நகர்த்தினார். இறைவன் திருவுளம் எதுவோ அதுவே நடக்கும் என்பது போல கோகிலா மகேந்திரன் அவர்கள் மருத்துவத்துறையிலிருந்து விஞ்ஞானப்பட்டதாரியாக வெளியேறி 1974 இல் யாழ்ப்பாணம் பொலிகண்டி இந்து தமிழ்க்கலவன் பாடசாலையில் ஒரு விஞ்ஞான ஆசிரியராகப் பணியை ஆரம்பித்தார். அதன் பின்னர் கீரிமலை நகுலேஸ்வரா மகா வித்தியாலயம், தெல்லிப்பளை மகாஜனக்கல்லூரி, தெல்லிப்பளை யூனியன் கல்லூரி ஆகியவற்றிலும் கற்பித்து, 1994இல் தெல்லிப் பளை சைவப்பிரகாச வித்தியாசாலையின் அதிபராகி, 1999இல் வலிகாமம் கல்விவலயப் பிரதிக்கல்விப்பணிப்பாளராக உயர்வு பெற்ற இவர் 2007 இல் அரச பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.
கல்வித்துறைக்குச் சமாந்தரமாக உளவியல் பற்றியும், உளவளத் துணை பற்றியும், மனவடுவுக்கு அளிக்கப்படும் உளச்சிகிச்சை பற்றியும் கற்றவர். அரச பணியில் இருந்த காலத்திலேயே எழுத்துப் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதோடு நாடகத் துறையையும் முறையாகக் கற்று வட இலங்கை சங்கீத சபையின் நாடக ஆசிரியர் தரப் பரீட்சையில் தேர்வு பெற்று கலாவித்தரா னார். கலைவழி இறைபணி என்பது போல நாடகவழி உளச் சிகிச்சை முறையொன்றினை பல வருடங்களாக நாடகம் கற்ற மாணவர்களை இணைத்து செயற்படுத்தி வந்தவர்.
திருமணம்
1976 ஆம் ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார். அளவெட்டி அருணோதயக் கல்லூரியின் அதிபராகப் பணிபுரிந்த கல்வியியலாளரும் அதிபருமான கிருஸ்ணர் மகேந்திரராஜா அவர்களை கரம் பற்றி உலகம் உவக்கும் ஆற்றலாளனான பிரவீணன் என்னும் நாமம் பூண்ட பிள்ளைச் செல்வத்தைப் பெற்று கல்வியிலும் வாழ்விலும் மிக உயர்ந்த நிலையில் வாழ வைத்து தம் கடமையினை செவ்வனே நிறைவேற்றினார்.
கோகிலா மகேந்திரனும் கலையுலகும்
தனது பாடசாலைக் காலத்தில் அதாவது க.பொ.த சாதரண தரம் படித்துக்கொண்டிருந்த காலத்தில் மலர்களைப் போல் தங்கை என்ற குறுநாவலை எழுதினார். 1972 ஆம் ஆண்டு குயில் என்னும் சஞ்சிகையில் பிரசுரமான இவரது முதலாவது படைப்பான அன்பிற்கு முன்னால் என்ற சிறுகதையோடு கலைவாழ்வில் அறிமுகமானார். தொடர்ந்து நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ள இவர் விழி, விழிசைக்குயில், பசுந்தி, பதுமலாஞ்சனன் ஆகிய புனைபெயர்களிலும் எழுதியுள்ளார். இவரது கதைகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவை ஆறு சிறுகதைத் தொகுதிகளாக வெளி வந்துள்ளன. சிறுகதை, நாவல், நாடகம், சிறுவர் இலக்கியம், உளவியல், அறிவியல், கல்வி போன்ற துறைகளில் பல நூல்களை ஆக்கி அமைதியாக வாழ்ந்து வருகின்றார். மாணவர்களை நாடகக் கலை மூலம் வழிப்படுத்தியும் சிறந்த நாடகப்பனுவல்களை எழுதியது மட்டுமல்லாது அதனை அரங்கேற்றியும் காட்டிய அரங்கியலாளர்.
தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி ஆசிரியர்களான அமரர் செ.கதிரேசர்பிள்ளை, த.சண்முகசுந்தரம், போன்ற நாடக, இலக்கிய ஆளுமைகளால் புடம்போட்ப்பட்டு கட்டமைக்கப்பட்ட நினைவு களை என்றும் நன்றியுடன் பகிர்ந்து வரும் இவர் தெல்லிப்பளை கலை இலக்கிய களத்தினை தனது கலைக்களத்திற்கான மையப் புள்ளியாக மாற்றிக் கொண்டார். இக்களத்தினூடாக பல அறிஞர் களை ஒன்றிணைத்து இலக்கியப் பயணம் மேற்கொண்டவர். குறிப்பாக அமரர் சைவப்புலவர் சு.செல்லத்துரை, கலாநிதி நா.சுப்பிரமணிய ஐயர், அனு.வை.நாகராஜன், ஏ.ரி.பொன்னுத் துரை, கலாநிதி நா.சண்முகலிங்கன் போன்ற மூதறிஞர்களின் அன்பும் அரவணைப்புடனும் கலை இலக்கியக்களம் பயணித்தது இவருடைய ஆளுமையின் ஒன்றினைப்பாகும்.
நாடகலைஞராக கோகிலா மகேந்திரன்
இருபத்து மூன்று நாடகங்களை எழுதி நெறியாள்கை செய்துள்ளார். இவற்றில் ஆறு நாடகங்களை நெறியாள்கை செய்ததோடு தானும் ஒரு பாத்திரத்தில் நடித்துள்ளார். இரண்டு நாடகங்களின் தயாரிப்பாளராகவும் தன்னை வெளிப்படுத்திய இவர் வானொலி நாடகங்களையும் எழுதியுள்ளார். பாடசாலைக் காலத்தில் ஆசிரியர்களின் நெறியாள்கையில் ஐந்து நாடகங்களில் நடித்துள் ளார். குயில்கள் என்ற நூல் இவர் எழுதிய சில நாடகங்களின் தொகுப்பு. கோலங்கள் ஐந்து என்ற நாடகத் தொகுதியின் நூலாசிரியர்களில் இவரும் ஒருவர். கேள்விகளின் முழக்கம் எனும் இவரது நாடகம், வட இலங்கைச் சங்கீத சபையின் நாடக கலாவித்தகர் தேர்வுக்காக எழுதப்பட்டதாகும். தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியின் நாடக ஆசிரியராய் நாடகத் துறையில் கல்லூரியின் வளர்ச்சியில் பங்கெடுத்தவர்.
இலங்கை வானொலி நிகழ்ச்சிகள்
இலங்கை வானொலியில் பூவும் பொட்டும், இசையும் கதையும், நவசக்தி, கலைக்கோலம், இளவேணில் போன்ற வானொலி சார் நிகழ்வுகள் பலவற்றில் பங்கு பற்றியுள்ளார். சைவநற்சிந்தனை என்ற தொடரில் ஒலித்த இவரது குரல் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தது.
கோகிலா மகேந்திரனின் நூல்கள்
சிறுகதைகள்
மனித சொரூபங்கள்
முரண்பாடுகளின் அறுவடை
பிரசவங்கள்
வாழ்வு ஒரு வலைப்பந்தாட்டம்
முகங்களும் மூடிகளும்
வரிக்குயில்
நாவல்கள்
துயிலும் ஒருநாள் கலையும்
தூவானம் கவனம்
சந்தனச் சிதறல்கள்
உள சமூகக் கட்டுரைத் தொகுதிகள்
எங்கே நிம்மதி
மனக்குறை மாற வழி
மனமெனும் தோணி (உளவியல் கட்டுரை)
மனச்சோர்வு
உள்ளம் பெருங்கோயில்
பதின்மவயதுப் பிரச்சினைகளும் அவற்றைக் கையாளுதலும் (நினைவுப்பேருரை)
திருமனிதர்வாழ்வு
உளவியல் சார் புனைவுச் சரிதை
உள்ளத்துள் உறைதல்
சிறுவர் விஞ்ஞானப் புனைவுகள்
விஞ்ஞானக் கதைகள்
அறிவியல் கதைகள்
புலப்பெயர்வு சார் புனைவுகள்
புலச்சிதறல் நெஞ்சம்
பெண்ணிய உளவியல் சார் தொகுப்பு
நேர்கொண்ட பாவை
விசேட உளவளத்துணை சிகிச்சை முறைகள்
சீர்மியத்தில் சிறப்பு முறைகள்
பெற்றோரியம்
குடும்பம் ஒரு கதம்பம்
தனிமனித வரலாறு
கலைப்பேரரசு ஏ.ரி.பி – அரங்கக் கலையில் ஐம்பதாண்டு (தனிமனித ஆளுமையும் நாடகமும் தொடர்பான நூல்)
தங்கத் தலைவி
பாவலர் துரையப்பாபிள்ளை
விழி முத்து
கிராம வரலாறு
மல்லாகத்தின் வரலாறும் அதன் அபிவிருத்தியும்
நாடக அரங்கு
கிரேக்கத்தின் தொல்சீர் அரங்கு (நாடக அறிமுறை நூல்)
குயில்கள்
உள்ளக் கமலம்
சின்னச் சின்னப் பிள்ளைகள்
மகிழ்வுடன் வாழ்தல்
முற்றத்தில் சிந்திய முத்துக்கள்
விருது பெற்ற நூல்கள்
குயில்கள் – தேசிய இலக்கியப்பேரவை
முகங்களும் மூடிகளும் – தேசிய இலக்கியப்பேரவை
உள்ளம் பெருங்கோயில் – எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம்
நேர்கொண்ட பாவை – தமிழ் இலக்கிய நிறுவகம்
சாகித்ய இலக்கிய விருது பெற்ற நூல்
பிரசவங்கள் (சிறுகதைத்தொகுதி – 1986)
அரசு இலக்கிய விருது பெற்ற நூல்
வாழ்வு ஒரு வலைப்பந்தாட்டம் (சிறுகதைத் தொகுதி – 1997)
அரசு இலக்கிய விருதுக்காக விதந்துரைக்கப்பட்ட நூல்கள்
புலச்சிதறல் நெஞ்சம் (2014)
நேர்கொண்டபாவை (2016)
திருமனிதர்வாழ்வு (2018)
வடகிழக்கு மாகாண இலக்கிய விருது பெற்ற நூல்
வாழ்வு ஒரு வலைப்பந்தாட்டம்
வடக்கு மாகாண இலக்கிய விருது பெற்ற நூல்கள்
மனமெனும் தோணி (2008)
குடும்பம் ஒரு கதம்பம் (2023)
வழங்கிக் கௌரவிக்கப்பட்ட விருதுகள்
கொடகே தேசிய இலக்கிய விருது (2009)
தமிழியல் விருது – எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் (2010)
முதலமைச்சர் விருது – பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வடக்கு மாகாணம் (2014)
மூத்த நாடக எழுத்தாளர் விருது – றோயல் கல்லூரித் தமிழ் மன்றம்-கொழும்பு (2015)
ரூபராணி ஜோசப் நினைவு இலக்கிய விருது – மக்கள் கலை இலக்கிய மன்றம் -கண்டி (2017)
ஐ .பி .சி தமிழ் பன்முக ஆளுமை விருது (2019)
Inspirational woman விருது – மகளிர் விவகார அமைச்சு – வடமாகாணம் (2019)
மகாஜனா விழுது விருது – பழைய மாணவர் தாய்ச் சங்கம் (2019)
சிவத்தமிழ் விருது – சிவத்தமிழ்ச் செல்வி அறநிதியச் சபை- தெல்லிப்பளை (2020)
குறமகள் ஞாபகார்த்த பல்துறை வாழ்நாள் சாதனையாளர் விருது – வென்மேரி அறக்கட்டளை (2022)
அரச கேசரி விருது – இயல் துறை – யாழ் மாநகர சபை (2023)
வாழ்நாள் சாதனையாளர் விருது – இரா .உதயணன் இலக்கிய நிறுவகம் (2023)
தமிழ் வித்தகர் விருது – சைவப்புலவர் செல்லத்துரை அறக்கட்டளை (2024)
இலக்கிய வித்தகர் – இந்துசமய ,தமிழ் கலாசார இராஜாங்க அமைச்சு (1986)
கலைச்சுடர் – வலிவடக்குப் பிரதேச செயலகம் (2004)
சமூக ஒளி – கத்தோலிக்கக் கலை இலக்கிய வட்டம் (2010)
கலாபூ~ணம் – இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம் (2014)
சமூக திலகம் – கொட்டடி சனசமூக நிலையமும், கிராம அபிவிருத்திச் சங்கமும்
கலைப்பிரவாகம் – வட இலங்கைச் சங்கீத சபை (2017)
திருமுறை நெறிச்செல்வர் – திருவாவடுதுறை ஆதீனம் (2018)
செம்புலத்திருமகள் – சுன்னாகம் சிவன் சிறுவர் கழகம் (2023)
கலா வித்தகர் விருது – வட இலங்கைச் சங்கீத சபை (10.03.2002)
2025ஆம் ஆண்டு பவள விழாவைக் கொண்டாடிய மூத்த ஆளுமை கோகிலா மகேந்திரன் அவர்கள் யாழ்ப்பாணத்தலிருந்து உலகம் பூராவும் ஒளி ஒலிபரப்பாகி வருகின்ற டான் தொலைக்காட்சி நிறுவனத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருதினைப் பெற்று விருதுக்கு பெருமை சேர்த்துள்ளார். உலகறிந்த படைப்பாளியான இவர் மேலும் மேலும் எமது சமூகத்திற்கு வழிகாட்டியாய் வாழ யாழ்ப்பாணப் பெட்டகம் நிழலுருக்கலைக்கூடம் பேருவகையுடன் வாழ்த்தி நிற்கின்றது.








































