Thursday, April 17

சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் – மண்டைதீவு முகப்புவயல், யாழ்ப்பாணம்

0

மண்டைதீவின் தெற்கே வசித்துவந்த முத்தர் என அழைக்கப்பட்ட முத்துத்தம்பி என்னும் பெரியார் தனது காணியிலே ஐயனார் கோயிலை அமைத்து வணங்கி வந்தார். இவர் இறந்த பின் இவரது மகன் குமாரவேலு என்பவர் இக்கோவிலைப் பராமரித்துவந்தார். இவரை முத்தர்மோன் என்று மக்கள் அழைப்பார்கள். ஆன்மீக ஈடுபாட்டின் காரணமாக இவர் துறவு நிலையை மேற்கொண்டவராகக் காணப்பட்டார். கடையிற் சுவாமிகள் இங்கு வந்து ஏனைய துறவியருடன் சேர்ந்து கொண்டார். கடையிற்சுவாமிகள் இந்த இடத்திலே ஓர் அற்புதத்தை நிகழ்த்திக் காண்பித்தார். முத்தர்மோனை அழைத்து தன் முன்பு இருக்கும்படி பணித்தார். பின்பு தான் வைத்திருந்த குடையை விரித்துப் பிடித்துக்கொண்டு தன் இருபக்கத்திலும் இருவரை நிற்கும்படி பணிந்தார். இச்சந்தர்ப்பத்தில் அவர் அருகில் இருந்த முத்தர்மோன் திடீரென ஏதோவோர் சக்தியால் உந்தப்பட்டு அருகில் கிடந்த கற்களை எல்லாம் பொறுக்கி எடுத்து கடையிற் சுவாமிகளை முருகனாகவும் அவரஅருகில் நின்ற இருவரையும் வள்ளி தெய்வானையாகவும் கருத்திற்கொண்டு முருகப்பெருமான் திருக்கோயிலை அடையாளப்படுத்தினார். பின்னர் தெளிந்து நடைபெற்றவையாவும் முன்னைத் தவவிசேடத்தினால் நிகழ்ந்தவை என்றுணர்ந்து அவ்விடத்திலேயே முருகன் கோயிலைக் கட்டினார். ஆரம்பத்தில் இவரால் வணங்கப்பட்ட ஐயனாரை புதிதாக அமைந்த கோயிலின் வெளிப்பிரகாரத்தில் தாபித்து பரிவாரக் கோயிலாக அமைத்துக் கொண்டார். ஆண்டுதோறும் வரும் ஆனி பௌர்ணமியில் திருக்குளிர்த்தி, பொங்கல் என்பன நடைபெறும். இக்காலத்தில் பறைமேளம் வாசிக்கப்படும். புதிதாக முருகன் கோயில் அமைக்கப்பட்ட பின்னர் ஐயன் கோயில் என்றழைக்கப்படும் வழக்கு மறைந்து முகப்புவயல்சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் என்று அழைக்கும் வழக்கம் ஏற்பட்டது. கடையிற்சுவாமிகள் வாழ்ந்த காலம் கி.பி. 1810-1875 எனக் குறிப்பிடப்பட்டு உள்ளதால் இக்கோயில் இக்காலப்பகுதிக்குள் அமைந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. குமாரவேலுவின் ஆண் வழிச் சந்ததியினரே தலைமுறை தலைமுறையாக இக்கோயிலைப் பராமரித்து வருகின்றனர். முத்தர்மோன் என்றழைக்கப்பட்ட குமாரவேலுவின் சமாதி இக்கோயிலின் தெற்கே உள்ள இவரது காணியில் கட்டப்பட்டுள்ளது.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!