Saturday, April 27

ஆணல்ட் சதாசிவம்பிள்ளை, அருணாசலம்

0

1820.10.11 ஆம் நாள் நவாலி, மானிப்பாயில் பிறந்தவர். ஜே.ஆர்.ஆணல்ட் (J.R. Arnold) ஈழத்தின் தமிழறிஞர், தமிழாசிரியர், இதழாசிரியர், புலவர் ஆவார். இவர் சோவல் ரசல் இராசசேகரம்பிள்ளை எனவும் அறியப்படுகிறார். ஆணல்டின் தமிழ்ப் பெயர் சதாசிவம்பிள்ளை என்பதாகும். இவரது தந்தை யார் தெல்லிப்பளையைச் சேர்ந்த அருணாசலம் ஆவார். சதாசிவம்பிள்ளை 1835 இல் கிறிஸ்தவரானார். மானிப்பாய் அமெரிக்கன்மிஷன் பாடசாலையில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்ற சதாசிவம் பிள்ளை, 1832 இல் வட்டுக்கோட்டை செமினறியில் இணைந்து 1840 இல் பட்டதாரியாகி மானிப்பாய் ஆங்கிலப் பாடசாலையில் ஆசிரியராகச் சேர்ந்தார். 1844 இல் சாவகச்சேரி அமெரிக்கமிஷன் ஆங்கிலப் பாடசாலையில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். அதன் பின்னர் உடுவில் மகளிர் கல்லூரிக்கு தலைமையாசிரியரராக 1847இல் மாற்றம் பெற்றார். சதாசிவம்பிள்ளை ஜூலை 9, 1846 இல் முத்துப்பிள்ளை(Margaret E. Nitchie) என்பாரைத் திருமணம் புரிந்தார். அமெரிக்கப் பாதிரிமார்கள் பலரும் தமிழ் பயில்வதற்கு உதவிசெய்த சதாசிவம்பிள்ளையவர்களின் சேவையினை அக்காலத்தில் வெகுவாகப் பாராட்டினார்கள். செந்தமிழ் வளர்த்த செல்வரும் செம்மலுமாகிய இவரை வைமன் கதிரவேற்பிள்ளையவர்கள் பெரிதும் அபிமானித்து என்னாசை நண்பன் சதாசிவ நாவலன் என்று பாடிப் புகழ்ந்துள்ளார். இவருடன் கல்வி பயின்றவர்களாக கோணிலியஸ் சரவணமுத்து, ஹலக்சரவணமுத்து, டேவிட்சிதம்பரப்பிள்ளை, டானியல்.எல்.கறோல், வில்லியம் நெவின்ஸ் சிதம்பரப்பிள்ளை, றொக்வுட்சின்னத்தம்பி, பார்குமாரகுலசிங்கம், இராகூல்ட் முதலியோர்களைக் குறிப்பிடமுடியும். ஈழத்தின் முதல் பத்திரிகையான உதயதாரகை (Morning Star) ஆகியவற்றின் ஆசிரியராகப் பணிபுரிந்தது மட்டுமல்லாமல், யாழ்ப்பாணத்தில் பத்திரிகைத்துறையின் வளர்ச்சிக்குப் பெருந்தூணாக இருந்தார்.

இவர் எழுதிய நூல்களுள் மிக முக்கியமானது பாவலர் சரித்திர தீபகம் ஆகும். இது தவிர, கிறிஸ்தவ தமிழ் இலக்கியங்களையும் இயற்றி வெளியிட்டார். பாவலர் சரித்திர தீபகம், இல்லற நொண்டி (1887, நொண்டி ஒருவன் உத்தம ஆடவர், நற்குணப் பெண்டிர், துர்க்குணப் பெண்டிர் ஆகியோரின் இயல்புகளைக் கூறுவதாக அமைந்துள்ளது), மெய்வேட்டசரம், திருக்கடகம், நன்நெறிமாலை, நன்நெறிக்கொத்து, Carpotacharam,  வான சாத்திரம், வெல்லை அந்தாதி (சிறுவர் நூல், 16 பக்கங்கள், 1890) ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளார். வசனநடை கைவந்த எழுத்தாளராயிருந்ததோடு பாவினங்கள் பலவற்றை இசையோடுயாத்தமைத்த புலவனாயுமிருந்த இவர் 1896-02-20 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!