Sunday, January 5

கந்தையா, பொன்னம்பலம்

0

1914-07-01 ஆம் நாள் கரவெட்டியில் பிறந்த பொன். கந்தையா யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கல்வி கற்றார். இலங்கைப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்துக் கொண்டு புலமைப்பரிசில் பெற்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் சென்றார். இரண்டு ஆண்டுகளில் பொருளியலில் முதுமாணிப் பட்டம் பெற்றார். ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் மேலும் இரண்டாண்டுகள் கல்வி கற்று இலங்கை திரும்பினார். இலங்கைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றிய கந்தையா பின்னர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நூலகராகப் பதவியேற்றார். கொழும்பு மாநகர சபையின் வேண்டு கோளின்படி, கொழும்பு பொது நூல்நிலையத்தை சீர்திருத்துவது பற்றி ஆராய்ந்து அறிக்கை வழங்கினார். பின்னர் மானிப்பாய் இந்துக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியைத் தொடர்ந்தார். இலங்கையின் வரலாற்றில் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரேயொரு இடதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர். தாழ்த்தப்பட்ட தமிழ்ச் சிறுவர்களின் கல்வி மேம்பாட்டிற்காகப் பாடசாலைகளில் அவர்களையும் அனுமதிக்க வேண்டுமென்று கோரியவேளை 60களில் கல்வி அமைச்சராக இருந்த டபிள்யூ. தகநாயக்காவின் உதவியினால் தாழ்த்தப்பட்ட பிள்ளைகள் படிப்பதற்கென வசதியற்ற பகுதிகளில் 11 பாடசாலைகளைத் தொடக்கி வைத்தார். தனிச் சிங்களச் சட்டம் கொண்டு வரப்பட்ட போது பொன் கந்தையா நெருக்கடியிலிருந்து நெருக்கடிக்கு என்ற தலைப்பில் நாடாளுமன்றத்தில் புகழ்கொண்ட உரையை நிகழ்த்தினார். பொன்னம்பலம் கந்தையா இங்கிலாந்தில் கல்விகற்ற போது இடதுசாரி மாணவர்களாக இருந்த பீட்டர் கெனமன், எஸ். ஏ. விக்கிரமசிங்க ஆகியோருடன் பழகும் வாய்ப்பைப் பெற்றார். இலங்கை திரும்பிய பொழுது இடதுசாரி சிந்தனையுடன் வந்தார். இலங்கையில் கம்யூனிஸ்ட் அமைப்பை உருவாக்குவதில் முதன்மைப் பங்கு வகித்தார். பருத்தித்துறை தேர்தல் தொகுதியில் 1947, 1952 தேர்தல்களில் பொதுவுடைமைக் கட்சி சார்பில் போட்டியிட்டுத் தோற்றார். ஆனாலும் 1956 தேர்தலில் 6,317 மேலதிக வாக்குகளினால் வெற்றியீட்டினார். பொன். கந்தையா 14,381 வாக்குகளும், மு.சிவசிதம்பரம் (சுயேட்சை) 8,064 வாக்கு களும், கே. துரைரத்தினம் (சமஷ்டிக் கட்சி) 5,859 வாக்குகளும் பெற்றனர். பின்னர் 1960 மார்ச் மாதத்தில் நடந்த தேர்தலில் புதிதாக உருவாக்கப்பட்ட உடுப்பிட்டி தேர்தல் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். 1960 ஆம் ஆண்டு வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!