இலங்கையில் சோழராட்சி ஏற்பட்ட காலங்களிற்கு முன்பாகவே இருந்து வருவதாகக்கூறப்படும் இவ்வாலயமானது வரணி வடக்கு மாசேரி என்னும் கிராமத்தில் கிழக்காக காட்டுக்கரையிலே அமைந்திருக்கின்றது. கைலாயத்திலிருந்து இரண்டு இடபங்கள் இலங்கைக்கு வந்ததாகவும் அவற்றிலே ஒன்று சமாதியடைந்த இடம் காங்கேசன்துறை என்றும் மற்றையது மாசேரியிலும் சமாதியடைந்தது என்றும் கூறப்பட்டுவரும் கர்ணபரம்பரைக்கதையினூடாக அறியமுடிகின்றது. இவ்வாறு சமாதியடைந்த இரண்டு இடங்களிலும் குருநாதர் கோயில்கள் தோற்றம் பெற்றதாகக் கூறப்படுகின்றது. குருநாதரைத் தெய்வமாகக் கொண்டு 25 பரிவாரத் தெய்வங்கள் பூசிக்கப்படுகின்றன. ஆகமமுறைகள் சாராத நிலையில் நீண்டகாலப் பாரம்பரியங்களையும் மரபுகளையும் பேணி பரம்பரை பரம்பரையாகப் பின்பற்றப்படும் பத்ததி ஒழுங்கின்படி பூசைகள் நடைபெற்று வருகின்றன.