யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை வட்டச் சடங்குகளில் இறுதியாக அமைவது இறப்புச்சடங்காகும். இறப்பு ஏற்படும் விதம், அதன் தன்மைகள் பற்றியும் பல்வேறு விதமான தொட்டுணர முடியாத நம்பிக்கைகள் காணப்படுகின்றன. அதிக விளைச்சல், அதிக மழை ஏற்படின் அக்கிராமத்தில் இறப்புக்கள் ஏற்பட வாய்ப்புண்டு எனும் நம்பிக்கையுண்டு இதனை “சாவிளைச்சல்” என்பர். ஒருவர் வயதிற்கு அதிகமாக வளர்ந்து இறந்தால் அதனை சாவளர்த்தி என்பர். எண்ணெய் போத்தல் உடைதல், கண்ணாடி உடைதல், சுவாமிப்படங்கள், சிலைகள் என்பன உடைதல், நாய்கள்; ஊழையிடல், உச்சியில் பல்லி வீழ்தல், பொங்கல் பானை சரிதல், அண்டங்காகம் மற்றும் சாக்குருவி அலறுதல், ஒற்றைப் பிராமணன், கனவில் திருமண நிகழ்வு என்பன இறப்பைக் குறிக்கும் முதலானவை இறப்பை முன் உணர்த்துபவையாக நம்பப்படுகின்றன.
இறப்பதற்கு கஷ்டப்படும் ஒருவருக்கு குறிப்பாக “சேடம் இழுக்கும்” நிலையிலுள்ள ஒருவருக்கு அவர் தன்னுடைய வாழ்நாளில் அனுபவிக்காத ஆசைகள் எவையும் உள்ளதா என ஆராய்ந்து மண், பொன் முதலானவற்றை கரைத்து பருக்கும் வழக்கம் இன்றும் நிலவுகிறது.
இறந்த உடல் தெற்கு நோக்கி வைக்கப்பட்டு உடலின் தலைப்பகுதியில் உப்புப் பொட்டலம் வைக்கப்பட்டு உடலின் கீழ்ப்பகுதியில் நீர் கொண்ட பாத்திரம் வைக்கப்படும். தலைப்பகுதியில் குத்துவிளக்கு அணையாது ஒளிரவிடப்படும். இந்த நம்பிக்கைகளில் காணப்படும் உண்மைகளை நோக்கினால் உப்புப் பொருட்கள் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டவை இதனால் இறந்தவரிலிருந்து வெளியேறும் கிருமிகளை உப்பு அழித்துவிடும் எனும் நம்பிக்கையாகும். நீரானது அபசகுணங்களை விலக்குவது என்ற நம்பிக்கை உண்டு. இதனால் நீர் வைக்கப்படுகின்றது.
இறந்தவரின் வீட்டு முற்றத்திலே பந்தல் அமைத்து, வெள்ளை கட்டி, மாவிலை, தோரணம் கட்டி, வீட்டு வாயிலில் மொந்தன் வாழைக்குலைகள் கட்டப்படும். இதில் மாவிலைகள் வெளித்திரும்பியவாறு இலைகளிலே செருகியும் தோரண வெட்டுக்கள் தலை கீழானதாகவும் அலங்கரிக்கப்படுகின்றது. மேலும் தட்டைப் பந்தல் அமைப்பதும் பச்சை ஓலைகளினால் வேய்வதும் அபரக்கிரியை நிகழ்த்துவதற்கான விசேட குறியாக உள்ளது. ஆனால் இன்று தட்டைப் பந்தல் அமைத்து பச்சை ஓலை கட்டுவதற்குப் பதிலாக தகரப் பந்தல்களே மரணச் சடங்கின் போது போடப்படுகின்றன.
யாழ்ப்பாணச் சமூகத்தில் சனிப்பிணம் தனிப்போகாது எனும் நம்பிக்கை உள்ளது. சனிக்கிழமைகளில் வீட்டிலிருந்து பிரேதம் எடுப்பதில்லை அவ்வாறு எடுத்தால் இன்னொருவர் இறப்பார் என்ற நம்பிக்கை உண்டு. அதேபோல் பஞ்சமியில் ஒருவர் இறந்தால் இன்னொருவர் இறப்பார் என்ற நம்பிக்கை உண்டு. இதனால் பிணத்துடன் முட்டை, கமுகம்பிள்ளை, கோழி என்பவற்றை எடுத்துச் செல்வர். அச்சுவினி, பரணி, கார்த்திகை முதலிய நட்சத்திரங்களில் இறப்பவர்களிற்கு வீட்டில் பஞ்சமிக் கொட்டில் அமைத்து உயிர்பிரிய விடும் வழக்கம் முன்பு இருந்தது. இது தற்போது வெகுவாகக் குறைந்து விட்டது. சில இடங்களில் இம்முறை காணப்படுகிறது. பிணம் எடுக்கப்பட்டவுடன் இக் கொட்டிலும் எரிக்கப்படும். இதனால் ஏனைய இறப்புகள் தடுக்கப்படும் எனும் நம்பிக்கை காணப்பட்டது.
இருப்பினும் மரண வீட்டில் நடைபெறும் நிகழ்வுகளான சைவக் குருமார்களைக் கொண்டு கிரியைகள் செய்தல் மற்றும் கோடி போடுதல், குளிப்பாட்டுதல், வாய்க்கரிசி போடுதல், பால் வார்த்தல், தீப்பந்தம் பிடித்தல் போன்றன இன்று வரை எம் மக்களால் எவ்வித மாற்றங்களுமின்றி பாரம்பரியமாக பின்பற்றப்படுகின்றது.