Monday, October 28

தெய்வேந்திரம், இராஜசிங்கம் (வைத்திய கலாநிதி )

0

 

1939-01-26 ஆம் நாள் யாழ்ப்பாணம் தெல்லிப்பளை என்னுமிடத்தில் பிறந்தவர். இளமைப் பராயத்திலே மிகச் சிறந்த அறிவாற்றல்மிக்க இவர் தனது ஆரம்ப, இடைநிலைக் கல்வியை தெல்லிப்பளை யூனியன் கல்லூரியிலும் உயர் கல்வியை கொழும்பு சென்.ஜோசப் கல்லூரியிலும் மேற்கொண்டார்.1957 இல் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்குத் தெரிவாகி 1962 இல் வைத்தியராக வெளியேறினார். 1962- 1963 வரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உள்ளகப் பயிற்சியை முடித்துக்கொண்டு 1963 இல் குருநாகல் வைத்தியசாலையில் தனது மருத்துவப் பணியை ஆரம்பித்தார்.1963-1965 வரை குருநாகல் வைத்தியசாலையில் சிரேஸ்ட மருத்துவ அதிகாரியாகப் பணியாற்றி 1965-1967 காலப்பகுதியில் யாழ் போதனா வைத்திய சாலையில் பணியாற்றினார். 1968 இல் திருகோணமலை பொது வைத்தியசாலையில் மருத்துவராகப் பணியாற்றிய இவர் 1969-1970 வரை ஊர்காவற்றுறை மாவட்ட வைத்திய அதிகாரியாகவும் பணியாற்றினார். 1971 ஆம் ஆண்டு தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரியாகக் கடமையேற்று 1973 வரை பணியாற்றி உலக சுகாதார ஸ்தாபனத்தின் புலமைப்பரிசிலைப் பெற்று சமூக மருத்துவத்துறையில் ஆ.ளுஉ பட்டத்தை நிறைவு செய்தார். இதன்பின்னர் இலங்கையின் பல மாவட்டங்களிலும் சுகாதார வைத்திய அதிகாரியாகப் பணியாற்றி மீண்டும் தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரியாகப் பொறுப்பேற்று பன்னிரண்டு ஆண்டுகள் இங்கு கடமையாற்றிய காலத்தில் துணை மருத்துவ சேவையாளர்களைப் பயிற்றுவித்து அவர்களை ஆளுமையுடைய சுகாதாரப் பணியாளர்களாக உருவாக்கிய பெருமை இவரையே சாரும். இக்கட்டான கால கட்டங்களில் இவர் எடுத்த தீர்மானங்கள் வடபுலம் சார் சுகாதார சேவைகள் சீராகக் கிடைப்பதற்கு உந்துதலாயின. யாழ்ப்பாண மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரியாகப் பணியாற்றியபோது யுத்த நெருக்கடியால் மருந்துப் பொருள்களுக்கான பெருந்தட்டுப்பாடு நிலவியது. இச் சந்தர்ப்பத்தில் அவர் உலக சுகாதார ஸ்தாபனம், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், யுனிசெவ், சிறுவர் பாதுகாப்பு நிதியம், றெட்பானா போன்ற சர்வதேச தொண்டு நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு மருந்துப் பொருள்களைப் பெற்றுக் கொள்வதற்காக அவர் ஆற்றிய பணிகள் மகத்தானவை. சுகாதாரப் பணியாளர்களின் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் வகையில் கிராமிய சுகாதார உதவியாளர்கள், குடும்பநல உதவியாளர்கள், சுகாதார தரிசிப்பாளர்கள் போன்ற பதவிகளை உருவாக்கி உரிய பயிற்சிகளைக் கொடுத்து அவர்கள் மூலமாக வடபகுதி முழுமையாகவும் சுகாதாரப் பணிகளை முன்னெடுத்தவர். மிகவும் இக்கட்டான காலத்தில் யாழ்ப்பாணப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராகப் பதவியேற்று மிகப்பெரும் சேவையாற்றியவர். தனது ஓய்வின் பின்னர் திருநெல்வேலியில் அமைந்திருக்கும் நேர்சிங்ஹோம் தனியார் வைத்தியசாலையின் இயக்குநர் திரு எஸ்.பி.சாமி அவர்களின் வேண்டுதலுக்கமைவாகவும் தனது மருத்துவப்பணி மக்களுக்கு தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்ற நோக்கிலும் அந்த வைத்தியசாலையின் பணிப்பாளர் பதவியைப் பொறுப்பேற்று இயக்கியதுடன் இன்று புதிய கட்டடத்தொகுதியில் நவீன வசதிகள் கொண்ட வைத்தியசாலையாக மிளிர்வதற்கு மூலகாரணமாக இருந்தவர். சென்றல் நேர்சிங்ஹோமில் குழந்தைகளின் மருத்துவ சேவைக்காக இவரிடம் வந்து செல்லும் பெற்றோர்கள் “சீமான் பார்த்தாலே போதும் பிள்ளையின் நோய் தீர்ந்து விடும்” என்று கூறிச்செல்வதுதான் அவரது மருத்துவ சேவையின் உச்சம் எனலாம். யாழ்ப்பாண மண்ணில் நடமாடிய பல்கலைக்கழகம் என்று போற்றப்பட்ட வைத்திய கலாநிதி இ.தெய்வேந்திரன் அவர்கள் 2016-03-23 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!