1820 ஆம் ஆண்டு சுதுமலை என்னும் இடத்தில் பரம்பரை வைத்திய நிபுணரான வைத்தியநாதர் என்பவருக்கு மகனாகப் பிறந்த இவர் தமக்கு இயல்பாயிருந்த தமிழாற்றலை விருத்திசெய்ததோடு ஆங்கிலம், கணிதம், வானசாஸ்த்திரம், சமஸ்கிருதம் ஆகிய துறைகளிலும் நன்கு கற்றுணர்ந்தவர். அட்சர கணிதத்தில் திறமை பெற்ற இவர் தமது பெயரோடு டானியல்.எல்.கறோல் என்ற பெயரை வட்டுக்கோட்டை செமினரியின் விதிமுறைகளுக்கமைவாக வழங்கி வந்தார். இதனால் அவரை எல்லோரும் கறோல் விசுவநாதபிள்ளை என வழங்கி வந்தார்கள். வட்டுக்கோட்டை செமினரியில் கல்வி கற்ற காலத்தில் கலாநிதி நாதன்வார்ட் என்பவர் அதிபராகவும் ஹென்றி மார்ட்டின் பேராசிரியராகவும் பணியாற்றினார்கள்.
இவருடன் கல்விபயின்றவர்களாக கோணிலியஸ் சரவணமுத்து, ஹலக்சரவணமுத்து, டேவிட்சிதம்பரப்பிள்ளை, ஆர்னோல்ட் சதாசிவம்பிள்ளை, வில்லியம் நெவின்ஸ் சிதம்பரப்பிள்ளை, றொக்வுட்சின்னத்தம்பி, பார்குமாரகுலசிங்கம், இராகூல்ட் முதலியோர் களைக் குறிப்பிடமுடியும். இவர் படிக்கும் காலத்தில் ஆங்கிலத்தில் கொலன்சோ என்பவர் எழுதிய நூலை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டார். வீசகணிதம் எனப்படும் நூலை தமிழிலிதாம் காணாத காரணத்தினால் தமிழ் மாணவர்கள் பயன்பெறுவதற்காக இதனை வெளியிட்டதாக எழுதியுள்ளதுடன், வீசகணிதத்திலும் விஞ்ஞானநூல்களிலும் வானநூல்களிலும் நிலநூல்களிலும் நிரம்பிய அறிவு பெற்றிருந்தவர். ஆரம்ப காலங்களில் நாவலர் அவர்களோடு மேடைகளில் கண்ணுக் குச் சுயவொளியுண்டோ? இல்லையோ? என்னும் விவாதத்தில் ஈடுபட்டிருந்தார். பின்னர் இருவரும் ஒன்றாகி சைவம் வளர்ப்பதில் உறுதி பூண்டனர்.பிள்ளையவர்கள் தாம் இதுவரை காலமும் சைவ நிந்தனை பேசியதற்கும் எழுதியதற்கும் பிராயச்சித்தமாக தமது சட்டையில் குற்றியிருந்த பொன்னூ சியைக் கழற்றி நெய்விளக்கிற் காய்ச்சித் தமது நாவைச் சுட்டுக்கொண்டார். அன்றிலிருந்து மீளவும் சைவத்திற்கு பிள்ளையவர்கள் மீண்டார்.எல்லாவற்றிலும் மேலாக பலகோணங்களிலும் தயாரிக்கப் பட்ட அகராதிகளில் இருந்து பிள்ளையவர்கள் தமிழ் ஆங்கில அகராதி ஒன்றைத் தயாரித்தார். சென்னை கலாசங்கத்தார் 1929 ஆம் ஆண்டு வரை 676 பக்கங்களையுடைதாக ஐந்து பதிப்புக்களாக வெளியிட்டுள்ளனர்.1857 ஆம் ஆண்டு வரை உதயதாரகை பத்திரிகையின் பத்திராதிப ராகவும் பணியாற்றினார். இலங்கை சட்டசபையில் தமிழ்பேசும் மக்களின் பிரதிநிதியாக விருந்த சேர் முத்துக் குமாரசுவாமி அவர்கள் காலமானதனால் அவரது சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு சேர்பொன். இராம நாதனவர்களே தகுதியானவர் என நாவலரது துணையோடு தீர்மானம் நிறைவேற்றியவர். இத்தகைய பெருமைகளையுடைய இவர் 1880-11-21 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.