1943.08.02 ஆம் நாள் யாழ்ப்பாணம் மத்தியூஸ், வீதி, குருநகர் என்ற இடத்தில் பிறந்து பிரான்சில் வாழ்ந்தவர். நூற்றுக்கு மேற்பட்ட நாடகங்களை நடித்தும் பாடல் நடிப்பு என ஆயிரக்கணக்கான மேடைகளில் இலங்கையின் பல பாகங்களிலும் தோன்றியதோடு மட்டுமல்லாது அருட்தந்தை நீ.மரியசேவியர், அமரர் பூந்தான் ஜோசேப் போன்ற பெருங்கலைஞர்களோடு இணைந்து பணியாற்றிய ஓர் கலைஞன். இவரது கலைவாழ்வு பல்லாயிரம் மைல்களைக் கடந்து ஐரோப்பிய மண்ணிலும் தொடர்ந்தமை குறிப்பிடப்பட வேண்டியதாகும். மானம் பெரிது, ஜோசப்வாஸ் போன்றன இவரது ஆரம்பகால நாடகங்களாகும். இதனைத் தொடர்ந்து இறைவன் இருக்கின்றானா?, ஊதாரிப்பிள்ளை, மானம்காத்தமறவன், செஞ்சோற்றுக்கடன் போன்ற பதினைந்திற்கும் மேற்பட்ட சமூக, சரித்திர, நாடகங்களை தானே தயாரித்து நெறியாள்கை செய்து நடித்து மக்கள் மத்தியில் புகழ்பெற்றமை மட்டுமன்றி, மனம் திருந்திய சவுல், வழக்கறிஞன், அபாய அறிவிப்பு போன்ற நாடகங்களும் இவருக்குப் புகழைப் பெற்றுக் கொடுத்தமை குறிப்பிடத்தக்கது. ஜேர்மன் பிராங்போட் தமிழ் மன்றத்தின் சார்பில் தேவன் பட்டிக்கிராமம், அரிச்சந்திரா மயான காண்டம் அரங்கேற்றியதோடு ஜேர்மன் முன்ரா நகரத்தில் அபசுரம் என்ற நாடகத்தினையும் அரங்கேற்றி கலையுலகில் பெரும் புகழைப் பெற்றுக்கொண்டார். நடிப்பிசைக் காவலர் என்ற விருதுபெற்றவர்.