அறிமுகம்
வாழ்நாட் பேராசிரியர் பொன்.பாலசுந்தரம்பிள்ளை அவர்கள் யாழ்ப்பாணம் தீபகற்பம் வேலணையைச் சேர்ந்தவர். புவியியல் கல்வியில்; மிகுந்த பாண்டித்தியம் உடையவரான பேராசிரியரவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினூடாக தமிழ்ச்சமூகத்தின் கல்வி வளர்ச்சியில் பாரிய செல்வாக்கினை செலுத்தியவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் என்ற உயரிய கல்வி நிறுவனத்தினூடாக அவர் ஆற்றிய அர்ப்பணிப்பான பணிகளின்; உச்சம் தொட்ட ஆளுமையாளன் என்பதற்கு இன்று எம்முன்னே வாழ்ந்து கொண்டிருக்கின்ற பலர் நிதர்சன சாட்சிகளாய் உள்ளனர். அவரின் சிந்தனைகளும் மக்கள் நேயம் சார்ந்து அவரால் முன்னெடுக்கப்பட்ட அளவிட முடியாத கல்வி மற்றும் பொதுப்பணிகளும் விருட்சமாய் வளர்ந்துள்ளது. புவியியலாளன், கல்வியியலாளன், சமூகநலப் பணியாளன், சிந்தனையாளன், சமூக உருவாக்கற் சிற்பி, மிகச்சிறந்த பேச்சாளன் எனப்பல்வேறு வகிபாகமுடைய பேராசிரியரவர்கள் விரிவுரையாளராக, பேராசிரியராக, துறைத்தலைவராக, கலைப் பீடாதிபதியாக, துணைவேந்தராக என உயர் பதவிகளை அலங்கரித்த வர். இன்றும் எமதினத்தின் மூதறிஞராய், வழிகாட்டியாய் அமுத விழாவினைக் கடந்தும் எம்மை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்.
பிறப்பும் கல்வியும்
பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை அவர்கள் வேலணையைச் சேர்ந்த ஆசிரிய தம்பதிகளான பண்டிதர் அம்பலவாணர் பொன்னுத்துரை, ஆசிரியை பொன்னுத்துரை நாகரத்தினம் அவர்களின் நான்காவது புதல்வனாக 1941-04-29ஆம் நாள் ஆறு சகோதரர்களுடனும், ஐந்து சகோதரிகளுடனும் பிறந்தவராவார். அவர்கள் யாவரும் பல்கலைக்கழகப் பட்டதாரிகள். அவரின் நெருங்கிய உறவினர் பலர் ஆசிரியர்களாவார். அவரின் தந்தை பாடசாலை அதிபராக இருந்த போதும் விவசாயத்துறையில் அதிக ஈடுபாடு கொண்டவர். பேராசிரியர் அவர்கள் தனது ஆரம்பக் கல்வியை 1946-1949 வரை கரம்பன் சண்முகநாத வித்தியாலத்திலும், இடைநிலைக் கல்வியின் முற்பகுதியை ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரியில் 1954-1960; வரையிலும், பிற்பகுதியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் கற்றார். இந்துக் கல்லூரி விடுதியில் ஆறு வருடங்கள் தங்கியிருந்து கற்ற அவர் கல்லூரியின் மாணவத் தலைவர்களில் ஒருவராகவும், பல சங்கச் செயற்பாடு களிலும், கடேற் அணியிலும் அங்கத்தவராக இருந்து துடிப்புடன் செயலாற்றினார். அன்றிலிருந்து இன்றுவரையும் இந்துக்கல்லூரியின் செயற்பாடுகளில் தன்னை முற்றாக இணைத்துக் கொண்டுள்ளார்.
திருமணம்
யாழ்ப்பாணம் அத்தியடியைச் சேர்ந்த செகராஜசிங்கம் மகேஸ்வரி தம்பதிகளின் புத்திரியான இறாஜலகஷ்மி அம்மையாரை 1969 ஜூன் 29ஆம் நாளன்று கரம்பற்றி திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார். தம் அறமான இல்லற வாழ்வில் மூன்று பிள்ளைச் செல்வங்களைப் பெற்றார். அவர்களனைவரையும் கல்வியில் உயர வைத்து தந்தையின் கடமையைச் செவ்வனே நிறைவேற்றியுள்ளமை “தந்தை மகற்காற்றும் உதவி அவையத்து முந்தியிருப்பச் செயல”; என்ற வள்ளுவர் குறள் வழி மகத்துவம் பெறுகின்றது.
பல்கலைக்கழகப் பிரவேசமும் பணிகளும்
1961இல் இலங்கைப் பல்கலைக்கழம் பேராதனையில் புவியியலைச் சிறப்புப் பாடமாகக் கற்று, சிறப்பாக சித்தி பெற்று புவியியல் சிறப்புக்கலைமாணியாக வெளியேறினார். 1965இல் உதவி விரிவுரை யாளராக பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இணைந்தார். 1969இல் தனது கலாநிதிப் படிப்பிற்காக இங்கிலாந்தில் ‘டர்ஹாம்’ பல்கலைக் கழத்தில் இணைந்து கலாநிதி ஆய்வை “The Hierarchy of Central Places in Northern Ceylon” என்ற ஆய்வுப்பொருளில் மேற்கொண்டு 1972இல் கலாநிதிப் பட்டம் பெற்று நாடு திரும்பி பேராதனைப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகப் பணியேற்றார். 1978இல் சிரேஷ்ட விரிவுரையாளராகப் பதவி உயர்வு பெற்றார். பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி மூலக் கற்கை நெறியை வலுப்படுத்துவதில் சிறந்த பங்களிப்பை வழங்கினார்.
1980இல் செப்ரெம்பரில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் புவியியல் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். 1985இல் பிரித்தானியா பொது நூலக அமைப்பின் புலமைப் பரிசு பெற்று இங்கிலாந்தில் ஒரு வருடம் தனது கல்விப் புலமையை மேம்படுத்தினார். பல்கலைக் கழகங்களில் நாற்பத்தொரு வருடம் பணியாற்றினார். அதனுள் இருபத்தாறு வருடங்கள் பேராசிரியராகப் பணி புரிந்துள்ளளார். புவியியல் துறையின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றிய பேராசிரியர் என்னும் பெருமைக்குரியவராவர்.
2006இல் அவருக்கு யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் அவரின் சேவையைக் கருத்திற் கொண்டு ”வாழ்நாள் பேராசிரியர்” என்னும் நியமனத்தை வழங்கியது. பல்கலைகழகப் பேராசிரியர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றாலும் தொடர்ந்தும் கல்விப் பணிகள் சிலவற்றைச் செய்து வருவதுடன் அதனுடன் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டுள்ளார். இலங்கையின் அனேகமான பல்கலைக்கழகங்கள் பேராசிரியரின் புவியியல் அறிவுசார் புலமையைத் தங்கள் சமூகத்திற்குப் பெற்றுக் கொடுப்பதற்கும் தவறவில்லை. இடைவரவு விரிவுரையாளராக நியமனம் வழங்கி தங்கள் பல்கலைக்கழகத்தில் பேராசிரியரின் அறிவுப்பரம்பலை கையளிப்பு ஏற்படுத்தியுள்ளமை பேராசிரியரின் அறிவுப்புலம் முதன்மை பெற்றுள்ளது.
பேராசிரியர் அவர்கள், தனது கல்விப் பணிக்கப்பால் கல்வி நிர்வாகத்திலும் பெரும் பங்காற்றியுள்ளார். பேராதனைப் பல்கலைக் கழகத்தில் மாணவர் நலன் சேவை அமைப்பின் பிரதி இயக்குனராக வும் செயற்பட்டுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஒன்பது வருடங்கள் புவியியல் துறைத் தலைவராகவும், இரு தடவைகள் கலைப்பீடாதிபதியாகவும், ஏழு வருடங்கள் துணைவேந்தராகவும், ஒன்பது தடவைகள் பேரவை உறுப்பினராகவும் 2000இல் இலங்கைப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் சங்கத்தின் தலைவராக வும் பணிகள் பல புரிந்துள்ளார்.
அவர் பீடாதிபதியாக இருந்த காலத்தில் கலைப் பீடத்தில் கல்வி விரிவாக்கத்தை மேற்கொண்டார். சமூகவியல் பாடத்தில் சிறப்புக் கலை, உளவியல், மனைப்பொருளியல் சமுதாய-பிராந்தியத் திட்ட மிடல், மானுடவியல், ஊடகவியல் ஆகிய பாடங்களைப் புதிதாக அறிமுகப்படுத்தினார். மேலும், இராமநாதன் நுண்கலை பிரிவில் பாரிய மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டு முதன் முறையாக ஆற்றுகைத்துறை உருவாக்கப்பட்டது. முதன்முறையாக கர்நாடக சங்கீதம், பரத நாட்டியத் துறைகளில் பட்டதாரி கற்கை நெறிகளை ஆரம்பித்தார். மேலும், சித்திரமும் வடிவமைப்பும் என்னும் புதிய கற்கைநெறியையும் அறிமுகப்படுத்தி தமிழ்ச் சமூகத்தின்; உயர் கல்வி வாய்ப்பை விரிவாக்கம் செய்தார்.
கலைப்பீடத்தின் கீழ் வெளிவாரிக் கற்கைநெறியை உருவாக்கி கலைத்துறையிலும் வணிகத்துறையிலும் பட்டப்படிப்புகளை மேற்கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதனால், வெட்டுப்புள்ளியால் பல்கலைக்கழகத்துக்கு அனுமதி கிடைக்கப்பெறாத மாணவர்கள் பலர் பயனடைந்தனர். பெரும் எண்ணிக்கையான பட்டதாரிகள் இதன்மூலம் உருவாக்கப்பட்டனர்.
மேலும், விளையாட்டுத்துறையிலும் மீன்பிடிக் கற்கைத்துறையிலும் டிப்ளோமா கற்கைநெறிகள் ஆரம்பிக்கப்பட்டு இதன்வழியாக பலர் வேலை வாய்ப்புப் பெறும் சந்தர்ப்பங்களை உருவாக்கிக்கொடுத்தார்.
சமூகத்தை வலுவூட்டவும் தொழிலாளர் திறனை மேம்படுத்தவும் புறநிலைக்கற்கை அலகும் தொழிலாளர் கற்கை அலகும் உருவாக்கப் பட்டன. புறநிலைக் கல்வி அலகின் செயற்பாடு சமூகத்தைப் பல்கலைக்கழகத்துடன் நெருக்கமாக இணைத்தது. சமூக நலன், சமூக அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு குறுகிய காலக் கற்கை நெறிகள் பலவற்றைப் பேராசிரியர் உருவாக்கியமை குறிப்பிடத் தக்கது.
1995இல் ஏற்பட்ட வலிகாமம் இடப்பெயர்வினால் பல்கலைக்கழக திருநெல்வேலி வளாகம் முற்றாகச் செயலிழந்ததுடன் அதிகளவிலான பாதிப்புக்கும் உள்ளாகியது.
1996 ஏப்ரலில் யாழ்ப்பாணம் மீள்குடியமர்வுடன் பல்கலைக்கழகத்தை இயக்க வேண்டிய நிலை உருவானது. இந்நிலையில், 1996 மே மாதம் பதில் துணைவேந்தராக நியமிக்கப்பட்ட பேராசிரியர் அவர்கள் தனது கடின உழைப்பால் பல்கலைக்கழக உட்கட்டமைப்புகளை சீராக்கி, குறுகிய காலத்தில் பல்கலைக்கழக சமூகத்தை அணி திரட்டி பல்கலைக்கழகத்தை இயங்க வைத்தார். யுத்தம் காரணமாக முடிவு பெறாதிருந்த உட்கட்டுமானங்கள் அவரின் காலத்தில் கட்டி முடிக்கப்பட்டன. பல்கலைக்கழகம் பல வழிகளில் முன்னேற்றம் கண்டு கொண்டது. 1999இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தனது வெள்ளிவிழாவைச் சிறப்பாகக் கொண்டாடியது.
சிந்தனை தூண்டும் பேச்சாளன்
பேராசிரியரவர்கள் எந்த விடயத்திலும் எதனை வேண்டுமானாலும் பேசுவதற்கும் கருத்துக்களை முன்வைப்பதற்கும் ஒருபோதும் பின்நின்றதில்லை. தனது 80வயதிலும் எம் சமூகத்திற்கான தகுந்த கருத்துக்களை முன்வைத்த வண்ணமேயுள்ளார். ஆய்வரங்கங்கள், மாநாடுகள், கருத்தரங்குகள், விழாக்கள் மற்றும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளிலும் அரச, அரசார்பற்ற கருத்தாடல்களிலும் அரிய கருத்துகளை முன்வைத்து மனித இனத்தின் சிந்தனைத்தூண்டியாக – சமூக மாற்றத்துக்கான ஊக்கியாக விளங்குவதில் பேராசிரியருக்;கு நிகர் பேராசிரியரே. பண்டைய வரலாறுகள், பண்பாட்டு விழுமியங் கள், பொருளாதாரம், நவீன உருவாக்கம், விஞ்ஞானம், அறிவியல் ஆன்மிகம், கிராமங்கள், நகரங்கள், தனிமனித வரலாறு என அத்தனை விடயங்களிலும் ஒரு பெட்டகமாய் திகழ்கின்றார். எம்மினத்தின் மாபெரும் சொத்தான சிந்தனைத்தூண்டி. அவருடன்; பழகும் வாய்ப்பும் அறிவுப்பரம்பலை விரிவாக்கம் செய்யும் திறணையும் பெற்று பேராசிரியரவர்களது காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பது நாம் செய்த தவப்பேறேயாகும்.
பேராசிரியரின் ஆக்க இலக்கியப் பணிகள்
பேராசிரியர் ஆற்றிய நினைவுப் பேருரைகள்
1- 1994இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சேர் பொன்னம்பலம் இராமநாதன் நினைவுப்பேருரை – திருகோணமலை மாவட்டத்தின் குடிசனத்தொகையும் அபிவிருத்தியும்.
2- 2005இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் அழகையா துரைராஜா நினைவுப் பேருரை – வடமராட்சிப் பிரதேசத்தின் அபிவிருத்தித் திறமுறைகள்.
3- 2015இல் சேர் பொன்னம்பலம் இராமநாதன் நினைவுப் பேருரை – வடமாகாணத்தின் குடித்தொகை வேறுபாடுகளும் குடியடர்த்தியும், குடிப்பரம்பலும் – 1871-2022.
4- யாழ்ப்பாணம் கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய நினைவுப்பேருரை – வட இலங்கையின் அபிவிருத்திக்கான இடஞ்சார்புத் திறமுறைகள் – ஓர் ஆய்வு.
வெளியிட்ட நூல்கள்
Jaffna District in Facts and Figures – 1987
- பேராசிரியர் பொன் பாலசுந்தரம்பிள்ளை
- கலாநிதி கே.றூபமூர்த்தி
Trincomalee : Geo – Politics, Ethic Dimension and Development Potentigi 2002 Addressing Root Causes of the Conflict: Land problems in North – East SriLanka – 2005.
- Shahul H.Hasbullah
- P.Balasuntharampillai
- Lalinga Tudor Silva
தேசவளம் – வெளியீடு : மணிவிழாச்சபை, யாழ்ப்பாணம்.-2002
மணிவிழா மலர் – 2002
இலங்கையில் தமிழரின் குடித்தொகை மாற்றங்கள் – சேமமடு பதிப்பகம்,கொழும்பு, 2018.
நூல்கள், விழா மலர்கள், பத்திரிகைகளில் வெளிவந்த ஆசிரியரின் கட்டுரைகள்
1- “யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பிரதேசங்களின் இன்றைய அபிவிருத்தி நிலையும் எதிர்கால அபிவிருத்தி திறமுறைகளும்” யாழ்ப்பாணம் – மொழியும் வாழ்வும்-
தொகுப்பு – கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ் கலாநிதி மயில்வாகனம் இரகுநாதன்.
2- Education for demographic planning in SriLanka Project –
Workshop proceedings : planning for reconstruction and redevelopment in Northern SriLanka .
- Overall profile and Northern SriLanka Past, Present and Future.
- The population Structure of northern SriLanka
3- கிளிநொச்சி மாவட்டத் தொன்மையின் மூலங்கள் 2012
1- கிளிநொச்சி மாவட்டத்தின் குடித்தொகையும் வளர்ச்சிப்போக்கும்.
2- கிளிநொச்சி மாவட்டத்தின் பின் தங்கிய பிரதேசங்களின் ஒருங்கிணைந்த அபிவிருத்தித் தந்திரோபாயம்.
4- வேலணை ஒரு வரலாற்று அறிமுகம்
1- வேலணைக்கிராமம் அன்றும் இன்றும்
2- சரவணைக் கடல் நீரேரியும், வேலணைச் சிற்றருவியும்.
5- வேலணைப்பிரதேச செயலக கலை இலக்கியப் பெருவிழா சிறப்பு மலர் – 2006
1- தீவுப்பகுதித் தெற்கின் இடஞ்சார்பு அபிவிருத்தித் திறமுறைகள்
6- வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரி நூற்றாண்டு விழா மலர் 1911 -2011
1- வடபிரதேசத்திற்கான புதியதோர் நிர்வாக மையம் – மாங்குளம்.
7- யாழ்ப்பாணப் புவியியலாளன் – இதழ் 2 (1983 – 1984)
வன்னிப் பிரதேசத்தின் பொருளாதார அபிவிருத்தியில் மத்திய இடங்களின் பங்கு
8- யாழ்ப்பாணப் புவியியலாளன் – இதழ் 5 (1987 – 1988)
இலங்கைப் பல்கலைக்கழக புவியியற் கல்வி வளர்ச்சி – 1940-1950
9- யாழ்ப்பாணப் புவியியலாளன் – இதழ் 9 (1994)
யாழ்ப்பாணக் குடா நாட்டிற்கான அபிவிருத்தித் திறமுறைகள்
10- ஊற்று – 1975
இலங்கைத் தமிழ் பேசும் மக்களின் குடிப்புள்ளியியல் பண்புகள்
11- யாழ்ப்பாணப் புவியியலாளன் – இதழ் 1
இலங்கையின் குடிசனத்தொகை வளர்ச்சியும் பரம்பலும் மாற்றங் களும்.
12- வன்னிப் பிராந்திய தமிழாராய்ச்சி மகாநாட்டு மலர் – 1993
1- வன்னிப் பிரதேசத்தின் குடிசனத்தொகை வளர்ச்சியும் பரம்பல் மாற்றங்களும்
2- வன்னிப் பிரதேசத்தின் பொருளாதார வளர்ச்சியில் மத்திய இடங்களின் பண்பு.
13- ஊற்று – 1974
வட இலங்கையில் நகராக்கமும் நகர வளர்ச்சியும்.
14- திருக்கேதீஸ்வரம் – திருக்குடத்திருமஞ்சன மலர் – 1976
மன்னார் மாவட்டத்தின் குடித்தொகையும், வளங்களும், அபிவிருத்தியும்.
15- Jaffna – Edited by K.Indrapala -1983 “Population”
16- நல்லைக்குமரன் மலர் – 1994 “நல்லூர்ப் பகுதிக்கும் புனித நகர் அந்தஸ்து”
17- நல்லைக்குமரன் மலர் – 1995
“யாழ்ப்பாண நகருக்கு ஒரு பொதுச் சதுக்கம் தேவை”
18- இன்கிலாப் -Vol.15 (1986ஃ87)
“இலங்கையில் முஸ்லிம்கள் : ஒரு குடிசனப்புவியியல் நோக்கு”
19- For the sake of the grace given to me. Essays in honor of Bishop Ambalavanar compiled by s.Jebanesan, M.A,B.D,Phd, “The Population structure of Northern SriLanka”
20- இந்து தருமம் – 04-04-1977 இந்து மாணவர் சங்கம், பேராதனைப் பல்கலைக்கழகம்
“இலங்கையிற் சைவர்கள் : குடிசனப்புவியியல் நோக்கு”
21- “Some aspects of Population chages in SriLanka – 1947 – 1971” The SriLanka journal of south Asian studies – vol 2, No.2 – 1982.
22- “The Hierarchy of Central places in the Trincomalee district” The SriLanka journal of south Asian studies – vol 2, No.2 – 1981.
23- “Jaffna : Past, prefect, and future – A development Perspective South Asia – Developmental – Ideological currents. Silver jubileecommemorative vol.1
24- “The Travel pattern and service areas in the northern SriLanka” The SriLanka journal of south Asian studies – vol 2, No.2 – 1982.
25- Hydrological base of human settlements in the Islands of the Jaffna peninsula – climatological hotter 30, Tsukuba – 1982.
26- நயினாதீவு மணிபல்லவ கலாமன்றம் – 50வது ஆண்டு நிறைவு விழா சிறப்பு மலர் – 05-07-2012.
“ நயினாதீவு அபிவிருத்தித் திறமுறைகள்”
27- Charter Presentation ceremony souvenir – Lions clubs – Chunnakam – 1990, “Central places and spatial development in Northern SriLanka
28- ஊற்று – Vol – 16இ ழே – 10 – “யாழ்நகரில் குளங்களின் அபிவிருத்திக்கான வாய்ப்பு”
29- ஊற்று – 1975 – “இலங்கைத் தமிழ் பேசும் மக்களின் குடிப்புள்ளியியல் பண்புகள்”
30- ஊற்று – Vol – 15இ ழே – 01 – “யாழ்ப்பாண மாவட்டத்தின் இடஞ்சார் அபிவிருத்தியில் கொடிகாமத்தின்பங்கு”
31- பாரதிதாசன் சனசமூக நிலைய வெள்ளிவிழா மலர் – 1994
“யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு ஓரு சுற்றுவட்டப் புகையிரதப்பாதை”
32- மானிப்பாய் இந்து மகளிர் கல்லூரி வெள்ளிவிழா மலர் – 1989
“மானிப்பாய் : ஒரு நகர ஆய்வு”
பல்கலைக்கழகத்திற்கு வெளியில் பேராசிரியர்
பேராசிரியர் அவர்கள் பல்கலைக்கழகத்துக்கு வெளியில் பல பொறுப்பான பதவிகளை வகித்துள்ளார். இப்பதவிகளனைத்தும் தமிழ் மக்களின் மேம்பாட்டில் பாரிய பங்கினை வகித்துள்ளமை கண்கூடு. அந்த வகையில்
1- வடக்கு மாகாண புனர்வாழ்வு, புனருத்தாரண சபையின் இயக்குநர்.
2- அரசமொழி ஆணைக்குழுவின் அங்கத்தவர்.
3- உள்ளுராட்சி வட்டார நிர்ணய மீள்பரிசீலனைக் குழு உறுப்பினர்.
4- மாகாண சபை எல்லை நிர்ணய மீள்பரிசீலனை குழு உறுப்பினரர்.
5- சமாதானத்துக்கும் நல்லிணக்கத்துக்குமான மக்கள் சபை தலைவர்.
6- யாழ்ப்பாணப்பெட்டகம் நிழலுருக்கலைக்கூடத்தின் காப்பாளர் களில் ஒருவர் .(இன்றுவரை)
யாழ்ப்பாணம் மீள்குடியமர்வு காலத்தில் அவரின் பணி மிகவும் காத்திரமானது எனலாம். உள்ளுராட்சி எல்லை நிர்ணய செயல்பாட்டில் அவரின் பணி நாடளாவிய ரீதியில் முக்கியத்துவம் பெற்றிருந்தது. அவரின் செயற்பாட்டால் நாடளாவிய ரீதியில் உள்;ராட்சி சபைகளில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் வலுவாக்கப்பட்டது. பேராசிரியர் அவர்கள் சங்கங்கள், சபைகள் பலவற்றில் அங்கத்தவராக இருந்து சிவில் சமூக செயற்பாடுகளைச் சிறப்பாக மேற்கொண்டார்.
யாழ்ப்பாணம் மீள்குடியமர்வுக் காலத்தில் சமாதானத்துக்கும் நல்லிணக்கத்துக்குமான மக்கள் சபை தலைவராக இருந்து செயலாளர் அமரர் எஸ். பரமநாதனுடன் இணைந்து பணிகள் பல செய்தார். இச்சபைக்கு நல்லை. ஆதீன குரு பரமாச்சார்ய சுவாமிகளும் பேராயர் சவுந்தரநாயகமும் அன்று போஷகர்களாக இருந்தனர். இச்சபை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் அன்றாடப் பிரச்னைகள் பலவற்றுக்குத் தீர்வு கண்டது. பேராசிரியர் அவர்கள் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை, பொதுநூலகம், யாழ். மாநகர சபை, யாழ். பிரதேச செயலகம், யாழ். மாவட்ட செயலகம் ஆகியவற்றில் காலத்துக்குக் காலம் பல்வேறு ஆலோசனை, அபிவிருத்தி குழுக்களில் இணைந்து பணியாற்றியுள்ளார்.
பேராசிரியர் அவர்களின் எழுத்துக்களும் பேச்சுக்களும் குடித்தொகை, நகராக்கம், பிரதேச அபிவிருத்தி, தமிழ் மக்களின் பிரச்னைத் தீர்வு, சமூக மேம்பாடு, உயர்கல்வி விரிவாக்கம் போன்றவை பற்றியதாகக் காணப்படுகின்றன. தாராளக் கல்வி நோக்குடையவரான பேராசிரியர் அவர்கள் சமூகத்தின் எல்லாப் பிரிவினரும் சிறந்த கல்வியைப் பெறுவதன் மூலமே அறிவுசார் பொருளாதாரத்தை முன்னெடுத்து வீட்டையும் நாட்டையும் உயர்வடையச் செய்யலாம் என்பதில் உறுதியாகவுள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தால் கௌரவ இலக்கிய கலாநிதி பட்டம் வழங்கப்பட்ட பேராசிரியர் அவர்கள் நல்லை ஆதீன சுவாமிகளால் ‘ஒப்புரவாளர்’ என்னும் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப் பட்டதுடன், யாழ். மாநகராட்சி மன்றத்தால் அவரின் சமய, சமூகப் பணிகளை கௌரவிக்கும்முகமாக “யாழ்” விருது, GLOBAL ASIAN ACHIEVERS COUNCIL அமைப்பானது அவரின் சமூகசேவை, அபிவிருத்தி, தலைமைத்துவம், சமூக நல்லிணக்கம் ஆகிய பணிகளுக்காக MAN OF THE YEAR – 2025 என்னும் விருதும், 2023ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பெட்டகம் – நிழலுருக்கலைக்கூடத்தினால் நடத்தப்பட்ட முப்பெரும் தமிழ் விழாவில் பணித்திருந்தகை விருதும் வழங்கிக் கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.
பல்கலைக்கழக கல்விக்கடமைகளில் பேராசிரியர்
பீடங்களில் வகித்த கல்விப் பதவிகள்
1- தற்காலிக விரிவுரையாளர் – 1965-10-18-1967-10-023 பேராதனைப் பல்கலைக்கழகம், புவியியல்.
2- தகுதி காண் உதவி விரிவுரையாளர் 1967-10-04-1972-10-31 பேராதனை பல்கலைக்கழகம்
3- பிரித்தானியா டர்காம் பல்கலைக்கழக விரிவுரையாளர் – 1970-1971
4- விரிவுரையாளர் பேராதனைப் பல்கலைக்கழகம் 1972-11-01 – 1978-10-31
5- சிரேஸ்ட தர விரிவுரையாளர் 1978-11-01 – 1980-08-31
6- பேராசிரியர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 1980-09-01 – 1990-08-31
7- சிரேஸ்ட பேராசிரியர் 1990-09-01 – 2006-09-30
8- வாழ்நாட்பேராசிரியர் 2006-10-01 இலிருந்து
இடைவரவு விரிவுரைப் பணிகள்
1- இடைவரவுப் புவியியல் பேராசிரியர் – பிரித்தானியா டர்காம் பல்கலைக்கழகம் 1985-1986
2- இடைவரவுப் புவியியல் பேராசிரியர் – தென்கிழக்குப் பல்கலைக்கழகம் 2013-2014 கல்வியாண்டு
3- இடைவரவுப் புவியியல் பேராசிரியர் – இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகம் 2015,16,17,18 கல்வியாண்டு
4- இடைவரவுப் புவியியல் பேராசிரியர் – கொழும்புப் பல்கலைக்கழகம் 1973,1974 கல்வியாண்டு.
5- இடைவரவுப் புவியியல் பேராசிரியர் – வித்தியாலங்கார பல்கலைக்கழகம் 1976,1977 கல்வியாண்டு
பரீட்சைப் பணிகள்
1- கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகளின் இணைக்கட்டுப் பாட்டாளர், பிரதம பரீட்சகர், உதவிப்பரீட்சகர் – 1965 தொடக்கம் 2022 வரை
பல்கலைக்கழக உயர் பதவிகள்
1- புவியியல் கற்கைநெறித் துறைத்தலைவர்
2- கலைப்பீடாதிபதி
3- பேரவை உறுப்பினர்
4- பதில்துணைவேந்தர் 1996-07-01 தொடக்கம் 1997-02-27 வரை
5- துணைவேந்தர் 1997-02-28 தொடக்கம் 2003-03-03 வரை
6- பல்கலைக்கழக மாணிய ஆணைக்குழு உறுப்பினர் 2011 – 2020
பேராசிரியரின் யாழ்ப்பாணப பல்கலைக்கழக அபிவிருத்திப் பங்களிப்பு
1- உயர் பட்டப் படிப்புகள் பீடம் ஆரம்பிக்கப்பட்டமை
2- முகாமைத்துவ வணிக பீடம் உருவாக்கப்பட்டமை
3- ஊடக வளங்கள் கற்கை நெறித்துறை உருவாக்கப்பட்டமை
4- இராமநாதன் நுண்கலைப்பீடத்தின் பட்டச்சான்றிதழ், கல்விப் போதனாசிரியர்களின் தரம் என்பன மறுசீரமைக்கப்பட்டமை
5- வெளிவாரிப் பட்டக் கற்கை நெறி உருவாக்கமும் விரிவாக்கமும்.
6- புறநிலை அலகுகள் படிப்பகம் ஆரம்பிக்கப்பட்டமை
7- தொழிலாளர் கற்கை நெறி உருவாக்கியமை
8- டிப்ளோமா தர விளையாட்டு விஞ்ஞான அலகு உருவாக்கப்பட்டமை
9- சித்திரமும் வடிவமைப்பும் கற்கை நெறி உருவாக்கியமை
10- மனைப்பொருளியலில் பட்டக்கற்கை உருவர்க்கியமை
11- நான்கு வருட சிறப்ப்பட்டக்கற்கையாக உளவியல்துறை உருவாக்கப் பட்டமை
12- நான்கு வருட சிறப்புப்பட்டக் கற்கை நெறியாக சுவடிகள் காப்பகத்துறை உருவாக்கப்பட்டமை
13- நான்கு வருட சிறப்புப் பட்டக்கற்கையாக சமூகமும் பிராந்திய திட்டமிடலும் கற்கைநெறி உருவாக்கப்பட்டமை
14- சமூகவியல் நான்கு வருட சிறப்புக்கலைமாணி பட்டமாக உருவாக்கப்பட்டமை
15- நான்கு வருட சிறப்ப்பட்டக்கற்கையாக மானுடவியல் துறை உருவாக்கப்பட்டமை
16- ஊடக வழங்கள் துறை நான்கு வருட சிறப்புக்கலைமாணி உருவாக்கப்பட்டமை
17- தொழில் வழிகாட்டல் அலகில் மேலதிக அபிவிருத்திகள் உருவாக்கப்பட்டமை
18- பல்கலைக்கழக பழைய மாணவர் சங்க உருவாக்கம்
மேலும் அகில இலங்கை சமாதான நீதவான் என்னும் பட்டம் நீதி அமைச்சினால் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். இவரின் பணிகள் மேலும் தொடர வேண்டும் என்பதே எமது வேண்டுகோள்.
Post Views: 21