Thursday, July 25

மகேசுவர சர்மா, இரத்தினசபாபதி ஐயர்

0

கோவை மகேசன் என அழைக்கப்படும் இரத்தினசபாபதி ஐயர் மகேஸ்வர சர்மா அவர்கள் 1938.03.22 ஆம் நாள் யாழ்ப்பாணம் கோப்பாய் என்னுமிடத்தில் பிறந்தவர். தனது ஆரம்பக் கல்வியை கோப்பாய் சைவத் தமிழ் கலவன் பாடசாலையிலும் (நாவலர் பாடசாலை), மேற்படிப்பை கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரியிலும் கற்றார். சிரேஷ்ட தராதர (கலைப்பிரிவு) சோதனையில் சிறப்புத் திறமைகளுடன் சித்தியடைந்தார். சிலகாலம் யாழ்ப்பாணம் கச்சேரியில் தேர்தல் திணைக்களத்தில் பணியாற்றினார். இளவயதிலேயே தமிழ்ப்பற்று மிகுந்தவராகக் காணப்பட்ட இவர் பேரறிஞர் அண்ணாவின் எழுத்துக்களால் கவரப்பட்டார். தற்காலிக வேலை மூலம் கிடைத்த சொற்ப தொகையில் பெரும் பகுதியை புத்தகங்கள், பத்திரிகைகள் வாங்கவே செலவிட்டார். ஈழத் தமிழ் பத்திரிகையாளரும், அரசியல்வாதியும், எழுத்தாளருமான இவர் சுதந்திரன் வாரப் பத்திரிகை மற்றும் சுடர் மாத இதழ் ஆகியவற்றின் ஆசிரியராகப் பணியாற்றியவர். மகேஸ்வரசர்மா என்ற பெயரை மகேசன் எனவும், கோப்பாயைக் குறிக்க கோவை என்றும் சேர்த்துத் தனது பெயரைக் கோவை மகேசன் என எழுதினார். இவரது இளமைக்காலத்தில் இலங்கையில் தமிழ் அரசியல் உருவாகத் தொடங்கியது. தமிழ் பற்று மிக்க இவர் தமிழ் அரசியலால் கவரப்பட்டார். தந்தை செல்வா உருவாக்கிய இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் தன்னை இணைத்துக் கொண்டார். 1956 ஆம் ஆண்டு கோப்பாய் தேர்தல் தொகுதியில் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட கு. வன்னியசிங்கத் துக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்தார். கொழும்பில் தந்தை செல்வா நடத்திவந்த சுதந்திரன் பத்திரிகையில் 1962 இல் சேர்ந்து 1965 இல் உதவி ஆசிரியராகவும், பின்னர் 1968இல் அதன் ஆசிரியராகவும் ஏற்றம் பெற்றார். அக்காலத்தில் விடுதலைப் போராட்டம் பற்றிய அவரின் எழுத்துக்கள் பாரதியின் பாடல்களைப் போல அதி தீவிர நடையில் அமைந்திருந்தன. கோவை மகேசனின் அரசியல் ஈடுபாடு எழுத்துத்துறை வாயிலாகவே அமைந்தது. அத்துடன் ஸ்ரீ எதிர்ப்புப் போராட்டம் போன்ற போராட்டங்களில் நேரடியாக ஈடுபட்டார். 1992-07-04 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!