Sunday, June 16

கலாபூஷணம் கலைவேந்தன் ம.தைரியநாதன்

0

ஈழத்திருநாட்டின் கலைவளர்ச்சியில் தனித்துவம் மிக்க படைப்பாளியாக விளங்கியவர் கலைவேந்தன் ம.பொனிபஸ் தைரியநாதன் ஆவார். இசைநாடகத்துறையில் சாதனைகள் புரிந்த மகத்தான கலைஞன். இவர் இசைநாடக அண்ணாவி, நடிகர், நாடக எழுத்தாளனாகத் திகழ்ந்தவர். பல்வகை நாடகங்களிலும், ஈழத்துச் சினிமா, குறும்படங்களிலும் நடிகராகச் செயற்பட்டார். அரங்கில் வேடவுடை, ஒப்பனை போன்ற காண்பியக் கலைகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். தனது சாரீர வளத்தினாலும் ,சரீர அசைவியக்கத்தாலும், உணர்சி வெளிப்பாட்டினாலும் தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களைப் பார்ப்போர் மனங்களில் நிலைத்திருக்கும் வகையில் படைப்பாக்கம் செய்துவந்தார். அரங்க ஆற்றுகைக் களத்தே ரசிகர்களிடத்து எதிர்பார்ப்புமிக்க கலைஞனாக மிளிர்ந்தார். தனது இறுதிக்காலம் வரையிலும் கலைச் செயற்பாடுகளோடு தன்னைக் கரைத்துக்கொண்ட  கலைஞன்.

இவர் 1949-06-05 ஆம் நாள் வடபகுதியை வளப்படுத்தும் சுன்னாகம் பகுதியில் தன் பெற்றோருக்கு ஆறாவது கடைசி மகனானப் பிறந்தார். தந்தை பெயர் மரியான், தாய் பெயர் வைத்தியானம். தனது ஆரம்பக் கல்வியை யா/சுன்னாகம் றோமன்கத்தோலிக்கத் தமிழ்க் கலவன் பாடசாலையிலும், பின்னர் யா/ஸ்கந்தவரோதயாக் கல்லூரியிலும் உயர் தரம்வரை கல்விபயின்றார். கல்விகற்ற காலங்களில் கலையிலும், விளையாட்டிலும் வல்லவராகத் திகழ்ந்தார்.குடும்பச் சூழ்நிலை காரணமாக கல்வியை இடைநிறுத்திவிட்டு வியாபாரத்தில் ஈடுபட்டதோடு பின்னாளில் (1980முதல்) காங்கேசன்துறைச் சீமெந்துக் கூட்டுத்தாபன ஊழியராகவும்,தொழில்முறை நாடகக் கலைஞனாகவும் தொழிற்பட்டார்.

நவாலியூரைச் சேர்ந்த பண்டாரி, சின்னம்மா தம்பதியரது இரண்டாவது மகளாகிய தங்கேஸ்வரியை தனது மனையாளாக விரும்பி ஏற்றதுடன், தான் வாழ்ந்தகாலம் வரை அவரைச் சிறப்பாக வாழவைத்து கலை வழியிலும் உயரவைத்தார். இவர்களது இனிய வாழ்வின் பயனாக ஐந்து பிள்ளைச் செல்வங்களைப் பெற்று இன்புற்றனர். அவர்களுக்கு அன்பும், பண்பும், கல்வியும், கலையும் ஊட்டி வளர்த்து எல்லோரும் கல்வியில் பட்டங்கள் பெற்று தொழில் புரிவதைக்கண்டும் பூரித்தார். இவரது கலைப் பணியில் அவரது குடும்பமே இணைந்து செயல்படுவது தனிச் சிறப்பம்சமாகும்.

தைரியநாதனின் மனைவி தங்கேஸ்வரி, கலைஞர் குடும்பமாக நிகழ்த்தி வந்த நாடக ஆற்றுகைகளிலும், திருமறைக்கலாமன்றத்தின் அரங்க ஆற்றுகைகளிலும் வேடவுடை ஒப்பனையினை மேற்கொண்டு வந்தார். மேலும் ஈழத்தமிழ்த் திரைப்படம், குறும்படங்களில் நடிகையாக இன்றுவரையிலும் செயற்பட்டும் வருகின்றார். பிள்ளை களான யஸ்ரின் யசோதன் விஞ்ஞானப் பட்டதாரி, தற்போது யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் தொழில்நுட்ப அலுவலராகப் பணிபுரிந்து கொண்டு ,கலைச் செயற்பாடுகள் சார்ந்து கிடைக்கின்ற சந்தர்ப்பங்களில் தன்னையும் தனது பிள்ளைகளையும் ஈடுபடுத்தி வருகின்றார். யஸ்மின்ஒயலூட் (கண்ணன்) முகாமைத்துவப் பட்டதாரி, நாட்டில் இருந்தபோது அரங்கச் செயற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டவர், தற்போது புலம்பெயர் நாட்டில் இருந்தாலும் கலைமீதுள்ள பற்றுக் காரணமாக தானும் ஈடுபட்டுத் தன் பிள்ளைகளையும் ஈடுபடுத்தி வருகின்றார். யஸ்ரின் ஜெலூட் கலைப் பட்டதாரி,தற்போது யாழ்ப்பாணப்பல்கலைக் கழகத்தில் நாடகமும் அரங்கியலும் துறையின் போதனாசிரியராகப் பணிபுரிந்துகொண்டு அரங்கச் செயற்பாட்டில் முழுநேரமாக இயங்குவதோடு, தன் குடும்ப சகிதம் கலைத்துறையில் ஈடுபட்டும் வருகின்றார். சுஜானந்தி கலைப் பட்டதாரி, தாயகத்தில் இருந்தபோது அரங்கச் செயற்பாடுகளில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டவர், தற்போது புலம்பெயர் நாட்டில் வசித்து வந்தாலும் கலைமீதுள்ள பற்றுக்காரணமாக குடும்பமாக ஈடுபட்டு வருகின்றனர். யஸ்ரின் மினோசன் முகாமைத்துவப் பட்டதாரி,தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சில் அலுவலராகப் பணிபுரிந்து கொண்டு கலைச் செயற்பாடுகளில் ஈடுபட்டும் வருகின்றார்.

கலைப் பயணத்தில் தடம்பதித்தசுவடுகள்.

இவர் 1961ஆம் ஆண்டுதனது 12வது வயதில் நடிப்புத்துறையில் கால்பதித்து குரல் வளத்தினாலும், நடிப்புத்திறனாலும் பல அரங்குகளில் நாடகங்கள் வாயிலாகத் தன்னை வெளிப்படுத்திக் கொண்டுவந்தார். சுன்னாகம் இளம்தென்றல் மன்றத்தின் பிரதான பாடகராகவும், நடிகராகவும் சிறந்து விழங்கிய இவர் 1963ஆம் ஆண்டு அருட்கலாநிதி நீ.மரியசேவியரின் இயக்கத்தில் உருவானஆதாம் ஏவாள்நாடகத்தில் ஏவாள்பெண் பாத்திரம் ஏற்றுநடித்தார். நீ.மரியசேவியர் அடிகளார் இவரது ஆலயக் குருவாக இருந்தகாலம் முதல் அவரோடு இணைந்து திருமறைக் காலாமன்றத்தினூடான கலைப் பணிகளில் மன்றத்தின் நிறுவுன உறுப்பினராக, நிர்வாகசபை உறுப்பினராக, நடிகராக, நெறியாளராக, இசைநாடகப் பொறுப்பாளராக, வளவாளராகப் பணிபுரிந்து வந்ததுடன், தனது இறுதிக்காலம் வரை செயற்பட்டும் வந்தார்.

1969ஆம் ஆண்டுகளில் காங்கேசன்துறை வசந்தகான சபாவில் பெண் பாத்திரங்களை ஏற்று நடிக்கும் சிறந்த நடிகனாக நடிகமணி வி.வி.வைரமுத்துவினால் இவரும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆரம்ப காலங்களில் பெண் பாத்திரங்களைஏற்றுநடித்துவந்தவர் காலப்போக்கில் ஆண் பாத்திரங்களையும் தாங்கிநடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் இயற்றிய நவரச நாடகங்களை நடிகமணி வி.வி.வைமுத்துவுடன் இணைந்து இலங்கையின் பலபாகங்களிலும் மேடையேற்றிப்பெரும் புகழைத் தேடிக் கொண்டார். இசைநாடகத்தின் ஆளுமைகள், மூத்தகலைஞர்கள், இளைய தலைமுறைக் கலைஞர்கள் பலரோடும் இணைந்து கலைப்பணி புரிந்துவந்துள்ளார்.

இவரிடம் காணப்பட்ட சிறப்பு இயல்பு, ஆற்றல்கள் காரணமாக சிறுகதாபாத்திரம் முதல் பிரதான கதாபாத்திரங்கள் வரை ஆண்,பெண் கதாபத்திரங்கள் என அனைத்திலும் மிகத்தேர்ச்சியுடன் படைப்பாக்கம் செய்து வந்துள்ளார். அக்காலத்தில் ஈழத்தமிழர் பாரம்பரியக் கலைகளை பரவலாக்கும் முயற்சியில் செயற்பட்டுக் கொண்டிருந்த பேராசிரியர் சு.வித்தியானந்தனும் இவரது நாடகங்களை தனது செயற்பாட்டிற்கு உட்படுத்தி ஊக்கமளித்தார். 1990களின் பின்னர் இவர் தலைமையில் பாரம்பரியக் கலைஞர்களையும், தன்குடும்ப உறவுகளையும் ஒருங்கிணைத்து பாரம்பரிய இசைநாடகக் கலையை நாட்டின் பலபாகங்களிலும் நிகழ்த்தி வந்தார்.

கலைப்பணியை கைக்கொண்ட காலங்களில் குக்கிராமம் முதல் மாநகரம் வரையும்கீழைத்தேய நாடுகள் முதல் ஐரோப்பிய நாடுகள் வரையும் இவரதுபடைப்புகளின் வீச்சுப் பரந்திருந்தது. மூவாயிரத்துக்கும் அதிகமான மேடைகளைக் கண்ட கலைஞராவார். சனசமூக நிலையங்கள், பாடசாலைகள், மன்றங்கள், கல்வியியற் கல்லூரி, பல்கலைக்கழகம் போன்ற பல்வேறு இடங்களில் நாடகப் பட்டறைகள், அனுபவப் பகிர்வுகள், நாடக நெறியாக்கம் மேற்கொண்டும் பலமாணவர்களை உருவாக்கியுள்ளார்.

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள முன்னணிப் பாடசாலைகளில் கல்விபயிலும் மாணவர்களிற்கு நாடகங்களைப் பயிற்றுவிப்பது மட்டுமல்லாமல், இசைநாடகப் போட்டிகளில் பங்குபெறவும் ஊக்குவித்து போட்டிகளில் வெற்றியீட்டவும் வைத்தார். இந்தக் கலைவடிவம் இந்தியாவிலிருந்து ஈழத்திற்கு வந்திருந்தாலும், அதுஎங்கள் மக்களுடன் இணைந்துஈழத் தமிழர் பாரம்பரியக் கலையாக மாறிவிட்ட நிலையில் இக்கலைவடிவம் அழிந்துவிடாது பாதுகாக்கப்படவேண்டும் என்ற விருப்போடு தீவிரமாகச் செயற்பட்டுவந்தார். இவரது கலைப்பணிச் சிறப்பினை உணர்ந்துகொண்ட யாழ்ப்பாணம், மட்டக்களப்பு பல்கலைக்கழக மாணவர்கள் தமது பட்டப்படிப்பு ஆய்வுகளுக்கு உட்படுத்தியமையும் குறிப்பிடத்தக்கது.

கலைத்துறைக்கு ஊக்குவித்தோர்.

இவரிடத்தில் இசைக் கலையினையும், இசைநாடகத்தின் மேலுள்ளஆர்வத்தினையும் ஏற்படுத்தியவர் இசைஆசிரியரானசுன்னாகம் எம். கோபாலரத்தினம் ஆவார். இசைநாடகத்தின் முழுமையையும்,தெளிவையும் இணுவில் கனகரட்ணம் மற்றும் நடிகமணி வி.வி.வைரமுத்துவிடம் இருந்தேகற்றார். அக்கலைஞர்களோடும், காங்கேசன் துறை வசந்தகான நாடக சபாவினோடும் இணைந்து ஈழத்தின் தமிழர் வாழும் பிரதேசங்களிலும் பல ஆயிரக்கணக்கான ஆற்றுகைகளை நிகழ்த்தியுள்ளார். கலைத் துறைக்குள் ஈடுபடுத்திமேலும் பெருமையை சேர்த்துக் கொடுத்தவர் அருட்கலாநிதி நீ.மரியசேவியர் ஆவார். இவரின் கலைப்பணி திருமறைக் கலாமன்றத்தின் ஊக்குவிப்பால் புதுப்பொலிவு பெற்று பரவலாக்கம் செய்யப்பட்டது. திருமறைக் கலாமன்றத்தால் தைரியநாதன் புகழ்பெற்றார். தைரியநாதனால் திருமறைக் கலாமன்றம் சிறப்புப் பெற்றதுஎனக் கூறினால் மிகையாகாது.

நடிகமணி வி.வி. வைரமுத்துவுடன் இணைந்து நடித்த நாடகங்களும் பாத்திரங்களும்.

அரிச்சந்திரா                                  – சந்திரமதி, சத்தியகீர்த்தி, அரிச்சந்திரன்

பூதத்தம்பி                                        – அழகவல்லி

நல்லதங்காள்                                – அலங்காரி

ஞானசௌந்தரி                           – லேனாள்

நந்தனார்                                          – பெரியகிழவர்

பவளக்கொடி                                 – பவளக்கொடி

சத்தியவான் சாவத்திரி        சாவித்திரி

சாரங்கதாரா                                 – சித்திராங்கி

சீறிவள்ளி                                       – வள்ளி

அல்லிஅருச்சுனா                   அல்லி

கோவலன் கண்ணகி            கண்ணகி

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன ஒலிபரப்பில் இடம் பெற்ற நாடகங்கள்.

ஞானசௌந்தரி       –லேனாள்

பக்கநந்தனார்         –பெரியகிழவர்

அரிச்சந்திரா          – சக்தியகீர்த்தி

கும்மாள நிகழ்வில்   – குறத்தி

இவர் 1973ஆம் ஆண்டு மே மாதம் யாழ்ப்பாணத் திருமறைக் கலாமன்றம் இந்திய நாட்டிற்கான கலைப்பயணம் மேற்கொண்ட போது திருச்சி மாவட்டத்தின் தேவர் மண்டபத்தில் ‘‘களங்கம்’’ நாடகத்தில் வழக்கறிஞர்கதாபத்திரம் ஏற்று நடித்தார். 1997ஆம்,1998ஆம் ஆண்டுகளில் மேற்கொண்ட ஐரோப்பிய நாடுகளுக்கான கலைப் பயணங்களிலும் இவர் பங்குகொண்டார். வடலிக்கூத்தார்ஐஇ ஐஐ’’என்ற பெயர் கொண்ட இக்கலைப்பயணத்தில் ஐரோப்பிய நாடுகளிலுள்ள பாரிஸ், ஜேர்மனிஇங்கிலாந்து சுவிஸ்லாந்து ,நெதர்லாந்து ஆகிய நாடுகளில் ஆற்றுகை செய்யப்பட்ட இசைநாடகம், நவீன நாடகம், சிறுவர் நாடகங்களில் முக்கிய பங்கு வகித்தார். அந் நாடகங்களில் கதாபாத்திரங்களையும் ஏற்றுநடித்துள்ளார்;. இசை நாடகங்களை நெறியாள்கை செய்ததோடு ‘‘சகுந்தலை’’ இசைநாடகத்தை இவரே எழுதி நெறியாள்கை செய்து பிரதான கதாபாத்திரத்தையும் ஏற்று நடித்தார்.  

சகுந்தலை                                –  துஸ்யந்தன்

சத்தியவேள்வி                     –அரிச்சந்திரன்

ஜெனோவா                             –திறையான் அரசன்

ஜீவபிரயத்தனம்                  – கண்ணன்

ஒற்றுமையே பலம்           – பெரியமாடு

திருமறைக் கலாமன்றத்தினூடாக ரூபவாகினியில் ஒளிப்பதிவு செய்யப்பட்ட நாடகங்களும், நடித்த கதாபாத்திரங்களும்.

ஞானசௌந்தரி      –பிலேந்திரன்

ஏரோதன்                     – ஏரோதன்

1996 முதல் 2000 வரையானகாலப்பகுதியில் யாழ்ப்பாணம் பாரம்பரிய கலைகள் மேம்பாட்டுக் கழகம் ஏற்பாடு செய்த நாடகப் போட்டிகளில் இவரது நாடகங்கள் முன்நிலை வகித்தன. பாரம்பரியக் கலைகளை பரவலாக்கும் நோக்கோடு நாடளாவிய ரீதியில் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட அரங்க ஆற்றுகைச் செயற்பாட்டிலும் ஈழத்தமிழ்ப்  பாரம்பரிய முன்னணிக் கலைஞர் குழுவில் இவரும் ஒருவராகத்  திகழ்ந்தார்.

பாரம்பரிய கலைகள் மேம்பாட்டுக் கழகத்தினூடாக ரூபவாகினி யில் ஒளிப்பதிவு செய்யப்பட்டு, நடித்த நாடகங்களும் கதாபாத் திரங் களும்.

சத்தியவான் சாவித்திரி             சத்தியவான்

வள்ளிதிருமணம்                             – வேடன்விருத்தன்

அருட்கலாநிதி நீ.மரியசேவியர் அடிகளாரின்  கைவண்ணங்களில் உருவாகும் பல்வகை நாடகங்களில் முக்கிய பாத்திரங்களை ஏற்று நடித்தார். அவரால் புதிய இசை நாடகங்கள் படைக்கப்பட்டபோது எழுத்துரு ஆக்கத்திற்கும் தைரியநாதனுடைய பணி கணிசமான பங்கு வகித்துள்ளது. அவற்றுள் வளையாபதி, குண்டலகேசி ,சீவகசிந்தாமணி போன்ற ஐம்பெரும் காப்பியத்தில் அமைந்த நாடகங்களும் ஞானசௌந்தரி, சத்தியவேள்வி, ஏழுபிள்ளை நல்லதங்காள், இப்தா நாடகங்களும் குறிப்பிடத்தக்கது. இன் நாடகங்களில் பிரதான பாத்திரமேற்று நடித்ததுடன், சில நாடகங்களை இவர் நெறியாள்கை செய்துள்ளார். அனேகமக்களின் பாராட்டுக்களையும் பெற்றுக் கொண்டார்.

திருமறைக் கலாமன்றத் தயாரிப்பில் மேற்கொண்ட இசைநாடகங் களும் கதாபாத்திரங்களும்

சீவகசிந்தாமணி           சீவகன்

வளையாபதி                      – வளையல்வியாபாரி

குண்டலகேசி                     –குமரன்

ஞானசௌந்தரி               –பிலேந்திரன்

சத்தியவேள்வி                –அரிச்சந்திரன்

ஏழுபிள்ளைநல்லதங்காள்          நல்லண்ணன்

இப்தா                                                          –பெரும்வாணிபன்

அத்துடன் திருமறைக் கலாமன்றத்தில் வருடம்தோறும் நடைபெறும் திருப்பாடுகளின் காட்சிநாடகப் படைப்புகளில் தமது முழுமையான பங்களிப்பினை வழங்கியுள்ளார்;.

இவர் நடித்த சில திருப்பாடுகளின்  நாடகங்களும் பாத்திரங்களும்.

அன்பில் மலர்ந்தஅமரகாவியம்                  – இராயப்பர்

களங்கம்                                                                         – வழக்கறிஞர்

சிலுவைஉலா                                                           –ஒருவன்

கல்வாரிபரணி                                                       – இராயப்பர்

பலிக்களம்                                                                  – இராயப்பர்

சாவைவென்றசத்தியன்                                 – பரிசேயர்

கல்வாரிச்சுவடு                                                     – இராயப்பர்,ரோமானியபடைவீரன்

காவியநாயகன்                                                   – உரைஞன் (தேடல்)

அஸ்தமனத்தில் ஓர் உதயம்                        – பிலாத்து

ஆவணமாக்கலுக்கானபங்களிப்பு.

இவர் பாரம்பரிய இசைநாடகத்தின் மீதுகொண்டபேராற்றல் காரணமாக 2008 இல் தனது மகன் யஸ்ரின் ஜெலூட் உடன் இணைந்து திருமறைக் கலாமன்றத்தின் இயக்குநரின் வழிகாட்டலுடனும், பலகலைஞர்களுடைய ஆதரவோடும் ஈழத்தமிழர்கள் மத்தியில் பயில்நிலையிலிருந்த இசைநாடகப் பாடல் இசைமெட்டுகள் 245 இனை ஒலிப் பேழையாகவும், நூலுருவிலும்  ஆவணமாக்கி வெளியீடு செய்தார்.

கலைஞர் குறித்தசில வெளியீடுகள்.

கலைஞரது ஆளுமையினை வெளிக்கொணரும் நோக்கில் கட்டுரைகள், செய்திக் குறிப்புகள், செவ்விகள் அச்சு ஊடகங்கள் சிலவற்றில் வெளிவந்துள்ளன. அவற்றுள் 1999ல் வாழ்ந்து கொண்டிருக்கும்  இசைநாடககூத்து மூத்தகலைஞர் வரலாறு ‘காலங்கள் வாழ்த்தும் 300 ஈழத்துக் கலைஞர்கள்போன்ற நூல்களிலும்,தினகரன் – 1997.12.27, நமது ஈழநாடு– 2003.01.20, வீரகேசரி–  2006.01.15, உதயன் – 2011.07.31 போன்ற பத்திரிகைகளிலும், கலைமுகம் – 1992, ஆற்றுகை– 2006.ஜீன்: இதழ்.14, கூத்தரங்கம் – 2007.11.22,சஞ்சிகைகளிலும் இடம்பெற்றுள்ளன

2011 இல்வசாவிளான் தவமைந்தன் கலையகத்தின் தயாரிப்பிற்காக மேற்கொள்ளப்பட்ட பூதத்தம்பி இசைநாடகத்தைப் பயிற்றுவித்ததோடுஅந்திராசிகதாபாத்திரமேற்றும் நடித்துள்ளார்.

நடித்துள்ளஈ ழத் தமிழர் திரைப்படங்கள்,குறும்படங்கள்.

இவர் ஈழத்தமிழர் திரைப்படங்கள், குறும்படங்களில் சிறுகதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார்.

 முழு நீளத் திரைப்படங்கள்:

சண்டியன், கேசவராஜனின் பிஞ்சுமனம், அம்மாநலமா?

அசோக ஹந்தகமவின் இனிஅவன்.

 குறும்படங்கள்:

செம்பரத்தம் பூமரண அறிவித்தல்.

கலைவேந்தன் தைரியநாதனின் அரங்கஆற்றுகைப் பட்டியல்.

இல நாடகம் /அரங்கஆற்றுகை வகை   பாத்திரம்    
01   ஆதாம் ஏவாள்   வசனநாடகம்     ஏவாள்
02   மூவிராசாக்கள் வசனநாடகம்       அரசன்
03  கன்னிபெற்றகடவுள்    வசனநாடகம்     சூசையப்பர்
04 அசோக்குமார்       வசனநாடகம்     அரசி
05   நம்தேசம்  வசனநாடகம்      பாரதி
06 ஒளவையார் வசனநாடகம்       ஒளவை
07  துணிவு    சமூகநாடகம்       கதாநாயகி
08    ஜீவபிரயத்தனம்  நவீனநாடகம்     கண்ணன்
09  ஒற்றுமையேபலம்      சிறுவர் நாடகம்  பெரியமாடு
10  அசோகா                                       வார்த்தைகளற்ற நாடகம்       பிக்கு
11    கும்மாளம்    வானொலி நிகழ்வு       குறத்தி,சக்கடத்தார்
12

சிங்ககுலச் செங்கோல்

   கூத்து        இடைச்சி
13   ஜெனோவா

கூத்து இசைநவீன நாடகம்

        திறையான் அரசன்
14    அரிச்சந்திரா     இசைநாடகம்       சந்திரமதி,சத்திய                   கீர்த்தி, அரிச்சந்திரன்
15  பூதத்தம்பி இசைநாடகம்         அழகவல்லி, அந்திராசி
16 நல்லதங்காள்     இசைநாடகம்      அலங்காரி, நல்லண்ணன்
17    பவளக்கொடி   இசைநாடகம்       பவளக்கொடி
18  சத்தியவான் சாவத்திரி  இசைநாடகம்     சாவித்திரி, சத்தியவான்
19  ஞானசௌந்தரி  இசைநாடகம்       லேனாள், பிலேந்திரன்
20    நந்தனார்    இசைநாடகம்     பெரியகிழவர்
21    சாரங்கதாரா     இசைநாடகம்     சித்திராங்கி
22    சீறிவள்ளி    இசைநாடகம்   வள்ளி, முருகன், வேடன், விருத்தன்
23   அல்லிஅருச்சுனா  இசைநாடகம்     அல்லி
24  கோவலன் கண்ணகி  இசைநாடகம்     கண்ணகி
25    சீவகசிந்தாமணி இசைநாடகம்     சீவகன்
26    வளையாபதி   இசைநாடகம்     வளையல் வியாபாரி
27    குண்டலகேசி     இசைநாடகம்    குமரன்
28    ஏரோதன்    இசைநாடகம்     ஏரோதன்
29    இப்தா   இசைநாடகம்     பெரும் வாணிபன்
30    சகுந்தலை   இசைநாடகம்     துஸ்யந்தன்
31    செஞ்சோற்றுக் கடன் இசைநாடகம்     குந்தி
32   அன்பில் மலர்ந்த அமரகாவியம்  திருப்பாடுகளின் நாடகம்     இராயப்பர்
33    சிலுவைஉலா  திருப்பாடுகளின் நாடகம்  ஒருவன்
34    களங்கம்    திருப்பாடுகளின் நாடகம்  வழக்கறிஞர்
35    கல்வாரிப் பரணி  திருப்பாடுகளின் நாடகம்  இராயப்பர்
36    அன்று சிந்திய குருதி  திருப்பாடுகளின் நாடகம்  இராயப்பர்
37    பலிக்களம்  திருப்பாடுகளின் நாடகம்  இராயப்பர்
38    கல்வாரிச் சுவடு  திருப்பாடுகளின் நாடகம்    இராயப்பர்,ரோமானியப் படைவீரன்
39    சாவைவென்றசத்தியன்  திருப்பாடுகளின் நாடகம்  பரிசேயார்
40  காவியநாயகன்  திருப்பாடுகளின் நாடகம்  உரைஞன் (தேடல்)
41    அஸ்தமனத்தில் ஓர் உதயம்  திருப்பாடுகளின் நாடகம்     பிலாத்து

இவர் பெற்றுக் கொண்ட விருதுகள்.

 • 1970இல் நெல்லண்டைப் பத்திரகாளி அம்மன் கோவில் ஆசிரியர் அண்ணாச்சாமி நடிப்பிசைச் செல்வன்என்ற பட்டம் வழங்கி கௌவித்தார்;.
 • 1993.05.02 இல் திருமறைக்கலாமன்ற இயக்குநர் கலாநிதி நீ.மரியசேவியர் அடிகளார்  கலைவேந்தன்என்னும் பட்டம் வழங்கி கௌரவித்தார்.
 • 1997,1998இல் திருமறைக்கலாமன்றத்தால் மேற்கொள்ளப்பட்ட ‘‘வடலிக் கூத்தர் I, II’’ சர்வதேசக் கலைப் பயணங்களில் ஐரோப்பிய நாடுகளில் கௌரவிக்கப்பட்டார்.
 • 1998ல் பாரம்பரியக் கலைகள் மேம்பாட்டுக் கழகத்தால் ஈழத்தின் மூத்த இசைநாடகக் கலைஞர்என்று முடிசூட்டிக் கௌரவிக்கப்பட்டார்.
 • 2001இல் சுன்னாகம் புனித அந்தோனியார் இளைஞர் மன்றத்தால் நவரசவள்ளல்என்ற பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
 • அதே ஆண்டு (2001) வடக்கு கிழக்கு அபிவிருத்தி மற்றும் புனர்வாழ்வு அமைச்சால் கலைஞானகேசரிஎன்ற பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
 • 2005இல் யாழ்ப்பாண பிரதேச செயலகத்தினால் யாழ்ரத்னாவிருது வழங்கிக் கெரவிக்கப்பட்டது.
 • 2008இல் திருமறைக்கலாமன்றத்தின் அதி உயர் விருதான கலைஞானபூரணன்வழங்கப்பட்டது.
 • 2010இல் இலங்கை அரசின் உயர்விருது கலாபூஷணம்வழங்கப்பட்டது.
 • 2012இல் வடமாகாணகல்வி, பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சு ஆளுநர்விருதுவழங்கியது.
 • 2013இல் யாழ் மாநகரசபை ஏற்பாட்டில் யாழ் ஓசைப் பெருவிழாவில் நினைவுக் கேடயம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
 • 2014இல் மக்கள் நலன்புரி மன்றம் பிரான்ஸ் சுன்னாகக்கிளை தேசிய இசைநாடகக் கலைஞர்நினைவுக் கேடயம் வழங்கிக் கௌரவித்தது.
 • 2015இல் இலங்கைவேந்தன் கலைக்கல்லூரியின் இயல், இசை, நாடக விழாவில் நினைவுக் கேடயம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
 • அதே ஆண்டில் (2015) வவுனியா வடக்கு நெடுங்கேணிப் பிரதேச கலாசாரப் பேரவைஇசை நாடக வள்ளல்எனும் விருது வழங்கி கௌரவித்தது.
 • 2016இல் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கலைஞர் சுவதம்நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கலைச்சேவையைப் பாராட்டி நினைவுக் கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
 • தமிழ் தேசியப் பண்பாட்டுப் பேரவை அர்ச்சுனா விருது 2017இல் வாழ்நாள் சாதனையாளர் விருதுவழங்கி கௌரவித்தது.
 • பல அரங்குகளில் கலைஞருக்குப் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப் பட்டமையும் குறிப்பிடதக்கது.

இவ்வாறு தமது வாழ்நாள் முழுவதும் நோய்நோக்காது கலைக்காகத் தனைக் கரைத்து 68வது வயதில் 2017.05.16 ஆம் நாள் இறைவன் திருவுளப்படி விண்ணகம் சேர்ந்தார்..

நன்றி  தொகுப்பாளர் தைரியநாதன் யஸ்ரின் ஜெலூட், (புதல்வன்)

 

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!