மஞ்சமருதிகாடு என்ற குறிச்சியில் அம்பலவாண விநாயகமூர்த்தி என்ற பெயருடன் சிறுகோயிலில் அந்தணர் மரபினைச் சாராத ஒருவர் ஒருவேளை பூசையினைச் செய்து வந்தார். மடாலயமாக இருந்த இவ்வாலயம் 1817 ஆம் ஆண்டு ஆகமமுறைப்படி கற் கோயிலாக அமைக்கப்பட்டது. மஞ்சலியாடு, மஞ்சமலிய காடு, மஞ்சமருதிகாடு என்ற பெயர்களால் அழைக்கப்பட்டு வந்த இக்கோயில் திருமுருக கிருபாநந்தவாரியாரவர்களால் மஞ்சவனப்பதி என்ற சிறப்புத் திருநாமம் இடப்பட்டு அது இன்றுவரை நிலைத்துள்ளமை மனங்கொள்ளத்தக்கது.1989,2002ஆகிய ஆண்டுகளில் புனராவர்த்தன வேலைகள் செய்யப்பெற்று மஹா கும்பாபிஷேகம் நிறை வேற்றப்பட்டுள்ளது. சங்கரசுப்பையர், திருமுருக கிருபானந்தவாரியார், பன்றிமலைச்சாமி, தருமபுரம் ஆதீனம் திருஞானசம்பந்தபிள்ளை, கொக்குவில் குமாரசாமிப்புலவர், குப்பிளான் செல்லத்தரை, நல்லையாதீன சுவாமிநாத தம்பிரான் போன்ற மகான்கள் இத்தலத்திற்கு வருகைதந்து பிரசங்கங்களை மேற்கொண்டிருந்தமை இவ்வாலயமும் இப்பிரதேச மக்களும் பெற்ற பெரும்பேறாகும்.