Thursday, May 30

வேதாநந்தம், அகஸ்ரின் (ஏ.வி.ஆனந்தன்)

0

1944.09.23 ஆம் நாள் குளமன்கால் – மல்லாகம் என்னும் இடத்தில் பாரம்பரிய கலைக் குடும்பத்தில் பிறந்தவர்.1960 ஆம் ஆண்டிலிருந்து சிற்பக் கலையில் சிறந்து விளங்கிய  இவர் இக்கலை மட்டுமல்லாது கூத்து, நாடகம், பாடல் எனப் பல்துறைக் கலைஞனாகவும்  தன்னை வெளிப்படுத்தியுள்ளார். தொழில் முதல்வன், நடிகன்,பாடகன், இசைக்கருவி மீட்போன், கவிதைகள் யாப்போன், வர்த்தகத்துறையில் வித்தகர், பல தொழில்களை துறைபோகக் கற்றவர். நாடகத்துறையில் பிரமாண்டமான கண்கவர் நாடக அரங்குகளை அழகுற நிருமாணிப்பவர். காட்சியமைப்பாளர், படவரைஞர், மரத்தினால் உருவங்களைச் சிற்பமாகச்செதுக்கும் அற்புதச் சிற்பி. இருப்பினும் சிற்பக் கலையில் தன்னை ஆழமாக அர்ப்பணித்துப் பல சாதனைகளையும் பதிவுகளையும் ஏற்படுத்தி எளிமையாக வாழ்ந்தவர்.

யாழ்ப்பாணம், திருகோணமலை, கண்டி, கொழும்பு, ஐரோப்பிய நாடுகளிலும் தனது மரச்சிற்பப் படைப்புகளைக் காட்சிப்படுத்தியவர். இவரின் ஆக்கப்படைப்புச் சிந்தனை என்பது மரபிலிருந்து நவீனம் வரை சகலதையும் மறுதலிக்கின்ற ஒன்றாக அர்த்தம் கொள்ளப்பட முடியாதது.

இன, மதபேதமின்றி அனைவரையும் அரவணைத்துத் தனது கலைப் படைப்பில் வெளிப்படுத்தியமை  குறிப்பிடத்தக்கது. வேப்பமரத்தில் செதுக்கப்பட்ட  ஆனந்த கணபதி, வாகை மரத்தில் செதுக்கப்பட்ட நாதஸ்வரக்கச்சேரி, கல்வாகையில் கமக்காரன், சீமைநூக்கில் ஏழையும் தோழனும், காவல்காரன், குழந்தையேசுவும் மாதாவும், பனை மரத்தினால் ஆன இவரது சிற்பப்படைப்பு வத்திக்கான் மியூசியத்திலும் யாழ். மக்களின் மறக்கமுடியாத ‘மாபெரும் புறப்பாடு” என்னும் சிற்ப ஆவணம் ஜேர்மன் கலைக்காட்சியகத்திலும் இடம்பெற்றுள்ளமை எமக்குப் பெருமைதருவதாகும். எட்டடி உயரம் பத்தடிச் சுற்றளவு உயரமரத்தில் சுனாமியின் அழிவுகளைச் செதுக்கிய மரச்சிற்பம் போன்றவற்றை இவரது அரிய படைப்புக்களுக்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.

ஜேர்மனி டெற்ல்ன் கலைக்கூடம், ஜேர்மனி தமிழர் கலாசாலை மண்டபம், பிரான்ஸ் அமோக்மண்டபம், நெதர்லாந்து உலாமியூசியம், சுவிற்சர்லாந்து நகர மண்டபம், இலண்டன் கலையரங்கம் போன்ற மேலைத்தேச நாட்டு அரங்கங்களில் சிற்பக் கண்காட்சிகளை நடத்தியவர். 1997 ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பொது நூலகக் கேட்போர் கூடத்தில் யப்பானிய தூதுவராலய அநுசரணையுடன் நடைபெற்ற சிற்பக்கண்காட்சியில் இவரால் எழுதப்பட்ட மும்மொழி நூல்களான கலைச்சுவடுகள் (தமிழ்), கலாசட்டகான (சிங்களம்), வூட்ஸ்கல்ப்ரர்ஸ் (ஆங்கிலம்); ஆகிய நூல்களை கனேடிய உயர்ஸ்தானிகர் அலோய்பெரேரா அவர்கள் வெளியிட்டு வைத்த பெருமைக்குரியவர்.

யாழ்ப்பாணம் திருமறைக் கலாமன்றத்தில் ஆரம்பகால உறுப்பினராக இருந்து அம்மன்றத்தின் பல செயற்பாடுகளுக்கும் உறுதுணையாகத் திகழ்ந்தவர். இவரது இக்கலையின் வெளிப்பாட்டுத் திறனைப் போற்றும் வகையில் 1997 இல் திருமறைக் கலாமன்றத்தினால் சிற்பச்செல்வன் விருது, இதே ஆண்டில் திருகோணமலையில் 100 சிற்பங்கள் புகைப்பட அஞ்சலட்டை வெளியீட்டு விழாவில் தங்கவிருது, கோணேஸ்வரர் விருதும், கண்டி சிற்றிமிஸன் மண்டபத்தில் சிற்பஜோதி விருதும், ஜேர்மன் கலாசார ஆன்மீகப் பணியகத்தினால் அருங்கலைச் சுவடுகளின் காவலன் விருதும், வலிகாமம் வடக்கு கலாசாரப் பேரவையினரின் கலைச்சுடர் விருதும், இலங்கை கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கலாபூஷணம் விருது, இவரது புதிய தொழில்முயற்சிகளைப் பாராட்டி ‘சில்பகர்மாந்த” என்னும் ஜனாதிபதி விருதும் வழங்கிக் கௌரவிக்கப்பெற்ற வலிகாமம் வடக்கின் மூத்த படைப்பாளிகளில் ஒருவராவார். வலிகாமம் வடக்கு கலாசாரப் பேரவையின் பொருளாளராக 2008-2009 வரையான காலப்பகுதியில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.  2013-06-03 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!