ஒரு பெண்ணின் கணவன் இறந்து விட்டால் முன்பு போலவே அப்பெண்ணின் தாலி களையப்பட்டு சடங்குகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆரம்ப காலங்களில் மரணச் சடங்கில் ஒப்பாரி பாடும் முறை மரபாகக் காணப்பட்டிருந்தது. ஒப்பாரியை ஒப்பு – ஆரி என்று பிரித்து அழுகைப்பாட்டு என தமிழ்ப் பேரகராதி குறிப்பிட்டுள்ளது. (தமிழ் பேரகராதி 1982 : 594). ஒப்பாரி பாடுதல் ஆனது இறந்தவர்களின் ஆவி ஒப்பாரிகளால் சாந்தி அடைவதாகவும் ஒப்பாரி பாடாவிட்டால் ஆவிகள் துன்புறுவதாகவும் நம்பப்படுகின்றது. இவ் ஒப்பாரி பாடல் முறை இன்று கிராமங்களில் முதியவர்களால் மட்டுமே மிக அரிதாகப் பாடப்படுகின்றது.