தமிழ்ப்பண்பாட்டில் உறைவிடம் என்பதற்கு அப்பால் வாழ்வின் அர்த்தமாக வீடு பொருள் தருகின்றது. விடு-அடிச்சொல்; விடுபட்டு இருப்பது ; கடமையிலிருந்து விடுபடல்,ஓய்வு;முதன் நிலை பிரிந்த தொழிற்பெயர் .வீடு பேறு:அறம்-பொருள்-இன்பம் – வீடு என்றவாறும் பொருள் விரியும்.
வீடு என்பது சடப்பொருள்களின் கலவையாய் முடிவதில்லை .அது வாழும் சமூகத்தின் இருப்பிடம் வாழ்வுக்கோலங்களின் வடிவமைப்பு பொருள்சார் சமூக உண்மை; மனித படிமலர்ச்சியின் –நாகரிகத்தின் குறிகாட்டி எனும் விரிந்த பொருண்மையை தன்னகத்தே கொண்டது.
வீடுகளின் படலைக்கு மேலாக கூரை எழுப்பி அதன் நிழலில் தூர இடங்களில் இருந்து வருபவர்கள் இளைப்பாறும் வகையில் அமைக்கப்பட்ட திண்ணைகள் அல்லது குந்துகளும்கவனத்துக்குரியன. இங்கு மண் பாத்திரங்களில் நீரும் வைக்கப்படுவதுண்டு. இவை நம் மக்களின் விருந்தோம்பல் பண்பை எடுத்துக்காட்டும் எச்சங்களாக கருதப்படுகின்ற அதேவேளையில் இவற்றினை ‘ஒதுக்கப்பட்ட மக்கள்’ தம் வீடுகளுக்கு வருவதைத் தடுப்பதற்கான ஏற்பாடாக நோக்கும் கருத்துகளும் பதிவு பெற்றுள்ளன.