1947-10-27 அம் நாள் யாழ்ப்பாணம் குரும்பசிட்டி என்ற இடத்தில் பிறந்து கனடாவில் வாழ்ந்தவர். சிறந்த நாடகக்கலைஞன். இவர் குரும்பசிட்டி ஆ.சின்னத்துரை இயக்கத்தில் “கற்பரசி நளாயினி” என்ற நாட்டுக்கூத்தில் நளாயினியாக பெண் வேடமிட்டு முதன் முதலாக நடித்தவர். பின்னர் நாட்டியக் கலைஞர் வேல் ஆனந்தனின் இயக்கத்தில் பிரதான பாத்திரமேற்று நடித்த புலித்தேவன் நாடகம் மன்னார் நாடக விழாவில் முதற்பரிசு பெற்றது. குரும்பசிட்டி உதயதாரகை மன்றத்தால் தயாரிக்கப்பட்ட இதய ஒளி நாடகத்தில் கதாநாயகனாக நடித்தார். இந்நாடகம் யாழ்ப்பாணத்தின் பல பாகங்களிலும் மேடையேற்றப்பட்டது. குரும்பசிட்டி வளர்மதி சனசமூக நிலையம், சன்மார்க்க இளைஞர் மன்றம் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட இலட்சிய வேங்கை, குடும்பம் ஒருகோயில், நெஞ்சு பொறுக்குதில்லை போன்ற நாடகங்களிலும் முக்கிய பாத்திரங்களையேற்று நடித்தவர். 1965-காங்கேயன்சபதம், 1966- ஜீவமணி, 1967- சாதனைசோதனை, 1968- கோமகளும் குலமகளும், 1969- குருதட்சனை, அம்பையின் வஞ்சம் போன்ற பாடசாலை நாடகங்களில் நடித்துப் பெரும் புகழ் பெற்றவர்.; 2006-03-10 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.