Thursday, October 10

திருநாவுக்கரசு,சிவக்கொழுந்து (அரசையா)

0

1926.04.28 ஆம் நாள் செம்மணி வீதி- நல்லூரைப் பிறப்பிடமாகக்கொண்ட இவர் தனது ஆரம்பக் கல்வியை நல்லூர் சி.சி.த.க பாடசாலையிலும் இடைநிலைக்கல்வியை பரியோவான் கல்லூரியிலும் முத்துத்தம்பி வித்தியாலயத்திலும் கற்றார். பிரித்தானியரது ஆட்சிக் காலத்தில் இந்தியத்தரைப் படையில் கடமையாற்றிய பின்னர் யாழ்ப்பாணம் செல்லம் ஸ்ரூடியோவில் புகைப்படக் கலைஞராகப் பணிபுரிந்து வந்தார். 1948 ஆம் ஆண்டு முதல் நாடகத்துறையில் மிகுந்த ஈடுபாட்டோடு உழைத்தவர். நடிப்பு, வேடஉடை அமைப்பு, ஒப்பனை, நெறியாள்கை, காட்சியமைப்பு என நாடகத்தின் பிற கலைகள் அனைத்திலும் தனது சிறப்பான ஆற்றல்களை வெளிப்படுத்தினார். நாடகம் மட்டுமன்றி சினிமா, சிற்பம் , புகைப்படக்கலை ஆகியவற்றில் வல்லமையுடையவராகவும் திகழ்ந்தார். பாரம்பரிய நாடகங்கள், யதார்த்தப் பாங்கில் அமைந்த சமூக நாடகங்கள், வரலாற்று நாடகங்கள், இலக்கிய நாடகங்கள், நடன நாடகங்கள், யதார்த்தப் பண்பு சார்ந்த நவீன நாடகங்கள் என நாடக வகைகள், மோடிகள் யாவற்றிலும் கற்றறிவும், பட்டறிவும் கொண்டவராக விளங்கினார். இவரது நாடக வாழ்வு என்பது நீண்ட காலத்தை உள்ளடக்கியதாகவும் பரந்து விரிந்த ஒன்றாகவும் இருந்து வந்துள் ளது.இலங்கைத் தமிழ் அரங்கின் பிதாமகர்களான கலையரசு சொர்ணலிங்கம், வி.சி.பரமானந்தம் எனப்பெரியோர் யாவரோடும், இலங்கையின் சமகால நாடகக் கலைஞர் எல்லோருடனும் நெருங்கிய தொடர்புடையவராக அன்றுதொட்டு இன்றுவரை வாழ்ந்துள்ளார். வண்ணைக்கலைவாணர் நாடக மன்றம், ஒறியன்ட்ஸ் விளையாட்டு, நுண்கலைச்சங்கம், மானிப்பாய் மறுமலர்ச்சி மன்றம்,நாடக அரங்கக்கல்லூரி போன்ற பல நாடக அமைப்புக்களோடு இணைந்து நின்று இலங்கைத் தமிழ் நாடக வளர்ச்சிக்கு அரும்பணியாற்றியுள்ளார். நாடக அரங்கக்கல்லூரியின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவர். இவர் நடித்தும் நெறியாள்கை செய்ததுமான நாடகங்கள் எண்ணிலடங்காதவை. வண்ணைக் கலைவாணர் நாடகமன்றத்தின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவரான இவர் அம்மன்றத்தின் தயாரிப்புகளான வீரமைந்தன், சரியா தப்பா, திப்புசுல்தான் ஆகிய நாடகங்களை நெறியாள்கை செய்ததோடு அவற்றில் பாத்திரமேற்றும் நடித்துள்ளார். திப்புசுல்தான் நாடகம் இலங்கை கலைக் கழகப் பரிசினை வென்றமை குறிப்பிடத்தக்கது. மானிப்பாய் மறுமலர்ச்சி மன்றத்திற்காக வையத்துள் தெய்வம் என்ற நாடகத்தினையும் நாடக அரங்கக்கல்லூரி சார்பாக பாஞ்சாலிசபதம் என்ற நாடகத்தினையும் நெறியாள்கை செய்துள்ளதோடு உறவுகள், எந்தையும் தாயும் ஆகிய நாடகங்க ளில் பாத்திரமேற்று நடித்துள்ளார்.சினிமாத்துறையில் கடமையின் எல்லை என்ற படத்தின் உதவி நெறியாளராகவும், டாக்சிட்றைவர், குத்துவிளக்கு ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இவரது சிற்பக்கலை வண்ணத்தினை வடமராட்சியிலுள்ள தமிழ்த்தாத்தா கந்தமுருகேசனார், சதாவதானி கதிரவேற்பிள்ளை ஆகியோரது சிலைகள் வெளிக்காட்டி நிற்கின்றன. பல்திறமையுள்ள கலைஞன் தன் இறுதிக் காலம் வரை கலைத்துறைக்காக வாழ்ந்து 2016.02.17 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!