Thursday, May 2

பெரியண்ணன் செல்வரத்தினம் அவர்கள் 1906 ஆம் ஆண்டுநவம்பர் 19ஆம் திகதி காரைநகரைச் சேர்ந்த சுப்பிரமணியம் என்பவருக்கும் மனைவி முத்தம்மாளுக்கும் ஒரே மகனாகப் பிறந்தவர் திரு.செல்வரத்தினம். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் கல்வி பயின்று 1925ஆம் ஆண்டில் மெற்றிக்கியூலேசன் பரீட்சையில் சித்தியடைந்தார். பின்னர் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் சில காலம் இன்ரர்மீடியட் வகுப்பில் கல்வி கற்றார். இறைபணிக்கு தம்மை அர்ப்பணித்த இவர் இந்தியாவின் செரம்பூர் இறையியல் கல்லூரியில் இளம் தெய்வீகவியல் (BD) பட்டதாரியானார். 1931ஆம் ஆண்டிலேயே தாய்நாடு திரும்பிய இவர் தென்னிந்திய ஐக்கிய சபையினுடைய யாழ்ப்பாணச் சபாசங்கத் தின் குருவாக இணைந்து வட்டுக்கோட்டை, அராலி, நவாலி, ஏழாலை ஆகிய இடங்களில் இறைதொண்டாற்றினார். 1936ஆம் ஆண்டு ஜனவரி 5 ஆம் திகதி வட்டுக்கோட்டை பேராலயத்தில் இவர் குருவாக அபிஷேகம் பண்ணப்பட்டார். திரு.செல்வரத்தினம் அவர்கள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் மாணவனாக இருந்த காலத்தில் 1924ஆம் ஆண்டு இந்தியாவின் சென்னை பட்டணத்தில் நடைபெற்ற கிறிஸ்தவ மாணவரியக்க மாநாட்டுக்கு சென்றிருந்தார். அவ்வேளையில் திருப்பத்தூர் ஆச்சிரமத்துக்குச் சென்ற செல்வரத்தினம் அவர்கள் கிறிஸ்தவ சேவ ஆச்சிரமத் தினுடைய வாழ்க்கை முறை, கடினமான ஒழுக்கங்கள், கிறிஸ்தவத்தை சுதேசமயமாக்கும் பணிகள், புலால் தவிர்த்த உணவு முறைகள், துறவறம் போன்றவற்றால் அதிகம் கவரப்பட்டு இவ்வாறானதொரு ஆச்சிரமத்தை யாழ்ப்பாணத்தில் அமைக்கவேண்டும் என்ற தரிசனத்துடன் நாடு திரும்பினார். இவருடைய இத்தரிசனத்தினை நனவாக்க இவருடைய அரிய நண்பர் அருட்கலாநிதி டி.ரி.நைல்ஸ் அவர்கள் இவருக்கு ஆதரவளித்தார். இதன் பயனாக இவர் மருதனார்மடம் பகுதியில் 1931ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ஆம் திகதி முற்றிலும் தமிழ் கலாசாரத்துக்கு அமைந்த ஆலயத்துடன் கிறிஸ்தவ சேவ ஆச்சிரமத்தை ஸ்தாபித்தார்.

இவர் மணவாழ்வை விலக்கி துறவற வாழ்வை ஏற்று வாழ்ந்தவர். தன்னுடைய வாழ்வில் அதிகமான நாட்களை மருதனார்மட ஆச்சிரமத்திலே செலவிட்ட செல்வரத்தினம் அவர்கள் அவுஸ்திரேலியா, ஒல்லாந்து, இந்தியா, சுவிற்சர்லாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில்  இறைபணியாற்ற அழைக்கப்பட்டார். மிகவும் நகைச்சுவை உணர்வு கொண்ட இவர் தாம் மகிழ்ந்து இருப்பதுடன் மற்றவர்களையும் மகிழ்வுடன் வைத்திருக்கும் திறமை கொண்டவர். உலகத் திருச்சபை மாமன்றத்திலும், கிறிஸ்தவ மாணவர் இயக்க மாநாடுகளிலும் முதன்மைக் குருவாகச் சேவையாற்றினார். இவருடைய முயற்சியினால் காங்கேசன்துறை கயரோக வைத்தியசாலையிலும் கைதடி முதியோர் இல்லத்திலும் தேவையுள்ள அம்மக்களுக்கெனச் சிற்றாலயங்கள் அமைக்கப்பட்டன. சமய வேறுபாடு களின்றி இவரைத் தேடிவரும் மக்கள் ஆச்சிரமத்தில் தங்கி அமைதி பெற்றுச் சென்றனர். மிகவும் கடினமான வாழ்க்கை முறையைத் தெரிந்து கொண்ட இவர் மக்கள் பணிக்கெனவே தன்னை முழுமையாக அர்ப்பணித்திருந்தார். 1973 மார்ச் 29ஆம் திகதி அதிகாலை இந்த அன்புத் தீபம் யாழ். மண்ணில் அணைந்து இறைவனடி இணைந்து கொண்டது. இவரது தரிசனத்தால் மலர்ந்த மருதனார்மடம் ஆச்சிரமமும் கிழக்கு மாகாணத்தில் கிரான் ஆச்சிரமமும் இன்றும் இறைபணியுடன் மக்கள் பணியையும் ஆற்றி வருகின்றன.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!