அறிமுகம்
ஆசிரியராய், அதிபராய், உதவிக்கல்விப்பணிப்பாளராய் நீண்ட காலம் பணியாற்றிய இவர் ஈழத்தின் மூத்த படைப்பாளிகளி;ல் ஒருவராவார். ஈழத்து நவீன உரைநடை இலக்கிய வரலாற்றில் ஏறத்தாழ ஆறு தசாப்த கால வழித்தடத்தில் ஆழத்தடம் பதித்த எழுத்தாளர்களில் கே.ஆர்.டேவிற் முதன்மையானவர். நாவல், குறுநாவல், சிறுகதை முதலிய துறைகளில் காலத்தில் நிலைத்த படைப்புகளைத் தந்தவர். வீரகேசரிப்பிரசுரம், முரசொலி வெளியீட்டகம், மீரா பதிப்பகம், கு.வி.அச்சகம், ஜீவநதி வெளியீட்டகம் என்பவற்றின் வெளியீடுகள் முதன்மை பெறுகின்றன. எழுபதுகளில் தோன்றிய படைப்பாளியான டேவிற் அவர்கள் இன்று வரை தொடர்ந்தியங்குவது கவனிப்பிற்குரியது. சாவகச்சேரி மட்டுவிலில்; பிறந்து திருமண பந்தத்தின் மூலம் யாழ்ப்பாணம் யாழ்ஃ132 கிராம அலுவர் பிரிவில் உயரப்புலம், ஆனைக்கோட்டையில் வாழ்ந்து வருகின்றார். நாற்பத்தைந்து வருடங்கள் ஓயாது தன் எழுத்துகளால் மக்களின் வாழ்வுத் துயரங்களை வெளிப் படுத்தி, சமூக ஏற்றத்தாழ்வுகளைச் சாடி மாக்ஸியக்கொள்கையின் வழி பயணித்து வரும் இவர் கே.அர் டேவிற் என தன்னை அடையாளப்படுத்தி படைப்புலகில் தடம் பதித்துள்ளார்.
இவர் இராயப்பு அருளம்மா தம்பதியினரின் மூன்றாவது புதல்வனாக 1945-07-07 ஆம் நாள் சாவகச்சேரி மட்டுவில் என்னும் இடத்தில் பிறந்தவர். மட்டுவில் கனிஸ்ட வித்தியாலயத்தில் 5ஆம் தரம் வரை கல்வி பயின்று பின்னர் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரம் வரை தற்போது சந்திரபுர ஸ்கந்தவரோதய மகா வித்தியாலயம் என அழைக்கப்படும் அப்போதைய மட்டுவில் மகா வித்தியாலயத்தில் கற்று உயர் தரத்தினை யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் பெற்றார். உயர்தரத்தில் விஞ்ஞானப் பிரிவில் இரண்டாம் வருட மாணவனாகக் கற்றுக் கொண்டிருக்கும் போது ஆசிரியர் தொழில் கிடைத்தது. அதனை அவர் முழு விருப்போடு ஏற்று செயற்படத் தொடங்கினார்.
இவருடைய கிராமமான மட்டுவிலில் செயற்பட்டு வந்த மோகனதாஸ் என்கின்ற சனசமூக நிலையம் மாக்ஸிய கொள்கைகளைக் கடைப்பிடித்து வந்தமையால் இவரும் அச் சனசமூக நிலையத்தினூடாக மாக்ஸியக் கொள்கைகளைக் கடைப்பிடித்து வாழ்வில் ஒழுகினார். இச் சனசமூக நிலையத்தில் மாக்ஸிய வாதிகளான தெனியான், யோ.பெனடிக்ற்பாலன், செ.யோகநாதன் போன்றவர்கள் மாதந்தோறும் கலை, இலக்கிய, அரசியற்; கோட்பாடுகள் தொடர்பில் கலந்துரை யாடல்களை ஏற்படுத்திச் செயற்படுத்தி வந்தனர். இவர்களது வழிப்படுத்தலில் கவரப்பட்ட கே.ஆர். டேவிற் அவர்கள் படைப்புலக யாம்பவான் செ.யோகநாதனவர்களைப் பின்பற்றி எழுத்துலகில் தன்னை ஆர்வத்துடன் வளம்படுத்தினார். தான் முதன்முதலில் எழுதிய “ஒருசோறு”என்கின்ற சிறுகதையை திரு யோகநாதனவர்களிடம் காட்டி ஆசிபெற்று வீரகேசரி பத்திரிகையில் பிரசுரித்தமை யோடு இவரது படைப்புலகம் விரிவடைந்தது எனலாம். தனது குருவான திரு யோநாதனவர்களை மனதிருத்தி நன்றியோடு நினைவுகூரும் மனப்பக்குவத்துடன் இன்றும் எம் மத்தியில் வாழ்ந்து இளம் படைப்பாளிகளின் ஆற்றுப்படுத்தலாகவும் வழிகாட்டியாகவும் திகழ்கின்றமை யாம் பெற்ற வரமே.
வீரகேசரி பிரசுரத்தின்மூலம் சிறுகதை இலக்கியப்படைப்புலகில் அறிமுகமாகிய கே.ஆர்.டேவிற் அவர்கள் சிறுகதை இலக்கியத்தில் பல ஆழமான படைப்புகளை உருவாக்கினார். ஈழத்தின் பிரக்ஞைபூர்வமான பிரச்சினைகளையும் சமூகத்தில் அன்றாடம் மக்கள் சந்திக்கின்ற வாழ்க்கைப் பிரச்சினைகளையும் தனது கருப் பொருளாக உள்வாங்கி சிறுகதைகள் மூலம் வெளிப்படுத்தினார். சமூக, பொருளாதார, அரசியல் பின்புலங்களால் படைப்பாக்ககொள்கைகள் தீர்மானிக்கப்பட்ட போது கே.ஆர்.டேவிற் போன்றவர்கள் தமக்கான கொள்கை வழிநின்று படைப்பாக்கத்தில் ஈடுபட்டனர்.
இவரது சிறுகதைத் தொகுதிகளில் ஒன்றான “நீரில் கிழித்த கோடு”களின் முன்னுரையில் “கோட்பாடுகளுக்கூடாக மக்களை நோக்குவதற்கும் மக்களுக்கூடாக கோட்பாடுகளை நோக்குவதற் குமிடையே நிறைய வேறுபாடுகளுண்டு. நான் மக்களுக்கூடாக கோட்பாடுகளைப் பார்க்கின்றேன். என்று குறிப்பிடுகின்றார். இதன்மூலம் அவரது இலக்கியப் படைப்பாக்கத்தின் நோக்கத்தினை தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். படைப்பின் அதியுச்ச வெளிப்பேறு மக்களிடத்தில் கண்டவற்றிலிருந்து மக்களது வாழ்வியலுக்கான கொள்கைகளை உருவாக்குதல் என்பது இவரின் நம்பிக்கை. இப்பின்புலத்திலிருந்து டேவிற்றின் சமூக நோக்கினை நாம் புரிந்து கொள்ள முடியும்.
வீரகேசரி, முரசொலி, தினகரன், ஈழநாதம், ஈழநாடு, தினக்குரல், உதயன், வலம்புரி, சிரித்திரன், சிந்தாமணி, மல்லிகை, கலைமுகம், ஞானம், சுடர், ஜீவநதி, தாயகம், புதினம் போன்ற பத்திரிகை கள் மற்றும் சிற்றிதழ்கள் இவரது பல்வேறு சிறுகதைகளை பிரசுரித்து ஆக்கமும் ஊக்கமும் வழங்கியமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறு வெளிவந்த சிறுகதைகள் மற்றும் பிரசுரம் செய்யப்படாதவற்றையெல்லாம் தொகுத்து “சிறுகதைத் தொகுதி”களாகவும் நாவலாகவும், குறு நாவலாகவும் இதுவரை ஒன்பது தொகுதி நூல்களை வெளியிட்டுள்ள இவர் அனைத்து செயற்பாடு களையும் தனது சொந்தமான தட்டச்சுப்பொறி இயந்திரத்தின் மூலம் தானே தட்டச்சுச் செய்து தொகுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இவரது இலக்கியப் படைப்புகள்
நலிவுற்று வாழ்ந்து கிடக்கும் மக்களின் வாழ்வியலையும், வாழ்க்கை முரன்களையும், அவர்கள் மீதான சுரண்டல்களையும் வெளிக்கொணர்பவையாகவுள்ளன. நலிவுற்ற மக்களின் “துயர் நிலையை” தத்துவார்த்த அடிப்படைகளிலே விளங்கிக் கொள்ளத்தக்க தெளிவு மிக்க படைப்புகளாகவுள்ளன.
கே.ஆர்.டேவிற்றினது கதைகளில் பொதுவாக “விளிம்புநிலை மக்களின் பிரச்சினை களை உரக்கப் பேசுபவையாகவும் அவர்கள் மீதான சுரண்டலைத் தோலுரித்துக் காட்டுவனவாகவும் விளங்கு கின்றன. சமூகத்தின் பொது வெளியிலிருந்து எல்லைப் படுத்தப்பட்ட மக்களின் வாழ்நிலைப் போக்குகளையும் பிணக்குகளையும் அவர்கள் மீதான மையத்தின் ஆதிக்கத்தினையும், எல்லைப் படுத்தப்பட்ட மக்கள் எங்கெல்லாம் இருக்கின்றார்களோ அங்கெல்லாம் நிலவும் ஏற்றத்தாழ்வுக் கான பின்புலங்களை நுணுக நோக்கும் சமுதாயப் பார்வை வெளிப்பட்டு நிற்பதைக் காணலாம். “அடிமட்ட மக்களின் வாழ்வியல் துயரங்களை கூர்ந்து நோக்கி அவைகளை இலக்கியமாக்குவதில் டேவிற் கைதேர்ந்தவர்” என்று பேராசிரியர் கைலாசபதி அவர்களால் விதந்துரைக்கப்பட்டவர். இவரின் கதைகள் பெரும்பாலும் பெருமுதலாளித் துவத்தின் தோற்றத்தினையும் அதன் வரலாற்று இயக்க நிலைகளையும் விளக்க முற்பட்ட மார்க்ஸியக் கொள்கையின் அடிப்படைகளை கிராமிய வாழ்வின் நடைமுறை யதார்த்தத்தில் வைத்துத் தரிசிக்க முனைகின்றன. நலிந்தவர்களது ஈனக்குரலுடன் பரிவுகொள்வதையும் நலிவை உடைத்து நிமிரத்துடிக்கும் புரட்சிக்குரலாய் முழக்கமிடுவதையும் நலிந்தவர்களுக்காக நியாயம்கோரி நிற்கும் உரிமைக்குரலாயும் மிளிரும் தன்மையுடையன. டேவிற் அவர்களது படைப்புகள் கதைப்பொருள், கலைத்துவமான சித்தரிப்பு, மொழிப் பிரயோகம், வடிவநேர்த்தி, உத்திமுறை முதலிய பண்புகளால் உயர்ந்து தனித்துவம் பெறுகின்றன.
அவரது சிறுகதைகளின் மையக் கருத்துகள், கதாமாந்தர்கள், கதைநிகழ்களங்கள் மற்றும் தளங்கள் யாவும் வெவ்வேறு தன்மைகளைக் கொண்டிருந்தாலும் ‘மனிதம்’ என்ற பொதுப் பண் பியலில் ஊறித்திளைத்திருப்பது இவரது படைப்புகளின் மிகச்சிறந்த கோட்பாடாக இருக்கின்றது. ஒருவன் மனிதனாகப் பிறந்து, மனிதனாக வளர்ந்து, மனிதனாக வாழ்ந்து தன்னை ஒரு முழுமையான மனிதநேயச் சிந்தனையுடைய செயற்பாட்டாளனாக உருவகித்துக் கொண்டவர். நாவல்
“வரலாறு அவளைத் தோற்றுவிட்டது” 1976 நொவம்பரில் வெளியிட்டுள்ளார்.
குறு நாவல்
“ஆறுகள் பின்நோக்கிப்பாய்வதில்லை” 1987 மே.
“பாலைவனப் பயணிகள்” 1989 ஜுலை.
“வெள்ளையடிக்கப்பட்ட கல்லறை” 1991 ஆவணி.
சிறுகதைத் தொகுதிகள்.
“ஒருபிடி மண்” 1994 ஆவணி.
“மண்ணின் முனகல்” 2012 செப்ரெம்பர்.
“பாடுகள்” 2012 செப்ரெம்பர்.
“நீரில் கிழித்த கோடுகள்” 2015 ஜுலை.
“கே.ஆர்.டேவிற் சிறுகதைகள்” 2019 செப்ரெம்பர்.
2019 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட “கே.ஆர்.டேவிற் சிறுகதைகள்” என்ற தொகுதியில் 1971 ஆம் ஆண்டு தொடக்கம் 2018 ஆம் ஆண்டு வரையான காலத்தில் டேவிற் அவர்களால் எழுதிப் பாதுகாக்கப்பட்ட அறுபது சிறுகதைகளைத் தொகுத்து வெளியிட்டுள்ளார். இந்நூலில் இடம்பெற்றுள்ள சிறுகதைகள் முன்னர் இவரால் வெளியிடப்பட்ட எந்த நூற் தொகுதிகளிலும் இடம்பெறாதவை என்பது முக்கியமான விடயமாகும். இச் சிறுகதைகள் யாவும் சமூக இயங்கியலின் உள்ளுறைவுகளைப் பிரதிபலிப்பனவாக உள்ளமை மனங்கொள்ளத்தக்கது.
கல்விப் பணியில் கே.ஆர்.டேவிற் அவர்கள்.
1971-09-13 தொடக்கம் 1972-12-31வரை நுஃபூண்டுலோயா தமிழ் மகாவித்தியாலயம்.
1973-01-01 தொடக்கம் 1974-12-31 வரை யாஃகொழும்புத்துறை ஆசிரியர் பயிற்சிக்கலாசாலை.
1975-01-01 தொடக்கம் 1976-01-14 வரை திஃமூதூர் புனித அந்தோனியார் மகாவித்தியாலயம்.
1976-01-15 தொடக்கம் 1983-05-05 வரை திஃகோபாலபுரம் அ.த.க.பாடசாலை.
1983-05-06 தொடக்கம் 1984-02-19 வரை திஃநிலாவெளிறோ.க.தக.வித்தியாலயம்.
1984-02-20 தொடக்கம் 1986-05-04 வரை திஃகோபாலபுரம் அ.த.க.பாடசாலை.
1986-05-05 தொடக்கம் 1994-01-09 வரை யாஃநாவாந்துறை றோ.க.த.க வித்தியாலயம்.
1994-01-10 தொடக்கம் 1999-04-15 வரை சேவைக்கால ஆசிரிய ஆலோசகர், தென்மராட்சி கல்வி வலயம்.
1999-04-16 தொடக்கம் 2004-07-06 வரை உதவிக் கல்விப்பணிப்பாளர், தென்மராட்சிக் கல்வி வலயம்.
ஆசிரியராக,ஆசிரிய ஆலோசகராக, உதவிக்கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றிய போதிலும் அந்தக் கடமைகளை ஒழுங்காகவும் நேர்த்தியாகவும் நிறைவேற்றி ஒழுக்கம்மிகு சமூகத்தினை கட்டியெழுப்புவதில் தனது பங்கினை நல்கியவர். கலைஞர்களை வாழும்போதே போற்ற வேண்டுமென்ற பேரவாவினால் கே.ஆர்.டேவிற் அவர்களையும் கலை நிறுவனங்களும் பொது அமைப்புகளும் அரச திணைக்களங்களும் பாராட்டிப் போற்றுவதற்கு முன்வந்தன. இவருடைய படைப்பின் ஆழத்தினை வெளிப்படுத்தும் நோக்கில் பல விருதுகளும் கௌரவங்களும் வழங்கிப் போற்றப்பட்டன. இலங்கையில் அதியுயர் விருதுகளைப் படைப்பிலக்கியத்திற்காகப் பெற்றுக் கொண்ட டேவிற் அவர்கள் தன்னை இத்துறையி;ல் வளப்படுத்திய குரு செ.யோகநாதனவர்களை என்றும் மறவாமல் மனதிருத்தி அவர் புகழ்பாடும் சீடனாக எழிமையோடு வாழ்ந்து வருகின்றார்.
பெற்ற விருதுகளும் கௌரவங்களும்.
2011 இலங்கை கலாசார அலுவல்கள் திணைக்களம் “கலாபூஷணம்” உயர் விருது.
2012 ஸ்ரீ இராமகிருஸ்னா கமலநாயகி “தமிழியல்விருது”.
2013 கொடகே ஐந்தாம் ஆண்டு “சின்னப்பபாரதி” விருது.
2013 யாஃஇடைக்காடு தமிழ் மகா வித்தியாலயம் முத்தமிழ் விழாவில் “தமிழியல்” விருது.
2013 அரச அதிபர் சிங்காரவேலு ஞாபகார்த்த “தமிழியல்” விருது பாடுகள் சிறுகதைத் தொகுதிக்காக வழங்கப்பட்டது.
2014 சாவகச்சேரி இலக்கிய அமைப்பின் கௌரவ விருது.
2014 கல்வி அமைச்சின் சிறப்பு விருது.
2014 ஜீவநதி இலக்கியக் குழுமத்தின் சிறப்பு விருது.
2016 நீரில் கிழிந்த கோடுகள் சிறுகதைத் தொகுதிக்காக சிவஞானசுந்தரம் நினைவுச்சிறப்பு விருது.
2016 இரா உதயணன் சிறப்பு விருது.
2017 வடக்கு மாகாண முதலமைச்சர் விருது.
2019 கலைமாமணி விருது.
2021 “கே.ஆர்.டேவிற் சிறுகதைகள்”என்னும் சிறுகதைத் தொகுதி நூலுக்காக வடக்கு மாகாண சிறந்த இலக்கிய நூற்பரிசினையும் பெற்றுக் கொண்டவர்.
சமூக நீதிக்காக மானிட உரிமைகளை வென்றெடுக்கும் மனோதிடம்மிக்க அடக்கு முறைகளுக் கும், ஒடுக்கு முறைகளுக்கும் எதிராகப் போராடும் உணர்வாளர்;களை தோற்றுவிக்கும் எழுத்து களுக்குச் சொந்தக்காரனாக விளங்கும் கே.ஆர்.டேவிற் அவர்கள் தனது படைப்பாக்கத்துறையில் சகாப்தத்தை எட்டிவிட்ட நிலையில் அறுபது ஆண்டுகளின் நீட்சிமுழுதும் நலிவுற்றோரின் குரலாய் டேவிற்றின் குரல் ஒலித்துக் கொண்டிருக்கின்றது.
இத்தகவலிற்காக எம்முடன் ஒத்துழைத்த படைப்பாளி கே.ஆர்.டேவிற் ஐயா அவர்களுக்கு நன்றி.
கே.ஆர்.டேவிற் சிறுகதைகள்- 2019, பக்கம் ஐஇiiஇiiiஇஎiiiஇஒiஎ.