1918-01-06 ஆம் நாள் யாழ்ப்பாணம்- சுண்டுக்குழி என்னும் இடத்தில் பிறந்தவர். கொளும்புத் துறையில் இயங்கிய ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் பாடரீதியான பொறுப்பாசிரியராகக் கடமையாற்றியவர். கணித பாடத்தினைக் கற்பிப்பதில் வல்லவரான இவர் முதலாம் வகுப்பிலிருந்து 10 ஆம் வகுப்பு வரை கணிதம் பயிலும் மாணவர்களுக்காக படிமுறைக் கணிதம் என்ற நூலை ஆக்கி வெளியிட்டார். இந்நூலானது அக்காலத்தில் கல்வி அமைச்சினால் பாடநூலாக விதந்துரைக் கப்பட்டு மாணவர்களின் பாடநூலில் சேர்க்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. நாட்டுக்கூத்துப் பாடல்களைப் பாடவல்ல புலவரான வெ.மரியாம்பிள்ளைப் புலவரை தாய்வழி மாமனாகக் கொண்டவர். இதன் காரணமாகவோ என்னவோ இவர் கலைத்துறையில் அதிகம் நாட்டமுடைய வராக வாழ்ந்தார். கலைமீது கொண்ட பற்றுக் காரணமாக தனது ஆசிரியத் தொழிலை 1958 ஆம் ஆண்டில் நிறுத்திவிட்டு யாழ்ப்பாணம் பஸ்ரியன் வீதியில் ஆசீர்வாதம் அச்சகம் என்ற ஸ்தாபனத்தை உருவாக்கி எண்ணற்ற பாடநூல்களையும் தமிழ் சார்ந்த அறிவு நூல்களையும் நாடகத்துறையில், கூத்து நூல்களை எழுதியும் பதிப்பித்தும் சாதனை படைத்தார். வடமாகாண அச்சகத்தார் சங்கச் செயலாளராகப் பணியாற்றியஇவர் கலைஇலக்கிய அறிவியற்றுறையில் விவேகி என்ற சஞ்சிகையை ஆரம்பித்து தொடர்ச்சியாக முப்பது வருடங்கள் வெளியிட்டுள்ளார். கலை, இலக்கியத்திற்காக யேசுவின் திருவாய் மொழிகள், சோதிடத்திறவு கோல், திருமணப் பரிசு ஆகிய நூல்களையும், சேக்ஸ்பியரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட “As you like it” என்னும் ஆங்கில நாடகத்தின் சாயலாக தமிழில் மனம்போல் மங்கல்யம் என்னும் பெயரில் நாட்டுக்கூத்தாகப் பாடித் தனது அச்சகத்தின் மூலம் வெளியிட்டார். மேலும் தனது அச்சகத்தின் பதிப்பாக விஜயமனோகரன், மரியதாசன், தேவசகாயம்பிள்ளை,எஸ்த்தாக்கியர் ஆகிய தென்மோடிக் கூத்து நூல்களைப் பதிப்பித்து கத்தோலிக்க கூத்து நூல்களின் பாதுகாவலனாக மேற்கிளம்புகின்றார். யாழ்ப்பாணம் நவரச நாட்டுக்கூத்துக் கலாமன்றத்தின் ஸ்தாபகராக விளங்கிய இவர் கத்தோலிக்க தேவாலயங்களில் சிறந்த தொண்டனாக வாழ்ந்தார். 1977-11-02 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.