Sunday, October 6

பூப்படைதல் தொடர்பான நம்பிக்கைகள்

0

வாழ்க்கைப் பருவமாற்றுச் சடங்குகளில்  பெண்ணைப் பொறுத்தவரையில் “பூப்பு| சிறப்பிடம் பெறுகின்றது. இவ்வகையில் பூப்புத் தொடர்பாகவும் யாழ்ப்பாண மக்களிடையே பல்வேறு நம்பிக்கைகள் நிலவி வருவதனைக் கண்டுகொள்ள முடிகின்றது. ஒரு பெண் குழந்தை தாய்மைக்குத் தகுதியானவளாக மாறும் நாள் பூப்படைதல் எனப்படும். யாழ்ப்பாணத்தில் பூப்படைதல் தொடர்பாக பல்வேறு சொற்பிரயோகங்கள் காணப்படுகின்றன. வயதுக்கு வருதல், பெரியவளாதல், சாமத்தியப்படல், பருவமடைதல் என பல பெயர்களில் கூறப்படுவதைக் காணலாம். யாழ்ப்பாணத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் பல்வேறு விதமான நம்பிக்கைகள் காணப்படுகின்றன.

ஒரு பெண் பூப்படைந்தவுடன் அதனை யாருக்கு முதலில் சொல்ல வேண்டும். யாருக்கு அதனைச் சொல்லக் கூடாது போன்ற நம்பிக்கைகள் இன்றும் நிலவுகின்றது. அவ்வகையில் தனது மகள் பூப்படைந்ததனைத் தாய் முதலில் பார்க்கவோ, அந்தச் செய்தியினைக் கேட்கவோ கூடாது என்ற நம்பிக்கை வலுவாக உள்ளது. அத்துடன் தனது பூப்பைத்தானே பார்க்கும் பெண்ணுக்கு அதனால் கெடுதல் வரும் என்ற நம்பிக்கையும் இன்று வழக்கில் உள்ளது.

     பெண் பூப்படைந்ததும் தாய் மாமனுக்கு அறிவிக்கும் வழமை காணப்பட்டது. தாய்மாமன் வந்து குப்பையில் இருத்தி தலையில் நீர் வார்த்ததைக் காணலாம். இதனை குப்பைத் தண்ணீர் வார்த்தல் எனக் கூறுவர். பெண் பூப்படைந்த பின் அணிந்த ஆடைகள் சவைத் தொழிலாளியிடம் கொடுக்கப்படும் பெண்ணின் அறையில் வேப்பிலையும் காம்புச் சத்தகமும் செருகிவிடப்படும்.

     இதன் உணர முடியாத நம்பிக்கைகளை நோக்கினால் தாய்மாமனுக்கு அறிவிப்பதன் நோக்கம் மைத்துனனைத் திருமணம் செய்யும் வழக்கம் அதிகமாக இருந்ததுடன் அதனை மாமனை அறிய வேண்டும் என நம்பியிருக்கலாம் என்னும் மாமியார் முதலில் தண்ணீர் ஊற்றுவதும் மரபாகக் காணப்பட்டது எனலாம்.

   பூப்படைந்த பெண்ணுக்கு இலகுவில் நோய்த்தொற்று ஏற்படாமலிருக்க வாயிலில் வேப்பிலை தொங்கவிட்டுள்ளனர். வேப்பிலை ஒரு கிருமி கொல்லியாகப் பயன்படுத்தப்பட்டதைக் காணலாம். இரும்பு வைத்திருந்ததன் நோக்கம் பேய் பிசாசு, பில்லி சூனியம் போன்ற தாக்கங்கள் ஏற்படாது இருப்பதற்காகும். இந்த நம்பிக்கைகளில் அறிவியல் ரீதியான தன்மைகள் இல்லாவிடினும் உளவியல் ரீதியான நம்பிக்கைகள் காணப்படுவதை நோக்கலாம்.

பூப்புச் சடங்குகள் செய்யும் முறையிலும் இடத்திற்கிடம் வேறுபாடுகள் உள்ளதைக் காணலாம். யாழ்ப்பாணத்தில் மாமியாருக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு சடங்கு நிகழ்த்தப்படும். இது தவிர பெண்ணின் வீட்டிலேயே சகல சடங்குகளும் இடம்பெறுவதைக் காணலாம். பூப்படைந்த நாள், நட்சத்திரம், மாதம், நேரம்; இவற்றினை வைத்து பலன் பார்க்கும் வழக்கம் யாழ்ப்பாண மக்களிடையே இன்றும் பரவலாக வழக்கில் உள்ளது. சிலர் இதனை வைத்து சாதகமும் எழுதுவதைக் காணலாம். இந்த நம்பிக்கையில் சில உண்மைத் தன்மைகள் உள்ளதை அவதானிக்கலாம். கிரகங்களின் கவர்ச்சி, கதிர்வீச்சு என்பவை இவற்றில் தாக்கம் செலுத்துவதைக் காணலாம். பெண்ணொருத்தி ஆடி மாதத்தில் பூப்படைவது அத்துணை விசேடமானதாகக் கருதப்படாததுடன் மாலைவேளை, மற்றும் ஞாயிறு, செவ்வாய் ஆகிய தினங்களில் பூப்படைவது சிறப்பற்றது என்ற கருத்தும் பரவலாக இம்மக்களிடையே வேரூன்றியுள்ளது.

ஒரு பெண் பூப்படைகின்ற போது குறித்த பெண் உறவுக்குள்ளே ஏழு பெண்கள் தொடர்ச்சியாக பூப்படைவார்கள் என்ற நம்பிக்கையும் நிலவுகின்றது. ~ஒரு கன்னி உடைச்சால் ஏழு கன்னி உடையும்| என்ற பழமொழி இது தொடர்பில் பிரயோகிக்கப்படுகின்றது. பூப்படைந்த பெண் குறித்த நேரத்தில் அணிந்திருந்த ஆடையினைப் பூப்படைய உள்ள பெண்ணொருத்திக்கு அணிவித்தால் அவளும் பூப்படைவாள் என்ற நம்பிக்கை இன்று பெரிதாகப் பின்பற்றப்படுவதில்லை. இதேவேளை எண்ணெய்ச்சட்டியை அடுப்பில் வைத்துச் சமையல் செய்து இறக்கியவுடன் சட்டியின் பின்புறத்தில் நெருப்புப் பொறிகள் நட்சத்திர வடிவில் அதிகமாகக் காணப்பட்டால், குறித்த உறவுக்குள் யாராவது ஒரு பிள்ளை பூப்படையும் என்ற நம்பிக்கை இன்றும் யாழ்ப்பாண மக்களிடையே நிலவுகின்றது. மேலும் பூப்படைந்த காலத்தில் குறித்த காலம் வரையே தனியே விலக்கி வைக்கும் வழக்கம் பரவலாக இன்றும் இங்கு பின்பற்றப்படுகின்றது. வீட்டின் எந்த ஒரு பகுதிக்கும் சரளமாகச் சென்று வருதல், கிணற்றில் நீர் அள்ளுதல், வெற்றிலை, துளசி, தேசிமரம் முதலானவற்றுக்கு அண்மையில் செல்லுதல், புழக்கத்திற்கென ஒதுக்கப்பட்ட பாத்திரங்களை விடுவித்து பிறபாத்திரங்களையோ, பிறவற்றையோ தீண்டுதல் முதலான பல்வேறு செயற்பாடுகளும் திட்டமிட்ட நிலையில் இன்றும்  தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த நம்பிக்கையின் உண்மைத் தன்மையானது தூய்மை, சுகாதாரம் போன்றவற்றுடன் தொடர்புடையது.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!