Saturday, April 5

கதிரேசர்பிள்ளை, செல்லையா

0

 

1921.10.30 ஆம் நாள் அளவெட்டி வடக்கு என்ற இடத்தில் பிறந்த இவர். தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியின் புகழ்பூத்த ஆசிரியராக இருந்து பல அறிஞர்களை உருவாக்கியுள்ளார். நாடக நடிகராகவும், நெறியாளராகவும் எழுத்தாளராகவும், கவிஞராகவும் சொற்பொழிவாளராகவும், புராணபடன விற்பன்னராகவும் எனப் பல்துறைத் திறமைகள் வாய்க்கப்பெற்ற இவர் 1939 ஆம் ஆண்டு கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயிற்சி மாணவராக இருந்தவர். இக் காலத்தில் விரிவுரையாளராக இருந்த குருகவி வே.மகாலிங்கசிவம் அவர்களிடம் பயிற்சி பெற்றதுடன், கவிதைத்துறையில் ஆற்றல்மிகு கவிஞனாக மிளிர்வதற்குரிய தூண்டுதல்களை யும் பெற்று புகழ்பெற்ற கவிஞராக பின்னாளில் கலைப் பணியாற்றியவர். இலங்கையின் மலையகம் டிக்கோயா தோட்டப் பாடசாலையில் 1943-1946 வரையும், அட்டன் ஸ்ரீபாதக் கல்லூரியில் 19046-1950 வரையும்,கொழும்பு விவேகானந்தாக் கல்லூரியில் 1950-1951 வரையும், தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியில் 1951-1980 வரையும், புங்குடுதீவு மகாவித்தியாலயத்தில் 1981 இல் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியில் ஆசிரியராகப் பணிபுரிந்து நல்ல பல அறுவடைகளை கல்வியுலகிற்கு வழங்கியவர். 5 நாடகங்களை உள்ளடக்கிய தொகுப்பு நூலான பாரதம் தந்த பரிசு (1980) கதிரேசன் பாலர் கதைப் பாடல்கள் (1988) போன்ற பல நூல்களையும் வெளியிட்டவர். 1969ஆம் ஆண்டு ஆறுமுகநாவலர் சபையால் நடத்தப்பட்ட கவிதைப் போட்டியில் முதலாம் பரிசினையும், பாரதம்தந்த பரிசு நாடத்தொகுப்பு நூலுக்கான சாகித்திய மண்டலப் பரிசினையும், 1986இல் யாழ் இலக்கியவட்ட இலக்கியப் பேரவைப் பரிசினையும் பெற்றவர். இவரால் அகில இலங்கை கலைக்கழக நாடகப் போட்டியில் 1965 ஆம் ஆண்டு முதல் 1969 ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகள் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி சார்பாக அரங்கேற்றப்பட்ட நாடகங்கள் தேசியமட்டம் வரை முதலாமிடத்தினைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. தனது தாயின் நினைவாக தாய் என்னும் நூலை 1977 இல் வெளியிட்டவர். பக்திநல மேம்பாடுள்ளவராதலாற் பல தெய்வங்கள் மீது பதிகங்கள், இரட்டைமணிமாலை, திருப்பள்ளி எழுச்சி, திருத்தலவெண்பா, ஊஞ்சல் முதலான நூல்களை எழுதியுள்ளார்.பன்னாலை வருத்தலம் கற்பக விநாயகர் இரட்டைமணிமாலை (1974), தவளக்கிரி முத்துமாரி அம்மை திருப்பள்ளி எழுச்சி, வீரகத்தி விநாயகர் திருத்தலவெண்பா (1983) என்பன சிலவாகும். இவரால் எழுதப்பட்ட கவிதைகள் அனைத்தும் கதிரேசன் கவிதைகள் என்ற பெயரில் நூலுருப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!