இற்றைக்கு நூற்றைம்பது வருடங்களுக்கு முன் கொக்குவிலுக்கும் தாவடிக்குமிடையேயான பிரதேசத்தில் நாகபாம்பு படமெடுப்பது போல காட்சிதரும் தெய்வீக வேப்பமரத்தின் கீழ் வேல் ஒன்று அமையப் பெற்றிருந்தது. நள்ளிரவு வேளைகளில் தினமும் பூசைகள் நடைபெறுவது போல மணியோசை, வேத ஒலிகள் கேட்பதை அவ்வூர் மக்கள் அவதானித்தும் உணர்ந்தும் வந்தமையினால் அவ்விடத்தில் சிறு கொட்டிலால் கோயிலமைத்து வழிபாடாற்றி வந்தார்கள். வேற்பெருமான் வேப்பமரத்தடியில் கோயில் கொண்டதனால் வேம்படி முருகமூர்த்தி கோயில் என அழைக்கப்படலாயிற்று. 1972 இல் நிறைவேற்றப்பட்ட கும்பாபிகேத்தினைத் தொடர்ந்து பத்து நாட்கள் அலங்கார உற்சவம் நடைபெற்று வந்தது. பத்தாம் நாளில் தீக்குளித்து நேர்த்திகளை நிறைவேற்றும் பக்தர் வெள்ளம் அலைமோதும் திருவிழாவாக அமைந்திருந்தது. அலங்காரத் திருவிழா இன்று பதினொரு நாட்கள் மகோற்சவமாக நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.