Thursday, May 30

அங்கையன் கைலாசநாதன்

0

1942 ஆம் ஆண்டு மண்டைதீவில் பிறந்தவர். ஈழத்து எழுத்தாளர். நாவல், சிறுகதை, கவிதை, ஓவியம், வானொலி நாடகம் போன்ற பல துறைகளில் கால்பதித்தவர். ஒரு பத்திரிகையாளராக ஊடகத்துறையில் பணியாற்றியவர். சிறிதுகாலம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் தமிழ் வானொலி நாடகத் தயாரிப்பாளராகவும், வானொலி மஞ்சரி சஞ்சிகையின் ஆசிரியராகவும் பணிபுரிந்திருக்கிறார். ஈழத்து நெய்தல் நில மக்களது அவல வாழ்வைச் சித்திரித்து வெளி வந்த முதல் ஈழத்து நாவல் இவரது கடல் காற்று (1962) என்றே ஆய்வறிஞர்கள் கருதுகின்றனர். அங்கையன், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கல்வி கற்றார். 1960 ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் சு. வித்தியானந்தன், க. கைலாசபதி ஆகியோரின் வழிகாட்ட லில் தமிழ் மொழியைச் சிறப்புப் பாடமாகக் கற்று சிறப்புப் பட்டதாரியாக வெளியேறினார். கொழும்பிலுள்ள பிரித்தானியத் தூதராலயத்தில் மொழிபெயர்ப் பாளராகக் கடமையாற்றினார்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பயிலும்போதே அங்கையன் தன்னையொரு படைப்பாளியாக வெளிக்காட்டிக் கொண்டார். இலக்கியக் கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள் பலவற்றை எழுதினார். 2000 ஆம் ஆண்டின் பின் அங்கையன் சிறுகதைத் தொகுப்பு, நாவல் பிரசுரமாகின. 2000, 2001 இல் வடகிழக்கு மாகாண சபை அவரது சிறுகதைத் தொகுப்புக்கும் சிட்டுக் குருவிகளும் வானம்பாடிகளும் என்ற நாவலுக்கும் பரிசு கொடுத்துக் கௌரவித்தது. 4 ஆண்டுகளாக அங்கையன் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நாடகத் தயாரிப்பாளராகப் பணியாற்றினார். ஈழத்தின் மெல்லிசைப் பாடல் முன்னோடி அங்கையன். “மணிக்குரல் ஒலித்தது’ என்ற புகழ்பெற்ற பாடல் உட்பட 9 மெல்லிசைப் பாடல்களை எழுதியிருக்கிறார். அங்கையனின் சிட்டுக் குருவிகளும் வானம்பாடிகளும் 1974 இலும் செந்தணல் 1968 இலும் கடல் காற்று 1962 இலும் பிரசுரமாகின. சொர்க்கமும் நரகமும் அவர் எழுதிய நான்காவது நாவல். செந்தணல் 1968 இல் படைக்கப்பட்ட பிரதேச நாவல். இது கொழும்பு நகர வாழ்வைச் சித்திரிப்பது. மித்திரன் இதழில் தொடர்ச்சியாக வெளிவந்தது. வீரகேசரி, ஈழநாடு பத்திரிகைகள் அவரது சிறுகதைகளை வெளியிட்டிருக்கின்றன. பதினைந்து ஆண்டுகள் தரமான பல ஆக்க இலக்கியங்களைப் படைத்த அங்கையன் கைலாசநாதன் 1976 ஆம் ஆண்டு வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!