“மடம்” என்பது துறவு வாழிடம் என்னும் நிலையிலேயே இந்தியா உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் “மடம்” என்பது “ஆசிரமம்” என்பதற்கு ஒப்பானதாகும். அதாவது சமண பௌத்த கிறிஸ்தவ சமயங்களில் மடம் என்பது துறவு வாழிடமாகவே பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் யாழ்ப்பாணத்தில் சைவசமயம் சார்ந்த அல்லது நம்பிக்கை சார்ந்த ஒரு பொது வெளியே மடங்கள.; இவை துறவுவாழிடம் எனும் அடிப்படையில் தோற்றிவையல்ல.
இவ்விடத்தில் ஆறமுகநாவலர் “மடம்” “சத்திரம்” என்னும் இரு பதங்களிற்குத் தரும் விளக்கத்தைப் பார்க்கலாம்.
“மடமாவது பெரியோர் தங்கியிருந்து கல்வி அறிவு ஒழுக்கம் சமயம் அனைத்தையும் வளர்ப்பதிற்குரிய இடம். மடத்திலே செபம், பூசை, தியானம், முதலியவையும் திருமுறைகள், வேதாகமங்களைப் படித்தல் படிப்பித்தலிற்கும், அதிதிகளிற்கு உணவு (அன்னம்) உடை கொடுப்பதற்குரிய இடமும், இதனை வழங்குவதற்கும் தயாரிப்பவர், ஆசிரியர், பெரியோர், அதிதிகள் தங்குவதற்கும் ஏற்ப விதிப்படி அமைக்கப்பட்ட இடமாகும்”;.
“சத்திரமாவது ஞானிகள் துறவிகள் முதலிய பெரியோர்களுக்கும் தொழில் செய்து சீவனஞ் செய்யச் சக்தியில்லாதவர்களாகிய குருடர் முடவர் வியாதியாளர், வயோதிபர், சிறுபிள்ளைகள் என்பவர்களும், வழிப்போக்கர்களும் தங்குவதற்கும் அன்னதானம் வழங்குவதற்குரிய இடமாகும்”.
யாழ்ப்பாணத்து மடங்கள் அறிவு, சமயம் என்பவற்றை வளர்க்கும் இடமாகவும் சமய நம்பிக்கையின் அடிப்படையில் எழுந்தனவாகவும் காணப்பட்ட அதேவேளை அவை சமூகத் தேவைகளையும் நிறைவு செய்தன. எனினும் துறவு வாழிடமாகப் பயன்யடுத்தப்படவேயில்லை என்பதல்ல. இந்தியாவுடனோ அல்லது பௌத்தம் கிறிஸ்தவம் போன்ற சமயங்களோடு ஓப்பிடுகையில் யாழ்ப்பாணத்து மடங்கள் துறவுவாழிடங்களாக உருவாகவில்லை என்பதே உண்மை.