யாழ்ப்பாண மாவட்டம், வேலணையில் 1874-06-08 ஆம் நாள் பிறந்தவர். கல்வியிலும் விளையாட்டி லும் சிறந்து விளங்கிய துரைசுவாமி கல்கத்தா சென்று பி. சி. ராய், சேர் ஜகதீஸ் சந்திரபோசு ஆகிய பேராசிரியர்களிடம் கணிதம், அறிவியல் பயின்று பட்டம் பெற்றார். அதன்பின்னர் சட்டம் பயின்று 1902 ஆம் ஆண்டில் வழக்கறிஞரானார். சேர் பொன்னம்பலம் இராமநாதனுடன் சேர்ந்து அரசியலில் ஈடுபட்டார். 1921 ஆம் ஆண்டில் திருத்தப்பட்ட இலங்கை சட்டவாக்கப் பேரவைக்கு இடம்பெற்ற தேர்தலில் யாழ்ப்பாணத்தில் போட்டியிட்டு வென்று முழு வடமாகாணத்திற்கும் பிரதிநிதியானார். இலங்கைக்கு கனடா, அவுஸ்திரேலியா முதலிய நாடுகளின் ஆங்கிலப்பதம் எனப்படும் டொமினியன் தகுதி வழங்கப்படவேண்டும் எனவும், இலங்கையின் வரவு செலவுத் திட்டத்தைச் சட்டவாக்கப் பேரவையே கட்டுப்படுத்த வேண்டும் எனவும் அவர் பேரவையில் கிளர்ச்சியில் இறங்கினார். இவை வழங்கப்படாமையினால் அரசாங்க சபையை அவர் ஒன்றியொதுக் கல் செய்தார். யாழ்ப்பாண இளைஞர் காங்கிரசு ஆரம்பித்து ஒத்துழையாமை இயக்கத்தைக் கொண்டு நடத்தினார். 1936 ஆண்டில் இரண்டாவது அரசாங்க சபைக்கான சபை முதல்வர் தேர்வுக்குப் பிரான்சிஸ் டி சில்வா, சி. பந்துவந்துடாவை, வைத்திலிங்கம் துரைசுவாமி ஆகியோரின் பெயர்கள் பிரேரிக்கப் பட்டு வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது, துரைசுவாமி சபை முதல்வராகத் தெரிவு செய்யப்பட்டார். அரசாங்க சபை அங்கத்துவராக இருந்த காலத்தில் ஆறாம் ஜோர்ஜ் மன்னரின் முடிசூட்டு விழா 1936 ஆம் ஆண்டில் இடம்பெற்றது. இந்த வைபவத்துக்கு இலங்கைப் பேராளர் சபைத் தலைவராகத் துரைசுவாமி தெரிவு செய்யப்பட்டு இங்கிலாந்து சென்றார். அவ்வைபவத்தில் துரைசுவாமிக்கு ஜோர்ஜ் மன்னர் நைட் பட்டம் வழங்கிக் கௌரவித்தார். துரைசுவாமி சைவவிருத்திச் சங்கத்திலும், சைவபரிபாலன சபையிலும் தலைவராய் இருந்துள்ளார். யாழ். இந்துக் கல்லூரி முதலாம் கலாசாலை களின் பொது முகாமையாளராகவும் இருந்து சேவைபுரிந்துள்ளார். துரைசுவாமி யோகசுவாமிகளின் அருளைப்பெற்றவர். 1966.04.12 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.