Sunday, February 9

இராதாகிருஸ்ணன், உருத்திராபதி

0

1943.06.27 ஆம் நாள் இணுவிலில் உருத்திராபதி தையலம்பாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். யாழ் பரமேஸ்வராக் கல்லூரியில் கல்வி பயின்றதுடன் தனது தந்தை யாரை முதற் குருவாகக் கொண்டு வயலினைக் கற்று இணுவில் மஞ்சத்தடி முருகன் ஆலயத்தில் 1963 ஆம் ஆண்டு தனது முதலாவது வயலின் கச்சேரியை அரங்கேற்றினார்.

சிறந்த பாடகரான ஐயாக்கண்ணுதேசிகர், வயலின் வித்துவான் ஜி.சண்முகநாதன் ஆகியோரிடம் கற்று கலையில் தேர்ச்சி பெற்றார்.தனது இசையறிவை மேலும் வளர்ப்பதற்காக தமிழகம் சென்று வயலின்மேதை பரூர் எம்.எஸ்.அனந்தராமன் அவர்களிடம் வாசிப்பு நுட்பங்கள் அனைத்தையும் இரண்டாண்டுகள் கற்று நாடு திரும்பி தன்பணியை மேற்கொண்டார். தஞ்சாவூர் எம்.தியாகராஜனிடம் குரலிசையைப் பயின்று அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அடையாறு இசைக்கல்லூரி, திருவையாறு, கும்பகோணம் போன்ற இடங்களில் நடைபெற்ற இசைவிழாக்களில் தனது தனித்துவத்தை நிலைநாட்டினார். இந்தியப் பாடகர்களான தஞ்சாவூர் ரி.எம்.தியாகராஜா, எஸ்.கல்யாணராமன், மதுரை சோமசுந்தரம் போன்ற பல கலைஞர் களது இசை அரங்குகளையும் தனது இசைத்திறனால் அழகு செய்தார்.

யாழ். பல்கலைக் கழக இசைத்துறையில் வருகை விரிவுரையாளராகவும், பரீட்சகராகவும் பணியாற்றியவர். இலங்கை மட்டுமல்லாது லண்டன், கனடா, நோர்வே, ஜேர்மனி, மலேசியா, சிங்கப்பூர் போன்ற பல நாடுகளிலும் தனது கச்சேரிகளை சிறப்பாக நடத்தியவர். இவரால் உருவாக்கப்பட்ட வயலின் கலைஞர்களான இவரது மகள் திருமதி நி.சைந்தவி,சு.கோபிதாஸ்,ச.திவாகரன்,க.தர்மிகா போன்றவர்கள் இன்றும் இத்துறையில் பிரகாசித்துக்கொண்டிருக்கின்றனர்.

இவருடைய கலைப்பணிகளை கௌரவிக்கும் முகமாக இசைஞானதிலகம், சங்கீத வித்தியாசாகரம், இசை ஞானகலாநிதி, இன்னிசை வேந்தன், சாகித்தியசாகரம் போன்ற பட்டங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பெற்றவர். இசையோடு வாழ்ந்த இக்கலைஞன் 2015.09.06 ஆம் நாள் நல்லூர் துர்க்காமணி மண்டபத்தில் நல்லூர் உற்சவகால தெய்வீக இசையரங்கில் பக்கவாத்தியங்கள் புடை சூழ தனது பிள்ளைகளோடு முதல் உருப்படி மல்லாரியை வாசித்தபடியே நல்லைக்கந்தன் நிழலிலே சேர்ந்தார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!