1960.06.18 ஆம் நாள் யாழ்ப்பாணம், காரைநகரில் பிறந்த மகேஸ்வரன் யாழ். பரியோவான் கல்லூரியில் தனது உயர் கல்வியைக் கற்றார். அரசியலில் இணையும் முன் இவர் வர்த்தகத் தொழிலில் ஈடுபட்டிருந்தார். பெரும்பான்மை சிங்கள அரசியல் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்திருந்தாலும் ஈழத்தமிழர்களின் நலன்களுக்கெதிரான கட்சியின் நிலைப்பாடுகளை எதிர்த்து வந்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் அரசு இருந்தபோது யாழ். மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தலில் வெற்றியீட்டி இந்து கலாசார அமைச்சர் பதவியையும் மகேஸ்வரன் வகித்திருந்தார். 2004 ஆம் ஆண்டு கொழும்பில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது இவர்மீது நடத்தப்பட்ட கொலைத் தாக்குதலில் காயங்களுடன் உயிர் தப்பினார். புத்தாண்டு தினமாகிய ஜனவரி 1, 2008 இல் முற்பகல் 9:00 மணியளவில் மகேஸ்வரன் தனது குடும்பத்தினருடன் மெய்ப்பாதுகாவலர்கள் சகிதம் கொழும்பு கொட்டாஞ்சேனையில் உள்ள பொன்னம்பலவாணேஸ்வரர் கோயிலுக்குச் சென்று வழிபாட்டில் கலந்து கொண்டு திரும்பும் போது முற்பகல் 9.55 மணியளவில் அங்கு நின்ற ஆயுததாரியால் சரமாரியாகச்சுடப்பட்டார்;. உடனடியாக கொழும்பு தேசிய மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். சிகிச்சை பலனின்றி முற்பகல் 10.15 மணியளவில் வாழ்வுலகை நீந்து நிலையுலகம் சென்றார்.