Saturday, June 22

பிறப்புடன் தொடர்புடைய நம்பிக்கைகள்

0

இந்தக் குழந்தை பிறப்புத் தொடர்பாகவும் கர்ப்பமுற்றிருப்பது தொடர்பாகவும் பல்வேறு வகையான நம்பிக்கைகள் காணப்படுகின்றன. அவ்வகையில் பெண்ணொருத்தி கர்ப்பமாகி இருக்கும் போது எவரிடத்து அதிகமாகக் கண்விழிக்கிறாளோ (முழிவிசேடம்) அவர்களைப் போலவே பிள்ளையும் பிறக்கும் என்பது ஒரு விதமான நம்பிக்கையாக உள்ளது. இதனால் கர்ப்பிணிப் பெண்கள் உறங்கும் படுக்கை அறைகளிலே அழகான குழந்தைகளின் படங்களை மாட்டி அவற்றிலே விழித்துக் கொள்ளுமாறு பார்த்துக் கொள்ளும் வழக்கம் காணப்படுகின்றது. கர்ப்பமுற்ற தாயானவள் மகிழ்ச்சியாக இருந்தால் குழந்தை ஆரோக்கியமாக வளரும் என்பது ஆரம்ப காலத்தில் காணப்பட்ட நம்பிக்கை இன்று அறிவியலுடன் தொடர்புபட்டதாக காணப்படுகின்றது. தற்போது வைத்திய நிபுணர்கள் இசை கேட்டல், மகிழ்ச்சியாக இருத்தல், தூய்மையாக இருத்தல் போன்றவற்றினை பரிந்துரைப்பதைக் காணலாம்.

கர்ப்பமுற்றுள்ள பெண்ணின் வயிற்றுப் பருமனைக் கொண்டு பிறக்கவுள்ள குழந்தை ஆணா, பெண்ணா என எதிர்வு கூறும் வழக்கம் இன்றும் கிராம முதியவர்களிடையே உள்ளது. வயிற்றுப் பக்கம் வீங்கி கீழ்வயிறாக பெருத்திருந்தால் பெண்குழந்தை என்றும் கர்ப்பமுள்ள பெண் மிகவும் வாடி (அழகிழந்து) மேல்வயிறாக இருந்தால் அவருக்கு ஆண்குழந்தையே பிறக்கும் எனவும் கணித்து கொள்கின்றனர்.

பிறக்கும் குழந்தையின் நட்சத்திரப் பலன் படியே அக்குழந்தைக்கும் அதன் குடும்ப உறுப்பினர்களுக்கும் நன்மைகள், தீமைகள் நிகழும் என்பதும் வலுவான நம்பிக்கையாக இன்றும் உள்ளது. ஆண்கள் மூல நட்சத்திரத்தில் பிறப்பது நல்லது என்ற அபிப்பிராயமும் பெண் இந்நட்சத்திரத்தில் பிறப்பது விசேடமில்லை என்ற அபிப்பிராயமும் வழக்கில் உள்ளது. ஆண் மூலம் அரசாளும் பெண் மூலம் நிர்மூலம் ஆகும் என்ற பழமொழி இந்நம்பிக்கையினை வெளிப்படுத்தி நிற்கின்றன.

மேலும் பிறந்த குழந்தையின் சாதகமும் பெற்றோரின் சாதகங்களும் ஒன்றுடன் ஒன்று பொருந்தி வராத இடத்து குறித்த குழந்தையை அவர்களுக்கு இஷ்ட கோயிலில் வைத்து விற்று வாங்குதல் செய்வதன் மூலம் அவ்வாறான பொருத்தமின்மையைப் போக்கிக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை இன்றும் வலுவாக வேரூன்றியுள்ளது. இச்செயற்பாட்டின் மூலம் குழந்தையானது புதிய ஒரு பிறப்பை எடுப்பதாக மக்களால் நம்பப்படுகிறது.

ஆண்குழந்தை தந்தையின் சாயலில் இருந்தால் தந்தையின் ஆயுள் குறைந்துவிடும் என்ற நம்பிக்கையும் உள்ளது. அத்துடன் சித்திரை மாதத்தில் ஆண் குழந்தை பிறப்பதும் அவ்வளவு விசேடமானதாகக் கருதப்படுவதில்லை. அவ்வாறு பிறப்பின் குறித்த குடும்பத்தில் குடும்பச் சண்டைகள், தொடர்ச்சியான சண்டைகள், துன்பங்கள் ஏற்படும் என யாழ்ப்பாண மக்கள் பலரும் இன்றும் நம்புகின்றனர். இதேவேளை குடும்பத்தில் ஐந்தாவதாகப் பெண் குழந்தை பிறந்தால் அதனை இராசியான ஒரு விடயமாகப் பார்க்கும் நம்பிக்கை இன்றும் உள்ளது. அஞ்சாங்கால் பெண் கெஞ்சினாலும் கிடைக்காது என்பது இது தொடர்பில் வழங்கி வரும் பழமொழியாக உள்ளது.

குழந்தை பிறந்து 31 நாள்கள்வரை வெளியில் கொண்டு செல்லக் கூடாது எனக் கூறப்படுகிறது. இதனை துடக்குக் கழித்தல் என்பர். யாழ்ப்பாணச் சமூகத்தை பொறுத்தவரை இதனை தூய்மையற்ற ஒரு நிலையாகவே கருதுவர். இதன் நம்பிக்கை யாதெனில் குழந்தை பிறந்தவுடன் மிக வேகமாகக் தொற்று நோய்த் தாக்கம் ஏற்படுவதுடன் சூழற்காரணிகளும் பாதிக்கும் என்பதாகும். இது அறிவியல் ரீதியான ஒன்றாகும். 31ம் நாள் வீட்டைச் சுத்தப்படுத்தி மஞ்சள் தெளித்து வாசலில் நிறைகுடம் வைத்து பின்னர் குழந்தைக்கு முடி வழித்து வீட்டினுள்ளே சகலரும் புத்தாடை அணிவர். அத்துடன் படுக்கை விரிப்புக்கள், சமையல் பாத்திரங்கள் என்பன சுத்தம் செய்யப்படும். பின்னர் வேதியரை அழைத்து அவர் முன்னிலையில் துடக்கு கழித்தல் இடம்பெறும். இதன் போது உறவினர்கள், அயலவர்கள் அழைத்து சைவ உணவோ, மாமிச உணவோ அளித்து தம் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கின்றனர். அத்தோடு இத்தினத்தன்று குழந்தைகளுக்கு ஆபரணங்களும் அணிவிக்கப்படுகின்றன. ஆண் குழந்தை எனின் அரைஞாண் கொடியும் பெண் குழந்தை எனின் அரை மூடியும் அணிவிக்கப்படும். ஆனால் இன்று இத்தகைய ஆபரணங்கள் அணிவது அருகிவிட்டது. காப்பு, சங்கிலி, கைச்சங்கிலி, மோதிரம் போன்ற ஆபரணங்களே இன்று பெருமளவிற்கு அணிவிக்கப்படுகின்றது. மேலும் இத்தினத்திலிருந்து குழந்தைக்கு கறுத்த நிறத்திலான பொட்டும் செய்து நெற்றியில் இடும் வழக்கம் இன்றும் உண்டு. குழந்தையின் நெற்றியில் மட்டுமன்றி கன்னத்தின் ஒரு பக்கத்திலும் சிறிய அடையாளமிடுகின்றனர். இவ்வாறு கறுப்புப் பொட்டு இருப்பதனால் கண் திருஷ்டி கழியும் என நம்புகின்றனர்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!