Thursday, May 30

கலாபூஷணம் சைவப்புலவர் செல்லத்துரை சுப்பிரமணியம்.

0

சைவப்புலவர், கலாபூஷணம் என்றெல்லாம் அறியப்பட்ட சு.செல்லத்துரை அவர்கள் யாழ்ப்பாணத் தின் மூதறிஞராய்எம் சமூகத்தின் வழிகாட்டியாய் பல்துறை ஆளுமையுடன் எம்மத்தியில் எழிமை யோடு வாழ்ந்து சைவசித்தாந்தம், திருமந்திரம், புராண, இதிகாச, காப்பியங்களில் தான் பெற்றிருந்த அறிவினையும் ஆற்றலையும் அனைவருக்கும் புகட்டிய பெருமைக்குரியவர். இலக்கண, இலக்கியங் களை கற்பிப்பதில் அதிக நாட்டமுடையவர். மிகச்சிறந்த விவசாயியாக வாழ்ந்தவர். தம்பிள்ளை களென்றில்லாமல் ஊரார் பிள்ளைகளையும் ஊட்டி வளர்த்தவர். எமது இல்லங்களில் இவர் பாதம் பதியாதோ என ஏங்கியோர் பலர். இவர் இணைந்து செயற்படாத சமூகமட்ட அமைப்புகளில்லை. நாடறிந்தஉலகறிந்த பெரியவர். ஆன்மீகத்தின்மீது பெருவிருப் புடைய இவரது சொல்லும் செயலும் ஒன்றாகவே அமைந்து வாழ்ந்து காட்டியவர்.

மாருதப்புரவீகவல்லி என்னும் இளவரசியின் குதிரைமுகம் நீங்கிய மாவிட்டபுரம்பதி சின்னத்தம்பி சுப்பிரமணியம் அவர்கள் இளவாலையின் இனியாள் இளையகுட்டி பத்தினிப்பிள்ளையை கரம் பற்றியதன் பயனாய் புத்திரன் செல்லத்துரை என்னும் நாமத்துடன் இவ்வுலகில் மூலவிருட்சமாய் இளவாலைப்பதியதனில் 1938-03-28ஆம் நாள் பிறந்தார். புனிதவாசம், பத்தாவத்தை, இளவாலை என்ற முகவரியில் வசித்து வந்தவர்.

1944 ஆம் ஆண்டு இளவாலை மெய்கண்டான் மகா வித்தியாலயத்தில் தனது ஆரம்பக் கல்வியை ஆரம்பித்து 1954ஆம் ஆண்டு எஸ்.எஸ்.சி.தரத்தேர்வில் முதலாம் தரத்தில் சித்யடைந்த இவர் 1955 ஆம் ஆண்டு இலங்கையில் நீண்ட காலமாக வெளிவந்து கொண்டிருக்கின்ற வீரகேசரி பத்திரிகையில் ஒப்புநோக்குநராக தனது பணியை ஆம்பித்து 1956 வரை இப்பணியில் மனநிறைவோடு பணியாற்றி தன் அநுபவத்தினை அதிகரித்துக் கொண்டார். இங்கு பணியில் இருந்தவேளை 1957 ஆம் ஆண்டு  பொதுப்பயிற்சி ஆசிரியர் பயிற்சிக்காக பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் தன்னை இணைத்து முழுமையான பயிற்சியினை முடித்து 1958 ஆம் ஆண்டு வெளியேறினார். இதன் பின்னர் கல்விப் பொதுத்தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சையில் 1974ஆண்டு சித்தியடைந்தார். 1963 இல் சென்னை சைவசித்தாந்த மகாசமாசம் சைவப்புலவர் பட்டத்தினை வழங்கியது. அத்துடன் கொழும்பு விவேகானந்த சபை சைவ சமய உயர்தகைமை தேர்வில் சிறப்புப் பரிசினையும் பெற்றுக் கொண்டார்.

1955 ஆம் ஆண்டு  வீரகேசரி பத்திரிகையின் ஒப்புநோக்குனராக ஊடகவியல் துறையில் தனது பணியை ஆரம்பித்து 1956 ஆம் ஆண்டு அப்பணியிலிருந்து விலகி 1957இல் யாழ்ப்பாணம் பலாலி ஆசிரியர் கலாசாலையில் இணைந்து பொதுக் கல்விப் பயிற்சி பெற்று 1959 ஆம் ஆண்டு ஆசிரியர் தொழிலில் கால் பதித்தார். 1959 ஆம் ஆண்டு கொழும்பு மாளிகாவத்தை டென்ஹாம் ஆங்கிலப் பாடசாலையில் ஆசிரியராக நியமனம் பெற்று முதற் பணியை ஆரம்பித்தார். பின்னர் 1960 இலிருந்து 1968 வரை மன்னார் சித்தி விநாயகர் இந்துக் கல்லூரியிலும் 1969 இலிருந்து 1970 வரை யாழ்ப்பாணம் கீரிமலை நகுலேஸ்வரர் மகா வித்தியாலயத்திலும் 1971 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியில் கற்பித்த வேளையில் முதலாந்தரத் தலைமை ஆசிரியர் பதவியுயர்வு வழங்கப்பட்டு மாங்குளம் .. பாடசாலையில் 1974 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். 1974 அம் ஆண்டு மூன்றாந்தர அதிபராக யாழ்ப்பாணம் இளவாலை மெய்கண்டான் மகா வித்தியாலயத்தில் பணியாற்றுவதற்கான சந்தர்ப்பத் தினைப் பெற்றார். இப்பாடசாலையிலேயே 1982 ஆம் ஆண்டு இரண்டாந்தர அதிபராகவும் 1990 ஆம் ஆண்டு முதலாந்தர அதிபராகவும் பதவியுயர்வுகள் பெற்று 1998 ஆம் ஆண்டு தனது நிறைவான சேவையுடன் ஓய்வு பெற்றார். இவர் இப்பாடசாலையில் அதிபராகக் கடமையாற்றிய காலம் இப்பாடசாலையின் பொற்காலம் எனப் போற்றப்படுகின்றது.

1974 அம் ஆண்டு தொடக்கம் 1998 ஆம் ஆண்டு வரை இருபத்து நான்காண்டுகள் கிட்டத்தட்ட கால்நூற்றாண்டு காலம் அதிபராக அல்லும் பகலும் அயராத அர்ப்பணிப்போடு பாடசாலையின் முன்னோக்கிய பயணத்திற்காக உழைத்தார். இப்பயணத்தில் அவரது வாழ்க்கைத்துணைவியார் சிவகாமசுந்தரி அவர்கள் நினைத்துப்பார்க்கப்பட வேண்டியவர். புலவரவர்களின் நிகரற்ற நிர்வாகத்தின் கீழ் பாடசாலையின் பொற்காலம் உதயமானதெனலாம். வாழக்கல்மின் என்ற மகுட வாசகத்துடன் கல்வியிலும் இணைப்பாட விதான செயற்பாட்டிலும் துலங்கி அகில இலங்கை நாடகப் போட்டியில் வெற்றி பெற்று பெருமை கொண்டது. மாணவர்களின் நலன்கருதிய செயற்பாடுகளில் முதன்மை பெறுவனவாக நூல்நிலைய உருவாக்கம், உடற்பயிற்சித்திறன் உருவாக்கம், பௌதீக வளங்கள் பெருகின, ஞானாமிர்த மண்டபம், ஏழூர் அரங்கு, தாமரைத்தடாகமும் சரஸ்வதி சிலையும் எனத் தன் சிந்தனையில் உதித்த விடயத்திற்கு உயிர்கொடுத்தார். இவரது இத்தகைய செயற்பாடுக ளால் பாடசாலையின் கல்வித்தரமும் மாணவர் அதிகரிப்பும் இணைப்பாட விதானச் செயற்பாடுகளும் அதிகரித்தன. இதன் காரணமாக இளவாலை மெய்கண்டான் வித்தியாலயம் என்றிருந்த பாடசாலை இளவாலை மெய்கண்டான் மஹாவித்தியாலயம் எனத் தரமுயர்த்தப்பட்டது. பௌதீகவளம் மற்றும் கல்வித்தரங்களால் முன்னோக்கிச் சென்றுகொண்டிருந்தவேளை நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டுக் குழப்பங்களால் இப்பிரதேச மக்கள் இடம்பெயர நேர்ந்தது. இதனால் இப்பாடசாலையும் மானிப்பாய் நோக்கி இடம்பெயர்ந்தது.

மானிப்பாய் மெமோறியல் ஆங்கிலப் பாடசாலையில் மாலை நேரப்பாடசாலையாக இயங்கி வந்தது. இதனால் மாணவர்கள் பாரிய சிரமத்திற்குள்ளாகினர். கல்வியைத் தொடர்வதில் மாணவர்களுக்கு ஏற்பட்ட வறுமை நிலையால் கல்வியில் மந்தநிலை உருவாகியது. இதிலிருந்து மாணவர்களை மீட்கும் பணியில் முனைந்த அதிபர் புலவரவர்கள் மெமோறியல் பாடசாலைக்கு அருகில் இருந்த காணியில் தனிக்கொட்டகை அமைத்து மெய்கண்டான் பாடசாலையை காலைநேரப்பாடசாலையாக மாற்றியதுடன் மாணவர்களின் கல்வித்தடையாய் ஏழ்மை இருந்துவிடக்கூடாது என்பதில் அக்கறை யோடு செயற்பட்டார். ஏழ்மையின் ஏக்கங்கள் மறுக்கப்பட்ட அனைவரையும் அரவணைத்தார். வறுமை நிலையிலிருக்கும் மாணவர்களுக்குரிய கற்றல் உபகரணங்களை அன்பர்களின் உதவியின் மூலம் பெற்றுத் தனது அலுவலகத்தில் பாதுகாத்து உரிய மாணவர்களுக்கு வழங்கி அவர்களது கல்வியில் ஒளியேற்றியவர். இக்காலத்தில் அவர் ஆற்றியபணி காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது  என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்குக்கு இலக்கணமானவர். மாதா பிதா குரு வழிபாட்டினை தனது பதவிக்காலத்தில் ஆரம்பித்து வைத்தவர். இதனை அடியொற்றியே ஏனைய பாடசாலைகளிலும் இச் செயற்பாட்டினைப் பின்பற்றத் தொடங்கினர் என்றால் அப் பெருமை புலவரவர்களையே சாரும். இளவாலை மெய்கண்டான் மகா வித்தியாலயத்தின் இன்றைய வளர்ச்சிக்கு மூலவேராய் அமைந்தவர் புலவரவர்கள் என்பது வெள்ளிடைமலை.

கல்விச் சேவைக்கு அப்பால் சமூகமட்ட அமைப்புகளிலும் தன்னை இணைத்து சமூக சேவை களிலும் ஈடுபட்டார். குறிப்பாக 1952 ஆம் ஆண்டு இளவாலை காடிவளை இந்து இளைஞர் சனசமூக நிலையம் ஆரம்பிக்கப்பட்டபோது அதன் ஸ்தாபக தலைவராகவும் பின்னாளில் போஷகராகவும் சேவையாற்றினார். 1974-1982 வரையில் தெல்லிப்பளை வடமேற்கு கிராம அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளராகவும் 1982-1990 வரையில் தெல்லிப்பளை வடமேற்கு நீதிச்சபை செயலாளராகவும் 2009 இல் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை அபிவிருத்திச் சங்க உப தலைவராகவும் செயற்பட்டார். இவற்றினை விட கல்வி அபிவிருத்திப் புறக்கரும சேவைகளிலும் தன்னை ஈடுபடுத்தினார். 1961 இலிருந்து 1965 வரையில் மன்னார் சித்தி விநாயகர் பாடசாலை அபவிருத்திச் சங்கச் செயலாளராக வும் 1998-2001 வரையில் இளவாலை மெய்கண்டான் மகாவித்தியாலய பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளராகவும் 1993-1998வரையில் பண்டத்தரிப்புக் கல்விக்கோட்ட அதிபர் சங்க தலை வராகவும் 1995-1998 வரையில் தெல்லிப்பளை கல்விக்கோட்ட ஆசிரியர் இடமாற்றச் சபை உறுப்பின ராகவும் கல்விப்றக்கரும சேவைகளையாற்றினார்.

சைவப்புலவர் செல்லத்துரை அவர்கள் கல்வி மட்டுமல்லாது கலைத்துறையாலும் மாணவ சமூகத் தினை ஆற்றுப்படுத்தி உயரச் செய்தவர். இயல்பாகவே கலையாற்றல் பெற்றிருந்த புலவரவர்கள் தன் மாணவர்களைக் கொண்டு பல்வேறு நாடகங்களை அரங்கேற்றினார். இவர் மாணவர்களைக் கொண்டு தயாரித்த நாடகங்கள் பல்வேறு போட்டிகளிலும் முதலாமிடத்தினைப் பெற்றது மட்டுமல்லாமல் பாராட்டுக்களையும் பல்வேறு பரிசில்களையும் பெற்றுக் கொடுத்தன. கவிதை, கட்டுரை, நூல்கள் என இன்னோரன்ன ஆக்கஙகளை நமக்காக ஆக்கித் தந்தார். அவர் உறுப்பினராய் இருந்து வளம்பெற்ற அமைப்புகள் ஏராளம். அந்த வகையில்

1960-1970 வரை இளவாலை இளங்குமரன் கலாமன்றம்தலைவர்.

1961-1963 வரை மன்னார் கலாமன்றம்நாடக நெறியாளர்

1986-2009 வரை தெல்லிப்பளை கலை,இலக்கியக் களம்துணைத் தலைவர், தலைவர்,       நாடகக்குழு உறுப்பினர்.

1999-2009 வரை கலாநிதி பண்டிதமணி ஏழாலை மு.கந்தையா நூல் வெளியீட்டுக்கழக செயலாளர்.

2008-2009 வரை ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்க செய்குழு உறுப்பினர்.

2010-2011 வரை கொழும்புத் தமிழ்ச் சங்க கௌரவ ஆட்சிக்குழு உறுப்பினர்.

1960-1968 வரை மன்னார் மாவட்ட இந்து சமய வளர்ச்சிச் சங்கச் செயலாளர்.

1964-2009 வரை அகில இலங்கைச் சைவப்புலவர் சங்க செயற்குழு உறுப்பினராகவும், பின்னர்  

 பணியமைப்பளராகவும், சங்கத்தின் உபதலைவர், செயலாளர். தேர்வுச் செயலாளர்   போன்ற பதவிகளை வகித்தவர்.

1975-1982 வரை கீரிமலை சிவநெறிக் கழகப் பணி அமைப்பாளர்.

2000-2004 வரை யாழ் சைவபரிபாலன சபை செயற்குழு உறுப்பினர், உப தலைவர்.

1998-2006 வரை நாவலர் தர்மகர்த்தா சபை உறுப்பினர் ஐவரில் ஒருவர்.

1980-2009 வரை இளவாலை ஒல்லுடை ஞானவைரவர் ஆலய பரிபாலன சபை உறுப்பினர்,  செயலாளர், தலைவர்,போஷகர்.

1998-2006 வரை அகில இலங்கை திருமுறை மன்ற உப தலைவர்.

2000-2006 வரை ஒல்லுடை அறநெறிப்பாடசாலை அதிபர் போன்ற பொறுப்புகளில் பங்கேற்று அவ் அமைப்புகளின் செயற்திறனை அதிகரிக்கச் செய்தவர். இவற்றுக்கு மேலதிகமாக அகில இலங்கை சைவப்புலவர் சங்கம், யாழ்ப்பாணம் சைவபரிபாலன சபை, ஆரிய பாஷாபிவிருத்திச்சங்கம், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், ஐரோப்பிய சிவநெறிக்கழகம் ஆகிய நிறுவனங்களின் பரீட்சகராகவும் செயற்பட்டவர்.

தனது அநுபவத்தினையும் பட்டறிவினையும் மற்றவர்களுக்குக் கையளிக்கவேண்டு மென்ற உயரிய சிந்தனையின் வெளிப்பாடாகவும்  தனது வாழ்;க்கைத் துணைவியின் நினைவாக கலை, இலக்கிய படைப்புகளையும் ஆக்கிக் எம் சமூகத்திகுக் கையளித்தவர். அண்ணளவாக முப்பத்தைந்து நூல்களையும், பதினொரு மலராக்கங்களில் ஆசிரியராக வும் பங்கு கொண்டுள்ள இவர் சிறந்த படைப்பாக்கச் சிந்தனை நயம் கொண்டவராகக் காணப்படுகின்றார். அவரது சிந்தனையிலிருந்து வெளிவந்த படைப்புகளின் விபரங்களைப்  பட்டியல் படுத்தி அவணப்படுத்த வேண்டும்.

1969 காரைக்கால் வரலாறும் திருவூஞ்சலும்.

1978 சித்திரத் தேரில் சிவகாமியம்மன்இசைப்பாடல் நூல்.

1993 கோலங்கள் ஐந்து நாடகநூல்.

1999 வாக்கும் வாழ்வும் (வானொலிப் பேச்சுகளின் தொகுப்பு).

1999 கோமாதா (பசு பற்றிய கருத்துக் களஞ்சியம்)

1999 ஆனந்த மாலை (ஒல்லுடை வைரவர் வழிபாட்டுப் பக்திப் பாடல்)

1999 மங்கல மனையறம் (மகன் நாவரசன்ூசுரேகா தம்பதிகள் திருமண வெளியீடு)

2000 வள்ளல் ஏழுர் சிந்து நடைக்கூத்து.

2000 சித்திரத் தேரில் வித்தக விநாயகர் (இசைப்பாடல் நூல்)

2002 கல்வளை அந்தாதி உரை விளக்கம்.

2007 மங்கலத் திருமணம் (மகன் மாவிரதன் பிரகாஜினி தம்பதிகள் திருமண வெளியீடு)

2007 ஆத்மவிமோசனம் (அபரக்கிரியை).

2007 காரைநகர் ஆண்டிக்கேணி ஐயனார் புராண உரை.

2007 மங்கல தரிசனம் (பூர்வக்கிரியை).

2008 அரங்கப் படையல் (உரை, இசை, தாளலயம், சிந்துநடை, நாட்டிய நாடகங்கள், சிந்துநடை).

2009 சிவநெறி (ஐரோப்பிய சிவநெறிக் கழக தேர்வுப் பாடநூல்)

2009 அண்ணா பொன்ஏடு (அண்ணா கோப்பி நிறுவுனர் வரலாற்று நூல்)

2010 ஆன்ம விடுதலை வழிபாட்டு மலர்சிவகாமசுந்தரி செல்லத்துரை நினைவு நூல்.

2011 வாழ்வாங்கு வாழ்தல்சிவகாமசுந்தரி செல்லத்துரை நினைவு நூல்.

2011 திருமுறை அமுதம்.

2011 கலாபூஷணம் பண்டிதர் சி.அப்புத்துரை அவர்களின் வாழ்வியலும் நூலாக்கமும்.

2012 சிவாகாமி தமிழ்சிவகாமசுந்தரி செல்லத்துரை நினைவு நூல்.

2013 – இலக்கியத் தமிழ் இன்பம்சிவகாமசுந்தரி செல்லத்துரை நினைவு நூல்.

2014 – இன்பத் தமிழ்சிவகாமசுந்தரி செல்லத்துரை நினைவு நூல்.

2015 கலையும் வாழ்வும்சிவகாமசுந்தரி செல்லத்துரை நினைவு நூல்.

2015 வாடா மல்லிகை அண்ணா தொழிலகம்,இணுவில்.

2016 பத்தினித் தய்வம்சிவகாமசுந்தரி செல்லத்துரை நினைவு நூல்.

2016 – இறந்த பின் எங்கள் நிலை வினாவிடை.

2017 நற்சிந்தனைகள் 50 – சிவகாமசுந்தரி செல்லத்துரை நினைவு நூல்.

2017 நற்சிந்தனைகள் 50 ஒலிப்பேழைசிவகாமசுந்தரி செல்லத்துரை நினைவு நூல்.

2018 வில்லிசைப் பாடல்கள்சிவகாமசுந்தரி செல்லத்துரை நினைவு நூல்.

2019 திருமந்திர விருந்துசிவகாமசுந்தரி செல்லத்துரை நினைவு நூல்.

2020 மெய்கண்ட சாத்திரம்சிவகாமசுந்தரி செல்லத்துரை நினைவு நூல்.

2020 பண்பாட்டுக் கோலங்கள் ஏன் எப்படி?.

2020 கோமாதா குலம் காப்போம். ஆகிய நூல்களையும்

1979 இல் இளவாலை மெய்கண்டான் பொன் விழா மலர் பொன்மலர்ஆசிரியர்.

1985 இல் காங்கேயன் கல்வி மலர் ஆசிரியர்களில் ஒருவர்.

1998 இல் இளவாலை மெய்கண்டான் பவளவிழா மலர் ஆசரியர்.

2000 இல் கீரிமலை நகுலேஸ்வரக்குருக்களின் பவளவிழா மலரின் மலராசிரியர்.

2000 இல் சைவப்புலவர் சங்க வரலாறும் புலவர் வரலாறும்.

2000 இல் வலிகாமம் வடக்கு பிரதேச மலராசிரியரில் ஒருவர்.

2002 இல் சித்தாந்த ஞானக்களஞ்சியம் பண்டிதமணி ஏழாலை மு.கந்தையா நினைவின மலராக்கக் குழுவின் இரு மலராசிரியரில் ஒருவர்.

2002 இல் நித்திய கல்யாணிஇளவாலை காடிவளை இந்து இளைஞர் சங்கப் பொன் விழா மலர்.

2005 இல் கந்த பவள மலர்யாழ் சைவ பரிபாலன சபைத் தலைவர் .கந்தசாமி பவள விழா மலரின் ஆசிரியர்.

2005 இல் பார்புகழும் பன்னாலை பன்னாலை .திருநாவுக்கரசு பவளவிழா மலர் ஆசிரியர்.

2010 இல் சைவநாதம்அகில இலங்கைச் சைவப் புலவர் சங்க பொன் விழா மலராசிரியர்.

ஆகியனவற்றின் தொகுப்புகளுக்கான மலராசிரியராகவும், இணையாசிரியராகவும், மலராசிரியருள் ஒருவராகவும் எனப் பொறுப்புகளில் தங்கி தனது கடமையை செவ்வனே நிறைவேற்றிய பெருந்தகையாளன். வடக்கு, கிழக்கு மாகாண கல்வி நிறுவனங்களி;ன் தமிழ்மொழி, சைவ சமயபாட கருத்தரங்குகளில் வளவாளராகவும். பல்வேறு சமய நிறுவனங்ளின் வளவாளராகவும் பணியாற்றியது மட்டுமல்லாமல் சைவசித்தாந்தம், சைவப்புலவர் தேர்வு, பண்டித, பால பண்டித பரீட்சைகளுக்கான  வகுப்புகளை ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கத்தினராடு இணைந்து நடத்தி வந்ததுடன் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ்,இலக்கண, இலக்கிய டிப்ளோமா வகுப்பு மாணவர்குள்கான விரிவுரைகளையும் செய்தவர்.

சைவ நற்சிந்தனைகளையும், இலக்கிய சொற்பொழிவினையும் இலங்கை வானொலி, நேத்திரா தொலைக்காட்சி சேவையிலும் வழங்கிய இவர் இலண்டன் .பி.சி, இலண்டன் தமிழ் வானொலி, இலண்டன் வெற்றோன் தொலைக்காட்சி, இலண்டன் தீபம் தொலைக்காட்சி ஆகிய நிறுவனங் களினுடனான நேர்காணலிலும் பங்கு கொண்டு ஆழமான கருத்தினை முன்வைத்தார்.

இத்துணை பணிகளையும் தனது வாழ்க்கைத்துணையினது விட்டுக் கொடுப்போடும் பிள்ளைகளினது பங்ழிப்போடும் மனநிறைவாக செய்தவர். அவரது பணிவும் பண்பும் அடக்கமும் மனிதருள் மாணிக்கமாக வாழ வைத்தது. இத்துணை குணம் நிறை பெரியவரது மாண்பை உலகறியச் செய்வது மட்டுமல்லாது அவரை போற்றுவதனூடாக தமது விருதுகளும் சிறப்படையும் என எண்ணிய பல்வேறு அமைப்புகளும் அவருக்கு கௌரவத்தினையும் விருதினையும் வழங்கிக் கௌரவிக்க முன்வந்தனர். அந்த வகையில் பின்வரும் விருதுகளும் பட்டங்களும் கௌரவங்களும் அவரை அணிசெய்தன.  

 இவருக்கு வழங்கப்பட்ட கௌரவங்கள்.

கலைஞானகேசரிஇந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் – 2002.

கலாபூஷணம்   – கலாசார அலுவல்கள் திணைக்களம் – 2003.

சித்தாந்தச் செல்வர் காரைநகர் வீரகத்தி விநாயகர் ஆலய பரிபாலன சபை.

சிவநெறிப்புரவலர் 2வது உலக சேக்கிழார் மாடு, இந்து சமய கலாசார அமைச்சு,2005.

கலைச்சுடர் வலிகாமம் வடக்கு பிரதேச கலாசாரப் பேரவை.

சமாசச் சான்றோர் விருது புனர்வாழ்வு,கல்வி அபிவிருத்தி நிதியம், சமூக முன்னேற்றச் சங்கங்களின் சமாசம்– 2013.

சைவப்புலவர்மணிஇந்து நாகரிகத்துறை, யாழ் பல்கலைக்கழகம்,2017.

முதலமைச்சர் விருது வடக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களம், 2017.

சைவப்புலவர் என்ற சொல்லின் இலக்கணமாய்த் திகழ்ந்து தமிழின் பெருமையைப் பேணி ஏழை மாணவர்களின் கல்வியை ஒளிரவைத்து, திருமந்திர ஆளுமையுடை யோனாக தமது வாழ்க்கையை சைவத்தி;ற்கும் தமிழுக்குமுரிய தவமாகவும் செய்தியாக வும் வழங்கியவர். பற்றித் தொடரும் நினைவுகளைத் தந்து திருமந்திரப் பணி செய்து நின்றமையால் திருமூலர் குருபூசைத் தினமன்று இறைபதமடையும் பேற்றினைப் பெற்றார்.

சைவமும் தமிழும் வளர்த்த மூதறிஞர் இளவாலை பெற்றெடுத்த கலாபூஷணம் சைவப்புலவர் சுப்பிரமணியம் செல்லத்துரை அவர்கள் 2021-10-21  ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்

 

 

 

 

 

 

 

 

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!