யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை வட்டச் சடங்குகளில் இறுதியாக அமைவது இறப்புச்சடங்காகும். இறப்பு ஏற்படும் விதம், அதன் தன்மைகள் பற்றியும் பல்வேறு விதமான தொட்டுணர முடியாத நம்பிக்கைகள் காணப்படுகின்றன. அதிக விளைச்சல், அதிக மழை ஏற்படின் அக்கிராமத்தில் இறப்புக்கள் ஏற்பட வாய்ப்புண்டு எனும் நம்பிக்கையுண்டு இதனை “சாவிளைச்சல்” என்பர். ஒருவர் வயதிற்கு அதிகமாக வளர்ந்து இறந்தால் அதனை சாவளர்த்தி என்பர். எண்ணெய் போத்தல் உடைதல், கண்ணாடி உடைதல், சுவாமிப்படங்கள், சிலைகள் என்பன உடைதல், நாய்கள்; ஊழையிடல், உச்சியில் பல்லி வீழ்தல், பொங்கல் பானை சரிதல், அண்டங்காகம் மற்றும் சாக்குருவி அலறுதல், ஒற்றைப் பிராமணன், கனவில் திருமண நிகழ்வு என்பன இறப்பைக் குறிக்கும் முதலானவை இறப்பை முன் உணர்த்துபவையாக நம்பப்படுகின்றன.
இறப்பதற்கு கஷ்டப்படும் ஒருவருக்கு குறிப்பாக “சேடம் இழுக்கும்” நிலையிலுள்ள ஒருவருக்கு அவர் தன்னுடைய வாழ்நாளில் அனுபவிக்காத ஆசைகள் எவையும் உள்ளதா என ஆராய்ந்து மண், பொன் முதலானவற்றை கரைத்து பருக்கும் வழக்கம் இன்றும் நிலவுகிறது.
இறந்த உடல் தெற்கு நோக்கி வைக்கப்பட்டு உடலின் தலைப்பகுதியில் உப்புப் பொட்டலம் வைக்கப்பட்டு உடலின் கீழ்ப்பகுதியில் நீர் கொண்ட பாத்திரம் வைக்கப்படும். தலைப்பகுதியில் குத்துவிளக்கு அணையாது ஒளிரவிடப்படும். இந்த நம்பிக்கைகளில் காணப்படும் உண்மைகளை நோக்கினால் உப்புப் பொருட்கள் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டவை இதனால் இறந்தவரிலிருந்து வெளியேறும் கிருமிகளை உப்பு அழித்துவிடும் எனும் நம்பிக்கையாகும். நீரானது அபசகுணங்களை விலக்குவது என்ற நம்பிக்கை உண்டு. இதனால் நீர் வைக்கப்படுகின்றது.
இறந்தவரின் வீட்டு முற்றத்திலே பந்தல் அமைத்து, வெள்ளை கட்டி, மாவிலை, தோரணம் கட்டி, வீட்டு வாயிலில் மொந்தன் வாழைக்குலைகள் கட்டப்படும். இதில் மாவிலைகள் வெளித்திரும்பியவாறு இலைகளிலே செருகியும் தோரண வெட்டுக்கள் தலை கீழானதாகவும் அலங்கரிக்கப்படுகின்றது. மேலும் தட்டைப் பந்தல் அமைப்பதும் பச்சை ஓலைகளினால் வேய்வதும் அபரக்கிரியை நிகழ்த்துவதற்கான விசேட குறியாக உள்ளது. ஆனால் இன்று தட்டைப் பந்தல் அமைத்து பச்சை ஓலை கட்டுவதற்குப் பதிலாக தகரப் பந்தல்களே மரணச் சடங்கின் போது போடப்படுகின்றன.
யாழ்ப்பாணச் சமூகத்தில் சனிப்பிணம் தனிப்போகாது எனும் நம்பிக்கை உள்ளது. சனிக்கிழமைகளில் வீட்டிலிருந்து பிரேதம் எடுப்பதில்லை அவ்வாறு எடுத்தால் இன்னொருவர் இறப்பார் என்ற நம்பிக்கை உண்டு. அதேபோல் பஞ்சமியில் ஒருவர் இறந்தால் இன்னொருவர் இறப்பார் என்ற நம்பிக்கை உண்டு. இதனால் பிணத்துடன் முட்டை, கமுகம்பிள்ளை, கோழி என்பவற்றை எடுத்துச் செல்வர். அச்சுவினி, பரணி, கார்த்திகை முதலிய நட்சத்திரங்களில் இறப்பவர்களிற்கு வீட்டில் பஞ்சமிக் கொட்டில் அமைத்து உயிர்பிரிய விடும் வழக்கம் முன்பு இருந்தது. இது தற்போது வெகுவாகக் குறைந்து விட்டது. சில இடங்களில் இம்முறை காணப்படுகிறது. பிணம் எடுக்கப்பட்டவுடன் இக் கொட்டிலும் எரிக்கப்படும். இதனால் ஏனைய இறப்புகள் தடுக்கப்படும் எனும் நம்பிக்கை காணப்பட்டது.
ஒருவர் இறந்தபின் அவர் எம்மதத்தைச் சார்ந்தவரோ அம் மதத்தின் விதிகளுக்கு அமைய அந்த ஆன்மாவைத் தாங்கி நின்ற உடலை அந்த ஆன்மா சாந்தி அடைவதற்காக கிரியைகள் செய்யப் பட்டுத் தகனம் செய்யப்படுகின்றன அல்லது அடக்கம் செய்யப்படுகின்றன. இக்கிரியைகள் இடத்திற்கு இடம் வித்தியாசமான முறைகளில் செய்யப்படுகின்றன. சாதாரணமாக ஒரு பொதுமகன் இறந்து விட்டால். அவர் உடம்பை (பூதவுடலை) தகனம் செய்வார்கள். அவர் சமய தீட்சை பெற்று ஆசார சீலராக வாழ்ந்திருந்தால் “சமாதியும்” இருத்துவார்கள். ஒருவர் இறக்கும் போது ஆன்மாவானது உடம்பில் உள்ள ஒன்பது வாசல்களில் ஏதாவது ஒரு வாசல் மூலம் பிரிவதாக கூறப்பெறுகின்றது. இதனை இறந்தவுடன் ஒருவரின் ஏதோ ஒரு வாயில் ஈரமாக இருப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். இறந்ததன் பின் செய்யப்படும் சடங்குகள் (இறுதிக்கிரியை) அபரக்கிரியை என அழைக்கப்படுகின்றது.
சாதாரணமாக பொதுமகன் ஒருவனின் ஈமைக் கிரியைகளை சைவக் குருமாரே செய்து வருகின்றனர். ஆனால் பிராமணருடைய இறுதிக் கிரியைகளை மாத்திரம் பிராமணரக் குருமாரே செய்கின்றார்கள். இறுதிக் கிரியையின் போது இறந்தவரின் நெருங்கிய இரத்த உறவினர்கள் கடமைகளைச் (கிரியைகளை) செய்வது வழக்கம். இறந்தவர் தந்தையாயின் அவரின் மூத்தமகனும், தாயாயின் இளையமகனும், சில சந்தர்ப்பங்களில் எல்லா ஆண்மக்களும் இணைந்து கடமைகளைச் செய்வார்கள். உடலுக்கு செய்யும் இறுதிக்கிரியைகள் மூலம் அந்த ஆன்மாவானது அந்த உடலைத் தாங்கி நின்ற காலத்தில் தெரியாது செய்த தீவினைகள் நீங்கப் பெற்று சாந்தி அடைவதாக ஐதீகம். தற்காலத்தில் ஆண்பிள்ளைகள் இல்லாத சில குடும்பங்களில் பெண்களும் கடமைகள் செய்து உறவினர் அல்லது இரத்த உறவு உள்ள ஒருவர் மூலம் தகனக் கிரியையை நிறைவேற்றுகின்றனர்.
அபரக்கிரியை செய்யும் போது மறுதலையாக இடதுபக்கம் உயர்த்தி செய்யப்படுகின்றன. கடமை செய்வோருக்கு பூநூல் வலது பக்கத் தோழில் அணிவிக்கப் பெறுகின்றது. ஆனால் தற்பை வழக்கம் போல் வலது மோதிர விரலில் அணிகின்றனர். அபரக்கிரியையின் போது 3 மாவிலைகள் ஆகவும் இருக்கும். ஆன்ம ஈடேற்றத்திற்காக் சூர்ணோத்சவம் (மரணச்சடங்கு), தகனம், அஸ்தி சஞ்சயனம் (காடாற்று), அந்தியேட்டி, பாசாணபூசை, உருத்திர பலி, நவசிராத்தம், ஏகோத்திர விருத்தி சம்கிதை, இடபதானம், ஏகோதிட்டம், மாசியம், சோதகும்பசிராத்தம், சுவர்க்கமாதேயம், வைதரணிகோதானம், சபிண்டீகரணம் (வீட்டுக்கிரியை) சிராத்தம் முதலிய கிரியைகள் நடைபெறுகின்றன.
மரணச் சடங்கு தொடக்கம் பாஷாணபூசை வரையுள்ள கிரியைகளை சைவ குருமாரும்; சபிண்டீகரணம் சிராத்தம் முதலிய கிரியைகளை பிராமண குருமாரும் செய்து வைக்கிறார்கள்.
இதிலே தகனத்துக்கு முன்னர் இறந்தவரின் உடலுக்கு விசேட அந்தியேட்டி, நிருவாண அந்தியேட்டி ஆகியவை இடம்பெறும். மாமிச உணவு உண்ணாத, சமய தீட்சை பெற்றவரின் உடலில் (பூதவுடலில்) சமய அந்தியேட்டி தகனம் செய்ய முன் செய்யப்படுவதே வழக்கம். இந்த கிரியைகளை செய்யும் கடமைக்காரர் இவை பற்றிய முழுமையான விளக்கத்தை தெரிந்து கொண்டு செய்தால் தான் முழுமையான நன்மை கிடைக்கும்.
மற்றைய சமயத்தவர்கள் (இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள்) இறுதிக் கிரியையின் போது இறந்தவரின் பூதவுடலை அவர்களுடைய ஆலயங்களுக்குள் எடுத்துச் சென்று பிரார்தனை செய்கிறார்கள் பிரார்த்தனை நிறைவு பெற்றபின் பூதவுடலை நல்லடக்கம் செய்வார்கள். ஆனால் இந்துகள் இறந்தவர்களுடைய பூதவுடலை “ஆசூசம்” எனக் கூறி ஆலயத்தினுள் அனுமதிப்பதில்லை. அதனால் கிரியை செய்யப் பெறும் இடத்தை ஆலயத்தைப் போல் தூய்மையானதாக்கி அங்கேயே பூசைகளையும், பிரார்த்தனைகளையும் செய்கின்றார்கள். மரணக்கிரியை நடைபெற இருக்கும் இடத்தில் (முற்றத்தில்) பந்தல் அமைத்து வெள்ளை கட்டி, மாவிலை, தோரணம், பூக்களால் அலங்கரித்து அந்த இடத்தினை சாணத்தினால் (சுமங்கலிப் பெண்) மெழுகுவார்கள்.
சைவ குரு மரணக் கிரியைகளை ஆரம்பிக்கும் போது முதலில்; அங்கு உருத்திரகும்பமும் (நடுவில்), அதனை சுற்றி அட்ட திக்கு பாலகர்களுக்கான கும்பங்களும், மேற்குப் பக்கத்தில் புண்ணியாகவாசன கும்பமும், கிழக்குப் பக்கத்தில் உரல், உலக்கை, மணி, மயானத்துக்கு கொண்டு செல்லும் மண்குடக் கும்பம் வைத்து பூசைகளை ஆரம்பிப்பார். கடமை செய்பவர் மொட்டை வழித்து, தோய்ந்து (முழுகிய) பின் புத்தாடை தரித்து ஆசாரசீலராக விபூதி தரித்திருத்தல் வேண்டும். அவர் அன்றைய தினம் நோன்பு இருத்தல் அவசியம். கிரியைகள் செய்வதற்கு கும்பங்கள் வைத்து கும்ப பூஜைகள் ஆரம்பமானதும், பூதவுடலை ஒரு பூநூல்மூலம் கும்பங்களுடன் தொடர்பு படுத்தி அதனை அக்கினியுடன் சங்கமிக்கச் செய்யப் பெறுகின்றது. கும்ப பூசைகள் நிறைவு பெற்றதும் அக்கினி கோமம் வளர்க்கப் பெறுகின்றது. அப்போது பூதவுடல் (குளிப்பாட்டல்) அபிஷேகம் செய்யப்பெறும். வீட்டின் தென் புறத்தில் தெற்கு நோக்கியவாறு பூதவுடலை இருத்தியோ அல்லது தலை தெற்குப் பக்கம் இருக்கும் வண்ணம் கிடைத்தியோ அபிஷேகம் செய்வார்கள்.
அதன் பின்னர் கடமை செய்பவர் அரப்பு, எண்ணெய் முதலியவற்றை சிரசில் வைக்க வேண்டும். பின்னர்; அரிசிமா ஒரு பாத்திரத்தில் நீரில் கரைத்து அபிழ்ஷேகம் செய்யப் பெறும், இது போல் மஞ்சள் மா, அபிஷேகக் கூட்டும் ஒரு பாத்திரத்தில் நீரில் கரைத்து அபிஷெகம் செய்யப் பெறும். அதன் பின் பால், தயிர், இளநீர் முதலியவற்றால் அபிஷேகம் செய்வார்கள். கடமை செய்பவர் மேற்கு முகமாக நின்று கீழிருந்து (கால்மாட்டில் ஆரம்பித்து) மேலாக (தலைவரை) அவரின் புறங்கையினால் வேறு ஒருவர் உதவியுடன் இந்த அபிஷேகம் செய்வார். பூதவுடல் பழுதடைந்த அல்லது அபிஷேகம் செய்ய முடியாத நிலையில் இருந்தால் அபிஷேகத் திரவியங்களை பூதவுடல் மீது தெளித்து விடுவார்கள். சில ஊர்களில் கிரியை செய்யும் சைவக் குருவே அபிஷேகத்தை நடத்துவார்.
அதன் பின்னர்; கும்ப அபிஷேகம் நடைபெறும். பன்னீர் போன்ற வாசனைப் பொருட்கள் முதலியவற்றை சிரசிலே சாத்த வேண்டும். பின்னர் பூதவுடலை அலங்கரித்து மண்டபத்துக்கு கொண்டு வந்து தெற்கு பக்கமாக தலைப்பகுதி இருக்கக் கூடியதாக கட்டிலை வைப்பார்கள். அதன் பின்; திருநீறு அணியப் பெற்று பூசைகள் செய்வார்கள். கடமை செய்பவரே பூதவுடலுக்கு தூப தீபம் காட்டி பூசைகளைச் செய்வார். அதன் பின் அறுகு, மஞ்சள் பொடி போன்றனவற்றை உரலில் இட்டு மணியடித்து பத மந்திரம் சொல்லி மூன்று, அல்லது எட்டுமுறை இடித்த பின்பு, திருப்பொற்சுண்ணம் இருபது பாடல்களும் பாடி, ஒவ்வொரு பாடலுக்கும்; ஒருமுறை அல்லது மூன்று முறை சுண்ணமிடிப்பார்கள். சுண்ணமிடித்து சுண்ணப்பொடியும் சேர்த்து பூதவுடலுக்கு அபிஷேகம் செய்யப் பெறும். அனேகமாக கண்ணீல் அப்பி விடுவது வழக்கம்.
கணவன் மனைவிக்கு முதல் இறக்க நேரிட்டால்; பூதவுடல் குளிப்பாட்டும் போது மனைவியையும் குளிப்பாட்டி, வெள்ளைச் சீலை அணிவிக்கப் பெறும். இறுதிக் கிரியையின் இறுதிக்கட்டமாக தானம் வழங்குதல் நடைபெறும். அப்போது ஊர் ஆலயங்களுக்கு இறந்தவரின் பெயரால் தானம் வழங்கப் பெறும். அதனை அடுத்து மனைவி; கணவனுக்கு இறுதியாக மலர் அஞ்சலி செய்வார். அதன் போது மனைவி மலர்களைக் கொண்டு மூன்றுமுறை பூதவுடலை இடம் வந்து மலர்களை பூதவுடலுக்கு சமர்ப்பித்து வீழ்ந்து வணங்குவார். இச் சந்தற்பத்தில் கணவனால் கட்டப் பெற்ற புனிதமான தாலியானது ஒரு சுமங்கலிப் பெண்ணால் கழற்றப் பெற்று கணவனின் நெஞ்சில் வைக்கப் பெற்று இறுதிக் கிரியைகள் நிறைவு செய்வார். சுண்ணம் இடிக்கும் பொழுது இறந்தவரின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் உட்பட உரித்துடைய சந்ததிக்காரர்கள் பந்தம் பிடிப்பார்கள்.
அத்துடன் உரிமைக்கார பெண்களும் மலர் சார்த்தி இறுதி அஞ்சலியை செலுத்துவர். பின்னர் பெண்கள் வாய்க்கரிசி இட்ட பின், பூதவுடலின் வாய்,கை,,கால்,விரல்கள் ஆகியவற்றைக் கட்டி பூதவுடலை வஸ்திரத்தினால் மூடி பாடையில் வைத்துக் கால் முன்பக்கமாக இருக்கும் படி வைப்பார்கள். அந்த சமயத்திலும் உறவினர்களான பெண்கள் மூன்றுமுறை பாடையை இடப்பக்கமாக மரடித்துச் சுற்றிய பின் ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்து ஒப்பாரி வைத்து அழுவார்கள்.
அதன் பின் பறை மேளம், சங்கு வாத்தியங்களுடன் பூதவுடலை மயானத்துக்கு எடுத்துச் செல்வார்கள். கொள்ளி வைக்க இருப்பவர் (கடமை செய்பவர்) சந்தணக்கட்டையில் மூட்டப்பெற்ற நெருப்புச் சட்டியுடன் இடது தோழில் மண்பானை கும்பத்துடன் பூத உடலுக்கு முன்னே செல்ல (சில சந்தற்பங்களில் ஊரில் உள்ள புரோகித பாபர் கொள்ளிச் சட்டியை எடுத்துச் செல்வார்). ஆண் உரிமையாளர்கள் பிரேதத்தின் பின் புறம் செல்வார்கள்.
மயானத்தை அடைந்ததும் மயானத்தில் விறகுகள் அடுக்கி தயார் செய்யப் பெற்ற சிதையை இடப் பக்கமாக ஒருமுறை அல்லது மூன்று முறை சுற்றிய பின் பாடையை இறக்கி பூதவுடலை தலைப் பகுதி தெற்கும் திசையில் இருக்கும் படி கிடத்தல் வேண்டும். அனேகமாக சிதை அடுக்கும் போது காற்று வீசும் திசையைத்தான் கவனிப்பார்கள். அதனால் சரியாக வடக்குத் தெற்காக சிதை அமையாது போகலாம்.
சிதையில் பூதவுடல் வைக்கப் பெற்றதும் பூதவுலில் கட்டிய கட்டுகள் எல்லாம் அவிழ்கப் பெறும், அத்துடன் பூதவுடல் ஆணுடையதாயின் அரை நாண் (அறுநாக்கொடியும்) அவிழ்கப் பெற்று அவர் பிறக்கும் போது இருந்தது போல் சுதந்திரமாக்கப் பெறும். ஆனால் மானத்தைக் காப்பதற்காக அவருக்கு அணிவித்த உடைகள் கழற்றுப் பட மாட்டாது. அதன் பின் உரிமைகாரர் வாய்க்கரிசி இடுவார்கள். பின் கடமை செய்பவர் இடது தோளில் மட்குடக்கும்பதைத் தாங்கியவாறு சிதையை இடப்பக்கமாக சுற்றி வந்து குடத்தை தலைப்பக்கத்தில் வைத்து கும்ப நீர், அரிசி, பவுண் அல்லது காசுடன் வாய்க்கரிசியிடுவார்.
அதன்பின் பூதவுடலின்மேல் விறகுகட்டைகள் அடுக்கப்பெறும். அப்போது நெஞ்சுக்கு நேராக ஒருபெரிய கட்டையை வைப்பார்கள். அதை நெஞ்சாங்கட்டை என்று அழைப்பது வழக்கம். பூதவுடல் நெருப்பில் எரியும்போது முன்பக்கமாக வளைந்து கொள்ளும். அதனைத் தடுப்பதற்காகவே மொத்தமான நெஞ்சாங்கட்டையை வைக்கிறார்கள்.
அதன் பின்; முன்போல மண்பானைக் கும்பத்தினை இடதுபுற தோளில் வைத்துக் கொண்டு சந்தணக் கொள்ளிக் கட்டையை பின்பக்கமாக ஏந்திய வண்ணம் கடமை செய்பவர் மீண்டும் இடப்புறமாக மூன்று முறை சுற்றி வருவார். ஒவ்வொரு சுற்றின் போதும் ஒருவர் (தலைமுடி அலங்கரிப்பாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர்) மண்பானைக் கும்பத்தில் கத்தி நுனியினால் துவாரமிட்டு; கும்ப நீரினால் சிதைக்கு அபிழ்ஷேகம் செய்வார்கள். மூன்றாவது சுற்று முடிவில் கடமை செய்பவர் சிதையின் தலைப்பாகத்தில் தெற்கு முகமாக (சிதையின் எதிர்ப் பக்கம் பார்த்த வண்ணம்) சிதையப் பார்க்காது நின்று பிரணவ மந்திரத்தை சொல்லிக் கொண்டு சந்தணக் கட்டைக் கொள்ளியை சிதையில் (பிரேதத்தின் சிரசில்) வைத்து குடத்தை முன்புறமாக உடையும்படி போட்டு விடுவார். பின்பு அவர் கால்மாட்டிற்குச் சென்று பவித்திரம்(தற்பை), பூனூல் ஆகியவற்றை கழற்றி சிதையில் போட்டு வணங்கிய பின் திரும்பி பாராமல் செல்வது வழக்கம்.
அனேகமாக கடமை செய்தவர் சிறியவராயின் அவரிடம் ஒரு இரும்பாலான ஆயுதம், அல்லது திறப்பைக் கொடுப்பார்கள். இரும்பு கையில் இருக்கும் போது பேய், பிசாசு தொடராது என்ற நம்பிக்கை. அனேகமாக சுடலை, அல்லது சுடுகாட்டில் சுடலை மடம் அமைந்திருக்கும். வந்தவர்கள் எல்லோரும் மடத்திற்கு சென்று அதில் ஒரு பெரியவர் தலைமை தாங்கி இக் கிரியையில் சம்பந்தப்பட்ட புரோகிதகாரருக்கு உரிய சம்பழத்தை வழங்குவார். பூதவுடலை எரிப்பதற்காக நியமிக்கப் பெற்றோர். பூதவுடல் எரியும் வரை மயானத்தில் நின்று எரிப்பார்கள். மற்றையோர் தத்தமது வீடுகளுக்குச் சென்று விடுவார்கள்.
கடமை செய்தவரும், உரிமைகாரர்களும் இறுதிக் கிரியை நடந்த வீட்டிற்குச் செல்வார்கள். வீட்டிற்குச் சென்றதும் படலையடியில் கால் கழுவி தண்ணீர் தெளித்தபின் உள்ளே நுளைய வேண்டும். அதன் பின்பு வீடு சுத்தம் செய்யப் பெற்று பட்டினிக் கஞ்சி காச்சுவார்கள். பட்டினிக் கஞ்சி என்பது முருங்கை இலையும் கொஞ்ச அரிசியும் போட்டு காச்சும் கஞ்சி. இறந்தவரின் துக்கத்தினால் பட்டினியாக இருந்த உறவினர்கள், பட்டினியை முடிவுக்கு கொண்டு வருவதற்காக இக் கஞ்சியைக் குடிப்பது வழக்கத்தில் உள்ளது. இதனை உரிமைக்கஞ்சி என்றும் அழைப்பர். பூதவுடல்தகனம் செய்யும் வரை இறந்தவரின் வீட்டில் அடுப்பு மூட்டமாட்ர்கள். தகனம் செய்வதற்கு இரண்டு மூன்று நாட்கள் செல்லுமாயின் அயல் உறவீனர்கள் பட்டினிச்சாப்பாடு கொடுப்பது வழக்கம்.
வீட்டில் இறந்தவருடைய படம் இருந்தால் அதனை வைத்து குத்து விளக்கேற்றி, இவ் கஞ்சியையும் படைத்து அதன் பின் மற்றையோருக்கு பரிமாறுவதும் வழக்கம். அதன் பின் அவ் வீட்டில் உள்ளோர் சாப்பிடும் உணவையும், பாக்கு வெற்றிலை, தேத்தண்ணி, போன்ற பானங்களையும் படைத்து, அதன் பின் உண்பார்கள். சில சந்தற்பங்களில் வசதி உள்ளோர் ஒரு இளநீர்ரை வெட்டிப் படைப்பார்கள். சில சமயங்களில் படம் வைத்து, விளக்கேற்றி, இளநீர், சாப்பாடு படைப்பதை அந்தியேட்டிவரை செய்வார்கள். புலம் பெயர் நாடுகளில் வாழ்வோர் தகனம் செய்த தினம், முதலாம் எட்டு, இரண்டாம் எட்டு, 15ஆம் நாள், அந்தியேட்டி போன்ற விஷட தினங்களில் மட்டும் படம் வைத்து, விளக்கேற்றி, இளநீர், சாப்பாடு படைப்பதை செய்கின்றனர்.
இருப்பினும் மரண வீட்டில் நடைபெறும் நிகழ்வுகளான சைவக் குருமார்களைக் கொண்டு கிரியைகள் செய்தல் மற்றும் கோடி போடுதல், குளிப்பாட்டுதல், வாய்க்கரிசி போடுதல், பால் வார்த்தல், தீப்பந்தம் பிடித்தல் போன்றன இன்று வரை எம் மக்களால் எவ்வித மாற்றங்களுமின்றி பாரம்பரியமாக பின்பற்றப்படுகின்றது.


Post Views: 306