யாழ்ப்பாணம் – பிரான்பற்று என்னும் ஊரில் விளம்பி வருடம் 1899.01.29 ஆம் நாள் பூரம் நட்சத்திரத் தில் பிறந்தவர். சுவாமிகள் தமது ஆரம்பக் கல்வியை பிரான்பற்று சிறுவர் பாடசாலையிலும், வடலியடைப்பு சைவ வித்தியாலயத்திலும் கற்று, பின்னர் கந்தரோடை இந்துக் கல்லூரியில் கற்று கேம்பிறிட்ஜ் சீனியர் தேர்வில் சித்தியடைந்தவர். தமது ஊரிலுள்ள முருகமூர்த்தி ஆலயத்தில் சிவத்தொண்டுகள் செய்து, திருமுறைப் பிரார்த்தனைப் பாடல்களைப்பாடி பிரார்த்தனைகளில் ஈடுபட்டார். இக்காலத்தில் தியத்தலாவ நில அளவைத் திணைக்களத்தில் எழுதுவினைஞர் சேவை நியமனம் கிடைத்தது. சத்தியம், சாந்தம், இன்முகம், பரோபகாரம் என்னும் பண்புகளால் நல்லவராக மற்றையோரால் மதிக்கப்பட்டார். தவத்திரு யோகர் சுவாமிகளினது தொடர்பு சுவாமிகளுக்குக் கிடைத்தது. குருநாதரான யோகர் சுவாமிகள் தனது சீடரான மார்க்கண்டு சுவாமிகளுக்கு ஆன்மீகப் பயணம் தொடர்பானவற்றை தாயினும் இனிய பரிவுடன் சொல்லாலும், செயலாலும் இடையிடையே திருமுகங்கள் மூலமாக உணர்த்திய பின்னர் அவரை சுயமாக செயற்பட வைத்தார். சுவாமிகள் தனது 50ஆவது வயதில் உத்தியோகத்திலிருந்து விலகி கொழும்பிலிருந்து நேராக கொழும்புத் துறையில் யோகர்சுவாமிகள் குடிகொண்டிருந்த கொட்டிலைச் சென்றடைந்தார். யோகர் சுவாமிகள் அவரை ஏற்று வண்ணார்பண்ணையிலுள்ள ஒரு வீட்டில் தங்கவைத்தார். பின்னர் கைதடியிலுள்ள ஆசிரியர் விசுவலிங்கம் வீட்டில் அமைந்திருந்த குடிசையில் 1950.12.29 ஆம் நாள் தங்கவைத்தார். சுவாமிகளும் அவ் ஆச்சிரமத்தில் தங்கியிருந்து உயர் ஞான சாதனையில் ஈடுபட்டார். யோகர் சுவாமிகள் சோல்பரிப்பிரபுவின் மகன் இராம்ஸபோதத்தை சிலகாலம் மார்க்கண்டு சுவாமிகளுடன் தங்கவைத்து அருளுரை வழங்குமாறு கூறினார். இராம்ஸபோதம் மகனைப்போன்று அன்பு செலுத்தி தோழனாகவும், தொண்டனாகவும் இருந்து சாதனையில் ஈடுபட்டார். அமெரிக்கத் துறவி சுப்பிரமனிய சுவாமி, ஜேர்மன் சுவாமி, ஆஸ்திரேலிய பன்றிக்குட்டிச் சுவாமிகள் உட்பட பலர் சுவாமிகளிடம் அருளாசி பெற்று வந்தார்கள்.சுவாமிகளுடைய நினைவாக பிரான்பற்றில் மார்க்கண்டு சுவாமிகள் சபை ஸ்தாபிக்கப்பட்டு பல சமூக சேவைகளைச் சிறப்பாகக் செய்து வருகின்றமை குறிப்பிடத் தக்கது. 1984.05.29 ஆம் நாள் நண்பகல் பன்னிரண்டு மணிக்கு கார்த்திகை நட்சத்திரத்தில் சிவன் திருவடி சேர்ந்தார்.